எம்.ஜி.ஆரிடம் கணக்குக் கொடுத்து கவர்ந்த தோழர்!

தமிழ்நாட்டில் தேர்தல் களம் களைகட்டிக் கொண்டிருக்கிறது. தேர்தல் களம் திறந்துவிட்டால் அவ்வளவுதான், சிலருக்கு ஒரே கொண்டாட்டம், குதுகலம், செலவு மழைதான். விரல்விட்டு எண்ணக் கூடிய சில இயக்கங்களைத் தவிர பிற அரசியல் கட்சிகள் பணத்தை பச்சைத் தண்ணீராக வாரி இறைப்பார்கள்.

தேர்தல் செலவுக்கென்று நிர்ணயிக்கப்பட்டுள்ள தொகை பற்றி எல்லாம் நினைத்துக்கூட பார்க்க மாட்டார்கள். கட்சிகளோ, கட்சிகளின் வேட்பாளர்களோ, பணத்தை நேரடியாக செலவளிக்க இயலாது.

அதற்கென்று நம்பிக்கைக்குரியவர்களை நியமித்து தேர்தல் செலவுகளைச் செய்வார்கள். எவ்வளவுதான் நம்பிக்கைக்கு உரித்தானவர்களாக இருந்தாலும், கொடுத்த பணத்திற்கு கணக்குக் காட்டி சரி செய்து விடுவார்கள்.

சொந்தக் கட்சிக்காரர்களே மீதிப் பணம் இருந்தால் ‘சுவாக..’ செய்து விடுவார்கள். அதுவும் இன்னோர் கட்சிக்காரர் கச்சிதமான கணக்குகளைக் காட்டுவார் என்பதெல்லாம் கனவிலும் நடக்க முடியாத ஒன்று.

வந்த வரவை செலவு போக மீதி இவ்வளவெனத் திரும்பத் தருகிற மனிதர்களை அரசியலில் காண்பது அபூர்வம். அப்படிப்பட்ட அபூர்வ மனிதர்களுள் ஒருவர்தான் அந்தப் பொதுஉடமை இயக்கப் போராளி.

1973-ல் திண்டுக்கல் நாடாளமன்றத் தொகுதி இடைத்தேர்தல்.

1972ல் தோன்றிய அ.தி.மு.க. அதில் வேட்பாளரை நிறுத்தியது. அன்றைக்கிருந்த அரசியல் சூழ்நிலையில் அ.தி.மு.க.வை மார்க்சிஸ்ட் கட்சி ஆதரித்தது. தேர்தல் செலவுக்காக அ.தி.மு.க. தலைமை கணிசமான நிதியை தோழரிடம் வழங்கி இருந்தது.

நிதியை செலவழித்தது போக மிஞ்சியிருந்த பணத்தை சென்னை சென்று அ.தி.மு.க. தலைவர் எம்.ஜி.ஆரிடம் அந்தத் தோழர் ஒப்படைத்தார்.

“வரவு செலவுக் கணக்கை ஒப்படைத்து சரிபார்த்துக் கொள்ளுங்கள். எல்லா செலவுகளுக்கும் வவுச்சர், ரசீதுகள் வைத்திருக்கிறேன்” என்றார்.

ஆம். கட்சியில் கணக்கு கேட்டு வெளியேறியவரிடம் இடைத் தேர்தல் கணக்கினைக் கொடுத்தார். அந்தத் தலைவரின் நேர்மை எம்.ஜி.ஆரைக் கவர்ந்தது.

வெற்றிக்கு உழைத்ததற்காக நன்றிப் பரிசாக ஐந்து பவுன் தங்கச் சங்கிலியை எம்.ஜி.ஆர் வழங்க முன் வந்தார். பக்குவமாகப் பேசி பரிசுச் சங்கிலியை வாங்க மறுத்துவிட்டார் தோழர். எம்.ஜி.ஆர் வியந்து மகிழ்ந்த அந்த மனிதர் வேறு யாருமில்லை. தோழர் என்.வரதராஜன் ஆவார்.

பஞ்சாலைத் தொழிலாளியாக வாழ்க்கையைத் துவங்கி பாட்டாளி வர்க்கத் தளபதியாக உயர்ந்தவர். தீண்டாமை ஒழிப்பு முன்னணியை உருவாக்குவதில் உறுதுணையாக நின்றவர். அருந்ததியர் சமூகத்திற்கு உள் இட ஒதுக்கீடு கிடைக்க கடும் முயற்சி எடுத்தவர். உத்தபுரத்தில் எழுப்பபட்டிருந்த தீண்டாமைச் சுவரைத் தகர்க்க தீவிரமாகப் போராடியவர்.

1967, 1977, 1980, ஆகிய சட்டமன்றத் தேர்தலில் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு பெற்று மக்கள் பிரச்சனைகளுக்காக மன்றத்தில் குரல் கொடுத்தவர்.
மார்க்சிஸ்ட் கட்சியின் சட்டமன்றக் குழு கொறடாவாகப் பொறுப்பாளராக இருந்து அரும்பணி ஆற்றியவர்.

மும்முறை சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பு வகித்தும்கூட வாழ்நாள் முழுவதும் வாடகை வீட்டில் வசித்தவர்.

இயக்கத்திற்காகத் தலைமறைவு வாழ்க்கையை மேற்கொண்டவர். சிறை வாசத்தை இன்முகத்ததுடன் ஏற்றவர். இந்த ரீதியில் தோழர் என்.வரதராஜன் அவர்களின் சிறப்பியல்புகளை எழுதிக் கொண்டே போகலாம்.

மொத்தத்தில் பொதுஉடைமை இயக்கத்தில் தலைவர் எப்படி தயாராகுகிறார் என்பதற்கு தோழர் என்.வரதராஜன் அவர்களின் வாழ்க்கைச் சரித்திரம் ஒரு சாட்சி என்றால் அது மிகையன்று.

குழந்தைகள் அறிந்துகொள்ள வேண்டிய, பின்பற்ற வேண்டிய வரலாற்றுப் பாடங்களில் ஒன்றுதான் அவரது வாழ்க்கை.

– நன்றி:கணேசன் முகநூல் பதிவு

You might also like