சின்னக் கலைவாணர் பட்டத்தைவிட எதுவும் பெரிசில்ல!

– நேர்காணலில் நெகிழ்ந்த விவேக்

அஞ்சலி:
*
“இன்னைக்குச் செத்தா நாளைக்குப் பால்”

– நடிகர் விவேக் திரைப்படங்களில் நுழைந்தபோது, பாப்புலராக்கிய வசனம் இது.
சட்டென்று நிகழ்ந்திருக்கிறது நடிகர் விவேக்கின் மரணம்.

முந்திய தினம் வரை தடுப்பூசி போடுவதை ஊக்கப்படுத்தி வந்தவர் மறுநாள் வீட்டில் சுயநினைவு இழந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நினைவு திரும்பாமலேயே உயிரிழந்திருக்கிறார்.

தன்னைத் தனிமைப்படுத்திக் கொள்ளாத இயல்பு கொண்டவர் விவேக்.
சில ஆண்டுகளுகளுக்கு முன்னால் அவருடைய இளம் வயது மகன் எதிர்பாராதவிதமாக மறைந்தபோது, அதிலிருந்து மீண்டு வருவதற்குக் குறிப்பிட்ட காலம் ஆனது.

பொதுவாக ஊடகங்களுடன் நல்லுறவு வைத்திருந்த அவரைச் சுலபமாகச் சந்தித்து விட முடியும். தனி ஒளிவட்டங்கள் இல்லாமல் – கேஷூவலாகப் பேசிக் கொண்டிருப்பார். எப்போதும் பேச்சில் நகைச்சுவையும், முகத்தில் புன்னகையும் இழையோடும்.
சில சந்தர்ப்பங்களில் அவரைச் சந்தித்திருக்கிறேன்.

மதுரையில் உள்ள அமெரிக்கன் கல்லூரியில் படித்த அனுபவம் பற்றிய பதிவுக்காக அவரைப் பார்க்கப் போனபோது, சுமார் மூன்று மணி நேரம் மதுரையைப் பற்றிய பரவசத்தை அள்ளித்தெளித்து, அமர்க்களப்படுத்திவிட்டார்.

மதுரை வட்டார மொழி அவருக்குத் தண்ணி பட்ட பாடு. விதவிதமாகப் பேசிக்காட்டுவார். பேச்சுக்கேற்றபடி அவருடைய முகத்தில் ஏகப்பட்ட ‘கொனஷ்டைகள்’ தாண்டவமாடும்.

தீப்பொறி ஆறுமுகத்தின் பேச்சுக்கு மிகப்பெரிய ரசிகர். அவருடைய பொறி பறக்கும் வசனத்தைக் குரலைக் கீழே மேலே ஏற்றிப் பேசிக் காட்டியபோது, பருத்திப்பாலைக் குடித்தபடி மதுரைத் தெருக்களில் உட்காந்திருந்த மாதிரியான உணர்வு.

அதிலும் மதுரையிலுள்ள சினிமாத் தியேட்டர்களுக்குப் போய் டிக்கெட் எடுக்கப் படாதபாடு பட்ட அனுபவங்களை அள்ளிவிட்டது தனி அனுபவம்.

“மதுரையில் அப்போ ‘இம்ப்ரீயல்’ன்னு ஒரு தியேட்டர். உள்ளே நுழைஞ்சாலே அப்படியொரு ‘கப்’ அடிக்கும். மூக்கைக் கழட்டி வைச்சுட்டு வந்தா நல்லாயிருக்குமேன்னு தோணும்.. என்ன செய்றது? டிக்கெட் விலை குறைவுங்கிறதனாலே ஏதோ தியாகிகளைப் போல, எல்லாத்தையும் சும்மா கடாசிட்டு நுழைவோம் பாருங்க..

தியேட்டரில் சுற்றிலும் ஒரே நாத்தம். மாடி பால்கனிப் பகுதியிலிருந்து யாரோ ‘யூரின்’ இருந்து விடுவாங்கே போலிருக்கு.. அப்பப்போ அதோட ஈரம் நம்ம மேலே தெறிக்கும். பெருந்தன்மையோட அதைத் தாங்கிக்கிட்டு படம் பார்ப்போம்.
ஃபேன் இருப்பதே தெரியாது. அப்படித்தான் இருக்கும். அதனால தியேட்டரை விட்டு வெளியே வர்றப்போ, வியர்வையும், சிறுநீர் வாடையும் சேர்ந்து வருவோம்.

வெளியே வந்து சட்டையைக் கழட்டி பிழிஞ்சு ஒரு உதறு உதறித் தோளில் போட்டுட்டு, ஏதோ களை எடுத்துட்டு வர்ற விவசாயி மாதிரி தியேட்டரை விட்டு வர்ற சொகம் இருக்கே.. அது தனி சொகம்ங்க.. இதை எல்லாம் நீங்க உங்க பத்திரிகையிலே போட முடியாது. போட மாட்டீங்க.. ஆமா இதெல்லாம் லேசுப்பட்ட அனுபவமா? சொல்லுங்க”

சொல்லி முடித்துவிட்டு, சட்டையை ஒரு பிழி பிழிகிற மாதிரி பாவனையுடன் நடித்துக் காட்டிய, நக்கலாய்ப் பேசிய அந்தக் கணங்கள் நினைவிலிருக்கின்றன.
2009 வாக்கில் அவருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்ட நேரம்.

அவருக்கு வாழ்த்துத் தெரிவிக்கப் போனபோது முகமெல்லாம் பூரிப்பு. கொஞ்சம் வருத்தம்.

“எனக்கெல்லாம் முன்னாடி நம்ம சினிமாவிலே எத்தனை காமெடி நடிகர்ங்க இருந்து எவ்ளோ வேலை பார்த்திருக்காங்க.. கலைவாணர் துவங்கி தங்கவேலு, நாகேஷ் சார்ன்னு எத்தனை பேர்? அவர்களுக்கு என்ன கௌரவம் கிடைச்சது சார்?

கலைவாணர் செஞ்சதை ஒப்பிட்டா நான் ரொம்பவும் சின்னப் பையன். எனக்கு பத்மஸ்ரீ விருது கொடுத்தது பெரிசில்லை.. அதை விட ‘சின்னக் கலைவாணர்’ன்னு எனக்கொரு பட்டம் கொடுத்திருக்காங்க.. பாருங்க.. அதைவிட பெரிசு எதுவுமில்லை சார்” –

கண் கலங்கியபடி சொன்ன விவேக்கை முன்பு எடுத்த பேட்டி கீழே:
******

முப்பது வருடங்களுக்கு முன்பு. மதுரை அமெரிக்கன் கல்லூரியில் ‘அட்மிஷன்’ நேரம். மாணவர்கள் மொய்த்துக் கொண்டிருந்தார்கள். கல்லூரி முதல்வர் அறையில் நல்ல கூட்டம். பி.யு.சி-க்கான அட்மிஷன் நடந்து கொண்டிருந்தது.

“ஏம்ப்பா.. தம்பி… அட்மிஷனுக்கு உங்க அண்ணனைத் தான் கூட்டிட்டு வரணும்.. நீ வந்திருக்கியே..”

“இல்லைங்க.. எனக்குத்தான் அட்மிஷன் வேணும். நான்தான் ஸ்டூடண்ட்” என்றதும் சொன்ன மாணவரை முதல்வர் உட்படப் பலரும் ஆச்சரியமாகப் பார்த்தார்கள்.

காரணம் அந்த மாணவர் போட்டிருந்தது அரைக்கால் ‘டிரவுசர்’. ஒல்லியான உருவத்துடன் அம்மாவுடன் நின்றிருந்த அந்த மாணவர் விவேகானந்தன்.
பிரபலமானதும் அந்தப் பெயர் சுருங்கி ‘விவேக்’.

கல்லூரியைப் பற்றிப் பேச ஆரம்பித்ததும் விவேக்கின் முகத்தில் தனிப் பூரிப்பு. வாய் நிறைந்த சிரிப்பு.

“காலேஜ்ன்னா பேண்ட் போட்டுட்டுப் போகணும்கிறது தெரியாத அளவுக்குத் தான் அப்போ இருந்திருக்கேன். அப்பவே இளமை மாறாத முகத்தோடு தான் இருந்திருக்கேன். பாருங்க.. அப்புறம் காலேஜுக்கு வெளியே இருந்த டெய்லர் கடையில் பேண்ட் தைக்கக் கொடுத்தேன்” சொல்லிவிட்டு “எப்படி இருந்த நான்…” பாணியில் புன்னகைக்கிறார்.

“மதுரை டி.வி.எஸ் ஸ்கூலில் அதுவரை தமிழ் மீடியத்தில் படிச்சிக்கிட்டிருந்தேன். அண்ணா நகரில் வீடு. அங்கிருந்து சைக்கிளில் காலேஜுக்குப் போவேன். நார்ட்டன்னு பெரிய சைக்கிள். அதில் குரங்குப் பெடல் போட்டுத்தான் ஓட்டுவேன். அதற்குக் காத்தடிக்க அப்பா 2 ரூபாய் கொடுப்பார்.. அதை வைத்துத்தான் ஒரு வாரம் முழுக்க செலவழிக்கணும்.

அமெரிக்கன் கல்லூரியின் தோற்றம், அங்கிருந்த பேராசிரியர்கள், அவர்கள் பேசிய ஆங்கிலம் – எல்லாத்தையும் பார்த்தப்போ முதலில் பயமாகக் கூட இருந்துச்சு.. பல மாணவர்கள் ஆங்கிலத்தில் தான் பேசுவாங்க.. தமிழ் மீடியத்தில் படித்துவிட்டு வந்த எனக்கு முதலில் உதறலா இருந்துச்சு. அதுக்குப் பிறகு கொஞ்சம் கொஞ்சமா ஆங்கிலப் புத்தகங்கள் படிக்க ஆரம்பித்தேன்.

அப்படித்தான் ஆங்கிலத்தை ‘டெவலப்’ பண்ணிக்கிட்டேன்.. அங்கே அருமையான லைப்ரரி. மேற்கத்திய இசை காதில் வந்து விழும். கிறிஸ்டோபர்ன்னு ஒருத்தர் அருமையா பியானோ வாசிப்பார். பேராசிரியர் வசந்தன் அப்பவே ஆங்கில நாடகங்கள் போட்டுக்கிட்டிருந்தார். அந்தக் கல்லூரிச்சூழல் எனக்குப் பிடிச்சிருந்தது.

பசங்க அப்போ என்னை “விவேக்”ன்னு தான் கூப்பிடுவாங்க. எங்க வீட்டில் என்னை “ராஜ்”ன்னு கூப்பிடுவாங்க.

பிறகு இயக்குநர் பாலசந்தர் தான் என் வாலை ஓட்ட நறுக்கி ‘விவேக்’ன்னு அறிமுகப்படுத்தினார். ‘பப்ளிக் ஸ்பீக்கிங்’ன்னு ஒரு சப்ஜெக்ட். அதற்குப் பாடம் எடுக்க வந்தவர் யார் தெரியுமா? பேராசிரியர் சாலமன் பாப்பையா. அவருடைய வகுப்புக்கு என்று தனிக் கூட்டம் இருக்கும்.

போர் அடிக்கிற ஆசிரியர்கள் வகுப்பு என்றால், வகுப்பில் இருக்கிற பெரிய ஜன்னல் வழியா ஒரு குதி குதிச்சு வெளியே வந்துடுவோம். அப்போ எம்.எஸ்.சி படிக்க பொண்ணுங்க வருவாங்க.. அவங்களை அப்படியே வேடிக்கை பார்த்துட்டு வந்துருவோம். அப்புறம் அதே கல்லூரியில் பி.காம். சேர்ந்தேன்.

பேராசிரியர் சுத்தானந்தா தான் என்னுடைய வாழ்க்கையின் திசையை மாற்றியவர்ன்னு சொல்வேன். வருஷா வருஷம் கல்லூரியில் நாடகம் போடுறப்போ அவரை ‘இன்சார்ஜ்’ ஆகப் போடுவார்கள்.

கடினமான மனிதர். என்ன நடிச்சுக் காட்டினாலும் லேசில் சிரிக்க மாட்டார். காமெடி நடிகனுக்கு எவ்வளவு நேரம் காமெடி பண்றோம்கிறதைவிட எப்போ சரியா நிறுத்தணும்கிறது தெரியணும். அதை அவரிடம் கத்துக்கிட்டேன்.

என்.சி.சி-எல் அப்போ இருந்தேன். அதிலே சேர்ந்ததற்குக் காரணமே பூரியும் கிழங்கும் தர்றாங்கன்னு தான். அதுக்கான டிரஸைப் போட்டுட்டு காலை நேரத்தில் மார்ச் பாஸ்ட் மைதானத்தில் போய்க்கிட்டுருக்கிறப்போ ‘ப்ரியா’ படத்தில் வரும் “ஏ.. பாடல் ஒன்று..” பாட்டு கேட்டதும் கமாண்டை விட்டுவிட்டுத் திரும்பிட்டேன்.

அப்புறம் என்ன? தண்டனையா மைதானத்தை ‘மூன்று’ ரவுண்டு சுற்றினேன்.
அப்பா கல்வித் துறையில் அதிகாரி. நடுத்தர வர்க்கத்துக் குடும்பத்தில் இருந்து வந்திருந்ததால் கையில் காசுப் புழக்கம் அதிகமாக இருக்காது.. கொண்டாட்டங்கள் இருக்காது.. பார்ட்டிகள் இருக்காது..

ஒருசமயம் என்னுடைய நண்பன் கலைச்செல்வன் மிலிட்டரி சரக்கான ரம்மை எனக்குக் கொஞ்சமா ஒரு மூடியில் ஊற்றிக் கொடுத்ததற்கே மூணு மணி நேரம் உளறி, ஜன்னல் கம்பியைப் பிடிச்சிட்டு மேலே எல்லாம் ஏறி.. பாவம்… கூட இருந்தவங்க எல்லாம் கஷ்டப்பட்டிருக்காங்க…

கல்லூரியில் எனக்குன்னு ‘க்ளோசா’ நான்கைந்து நண்பர்கள் இருந்தாங்க. கலைச்செல்வன், மீனாட்சி சுந்தரம், பாஸ்கர்ன்னு அவங்களோட சேர்ந்து திரிவோம். அமெரிக்கன் கல்லூரியை வெளியிலிருந்து பார்த்தால் ஏற்படுகிற தோற்றம் உள்ளே போனபிறகு மாறிடுச்சு..

ஆசிரியர்களும் மாணவர்களும் அவ்வளவு ஃபிரெண்ட்லியாகப் பழகுவோம்.. ஆசிரியர்களும் மாணவர்களும் தம் அடிச்சுட்டு டீ குடிக்கிறது அங்கே சாதாரணம். அந்த அளவுக்குச் சுதந்திரம் இருந்தது.

இப்போ கராத்தேயில் பிரபலமாகி இருக்கிற ஹுசைனி அந்தக் கல்லூரியில் தான் படிச்சுக்கிட்டிருந்தார். ‘புடாக்காய்’ன்னு ஒரு கராத்தேயை அப்போ கற்றுக் கொடுப்பார்.

நான் அதைக் கிண்டல் பண்ணி ‘குபுடாக்காய்’ன்னு ஒரு நாடகம் போட்டு அதில் புடலங்காயை வெட்டினேன்.. கோபமாக முதலில் வந்த ஹுசைனி எங்களைப் பார்த்ததும் ஃப்ரெண்டாகி கை குலுக்கிட்டார். நண்பர்கள் ஆயிட்டோம்.

‘அரௌண்ட் மதுரை இன் 80 மினிட்ஸ்’ என்று ஒரு நாடகம் போட்டேன். தெருக்கூத்து பாடல் பாணியில் மதுரையைப் பத்தி நையாண்டியா அதில் சொல்லி இருந்தேன்.. அதில் மதுரையில் உள்ள தியேட்டர் பெயர்களை எல்லாம் அடுக்கி “சீர் புகழும் மதுரை டவுன்.. சென்ட்ரல் பஸ் ஸ்டாண்ட்” என்று ஒரு பாட்டே வரும்.

இப்போ சினிமாவே வாழ்க்கைன்னு ஆனாலும் அப்போ என்னுடைய அம்மா அதிகமா சினிமா பார்க்க விடமாட்டாங்க… எதுக்கு ‘கம்பைன் ஸ்டடி’ன்னு வைச்சிருக்காங்க. அதைச் சொல்லிவிட்டு சினிமாவுக்குக் கிளம்பிடுவோம்.

ஒரு சமயம் இம்பீரியல் தியேட்டரில் ‘ரகசிய போலீஸ் 115’ படத்தை மறு ரிலீசாகப் பார்க்க நண்பர்களுடன் போயிருந்தேன். வேர்க்குதுன்னு போட்டிருந்த சட்டையைப் பின்னாடி கழட்டிப் போட்டிருந்தேன்..

இடைவேளை சமயத்தில் பின்னாடி திரும்பிப் பார்த்தா சட்டையைக் காணோம்.. பிறகு என்ன செய்ய? மேலே சட்டை இல்லாத உடம்போட படத்தைப் பார்த்துட்டு ரொம்ப காத்தோட்டமா வீட்டுக்கு வந்தேன்.. அதெல்லாம் ஒரு தியாகம் தான்..
சிவாஜி நடித்த ‘திரிசூலம்’ படத்தின் இருநூறாவது நாள் விழா. தமுக்கம் மைதானத்தில் நடந்தது. ரஜினி வருவதாக மைக்கில் அறிவித்தார்கள்..

டீசர்ட் போட்டபடி வந்தார் ரஜினி.. “என் பெயர் சிவாஜி ராவ். இவர் பெயர் சிவாஜி கணேசன். எனக்கு சிவாஜி மாதிரி ஆகணும்னு ஆசை. அவர் ரொம்ப நாள் நல்லா இருக்கணும்”னு சொல்லிட்டு இறங்கி வண்டியில் ஏறிட்டார். அவருடைய காருக்குப் பின்னாடியே சைக்கிளில் விரட்டிக்கொண்டு போனதும் மனசில் இருக்கிறது.

கல்லூரியில் படிக்கிறப்போ பேச்சாளர் ‘தீப்பொறி’ ஆறுமுகம் பேசுறார்ன்னா கிளம்பிடுவோம்.. பேச்சில் நிஜமாவே ‘பொறி’ பறக்கும். செக்ஸும் கலந்திருக்கும். செமத்தியாப் பேசுவார்.. ஜாலியா போயிட்டு வருவோம்.

இளையராஜா பாட்டுன்னா அப்போ எங்களுக்கு அப்படி ஒரு மோகம். இவருடைய பாட்டைக் கேக்குறதுக்குன்னே டீக்கடைக்குப் போவோம். அப்படிப்பட்டவர் குரல் தேர்வுக்கு – அதிலும் மதுரைக்கு வந்தா விட்டுடுவோமா?

அமெரிக்கன் கல்லூரியில் நானும் சாந்தப்பிரகாஷ் என்பவரும் தேர்வாகி விட்டோம். அதுக்குப்பிறகு அவருக்கு முன்னால் பாடவேண்டும். “பூமாதேவி போல வாழும்..” என்று துவங்குகிற ஷியாமின் இசையமைப்பில் உருவான பாடலைப் பாடினேன்.

அப்போ குரல் தேர்வானதோடு சரி.. அதே இளையராஜாவை பின்னாளில் வீட்டில் சந்தித்தேன், என்னுடைய குழந்தைக்கும் அவர் தான் பெயர் வைத்தார்.

சொன்னா ஆச்சரியப்படுவீங்க.. அப்போ பொண்ணுங்க பின்னால் அலையுறது, சைட் அடிச்சிட்டு லவ் லெட்டர் கொடுக்கிறது – இதற்கெல்லாம் எனக்கு நேரமே இல்லை.. எதனாலோ அப்போ லவ் வரவே இல்லை.

இத்தனைக்கும் கல்லூரி நாடகங்களாலும், என்னோட மிமிக்கிரி திறமையாலும் நான் கல்லூரியில் புகழ் உச்சியில் இருந்தேன். ஆனாலும் லவ் பண்ணல. லவ் பண்ணினா பொண்ணுங்க பின்னாடியே பொறுப்பா போய் ‘லவ்’வை இண்டஸ்ட்ரி மாதிரி நடத்தணும்.. நமக்கு அதெல்லாம் ஒத்து வரவில்லை.

சக்கரவர்த்தின்னு ஒரு நடிகர் எங்க கல்லூரியில் படிச்சு சினிமாவுக்குப் போயிருக்கார். இயக்குநர் பாலாவும், மேஜர் சுந்தரராஜனும் இங்கே படிச்சவங்க. போலீஸ் அதிகாரி செந்தாமரைக் கண்ணன் நான் படித்தப்போ படித்தவர்தான்.

81-இல் படிப்பை முடிச்சிட்டு கல்லூரியை விட்டு வெளியே வந்தேன். முடிக்கிறப்போ ‘கேன்டில் பார்ட்டி’ன்னு மெழுகுவர்த்தி ஏற்றி ஒரு ‘செண்டாப் பார்ட்டி’ நடக்கும். அதில்தான் பசங்க நெகிழ்வதும் அழுவதும் நடக்கும். எங்கள் செட்டிலும் அப்படி நடந்து ஆட்டோகிராஃப் வாங்கிக்கிட்டோம்..

பேராசிரியர் ஒருத்தர் எங்களை அழைத்து இனி 08.08.1988, 09.09.1999 வர்ற மாதிரியான நாட்களில் அனைவரும் சந்திக்கலாம் என்ற ஐடியாவைச் சொன்னார். அந்த மாதிரி இப்போ வரைக்கும் மீட் பண்ணிட்டு வர்றோம்…

நான் பிரபலமான பிறகு மதுரைக்குப் போகிறபோது பலதடவை அமெரிக்கன் கல்லூரிக்குப் போய்விடுவேன். தமிழ்த் துறைக்குப் போய் சாலமன் பாப்பையாவைப் பார்த்திருக்கிறேன். அவர்தான் “இதைக் கொண்டு வரும் விவேகானந்தன் என்கிற மாணவர்” என்று துவங்கி ஒரு கடிதம் எழுதி பாலசந்தரிடம் அனுப்பியவர்.

எனக்கு தமிழைக் கற்றுக் கொடுத்த அவருடன் இணைந்து ‘சிவாஜி’ படத்தில் நடித்தது நல்ல அனுபவம்.

கல்லூரியில் எனக்குக் கிடைத்த அந்த அருமையான காலகட்டத்தை நினைத்தால் மறுபடியும் காலத்தில் ‘ரீவைண்டிங்’ பண்ணி அங்கே போய்விட மாட்டோமான்னு தான் தோணுது. அமெரிக்கன் கல்லூரியை இன்னொரு தாய்ன்னு தான் சொல்வேன்..”

சொன்னபடியே நெகிழ்வுடன் கல்லூரியில் தனக்கு மிகவும் பரிச்சயமான இடங்களைப் பட்டியல் போட்டுச் சொல்கிறார் விவேக்.

– மணா

You might also like