தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர், சிவாஜி கொடி கட்டிப் பறந்த கால கட்டங்களில், தங்களையும் ஆணித்தரமாக அடையாளப்படுத்திக் கொண்ட சில ஹீரோக்களில் ரவிச்சந்திரனும் ஒருவர்.
எந்த சினிமா பின்புலமும் இல்லாமல், தனது தனித் திறமையால், கனவு நாயகனாக வலம் வந்தவர்.
ஶ்ரீதரின் ‘காதலிக்க நேரமில்லை’ படம் மூலம் நடிகரான ரவிச்சந்திரன் மலேசியாவில் பிறந்தவர். அறுபது, எழுபதுகளில் முன்னணி நடிகராக இருந்த இவர், இதயகமலம், கல்யாண மண்டபம், மோட்டார் சுந்தரம் பிள்ளை,
குமரிப்பெண், மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி, அதே கண்கள், நான் என சுமார் 150 படங்களுக்கு மேல் ஹீரோவாக நடித்திருக்கிறார்.
கடைசியாக, அவர் ஹீரோவாக நடித்த படம் ‘பாம்பே மெயில் 109’. 1980 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்துக்கு பிறகு கொஞ்சம் இடைவெளி.
பிறகு அவருக்கு ‘ஊமை விழிகள்’ ரீ என்ட்ரி கொடுக்க குணசித்திர வேடங்களில் நடிக்கத் தொடங்கினார். தனது மகன் விஷ்ணுவர்தன் நடிப்பில் மானசீக காதல் படத்தைத் தயாரித்து இயக்கவும் செய்தார்.
கரூர் அருகே உள்ள வாங்கல் பூர்வீகம் என்றாலும் ரவிச்சந்திரன் படித்தது கோலாலம்பூரில். அவர் தந்தை பைரோஜி சீனிவாசன் எழுத்தாளர்.
மலேசியாவில் இருந்து வெளியாகும் ‘தமிழ் நேசன்’ பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர். தமிழ் சங்கம் நடத்திய பள்ளியில், மலேசியாவிலேயே முதல் தமிழ் மாணவனாக தேர்ச்சி பெற்ற பிறகு, கல்லூரி படிப்பிற்காக திருச்சி வந்தார் ரவிச்சந்திரன்.
திருச்சி புனித ஜோசப் கல்லூரியில் டிகிரி முடித்துவிட்டு, சென்னைக்கு மருத்துவம் படிக்க வந்தவருக்கு சினிமா ஆசை ஏதுவும் இல்லை. ஆனால், அப்போது ‘காதலிக்க நேரமில்லை’ படத்துக்கு ஹீரோ தேடிக் கொண்டிருந்தார் இயக்குனர் ஶ்ரீதர்.
ரவிச்சந்திரனின் குடும்ப நண்பர் ஒருவர், அவரை ஶ்ரீதரிடம் அழைத்துச் சென்றார். ஆனால், அதற்கு முன் வரை ஶ்ரீதர் பற்றியோ, சினிமா பற்றியோ அதிகம் தெரியாது ரவிச்சந்திரனுக்கு.
அந்தப் படத்துக்கு கிடைத்த வாய்ப்பு பற்றி ரவிச்சந்திரன் இப்படி சொல்லியிருக்கிறார்: “அப்போது நான் அதிகமாக சிகரெட் பிடித்துக் கொண்டே இருப்பேன்.
மலேசியாவில் இருந்து வந்தவன் என்பதால், நாகரிக மோகத்தில் அலைந்து கொண்டிருந்தேன். இயக்குனர் ஶ்ரீதர் அலுவலகத்தில் சினிமா வாய்ப்புக்காக ஏகப்பட்ட கூட்டம்.
குடும்ப நண்பர், ஶ்ரீதரிடம் அழைத்துப் போனார். நான் ஹாய் என்று ஶ்ரீதருக்கு கைகொடுத்துவிட்டு எதிரில் இருந்த ஷோபாவில் கால் மேல் கால் போட்டு அமர்ந்தேன். அவர் என்னையே பார்த்தார்.
சிகரெட் பாக்கெட்டில் இருந்து ஒன்றை எடுத்து பற்ற வைத்துவிட்டு, அவரிடம், ‘சார் சிகரெட்’ என்று பாக்கெட்டை நீட்டினேன். மலேசியாவில் இது மரியாதைக் குறைவான செயல் இல்லை என்பதால் அப்படிச் செய்தேன்.
குடும்ப நண்பர் வெலவெலத்து விட்டார். ஆனாலும் இயக்குனர் ஶ்ரீதர் அந்த ஸ்டைலை புரிந்துகொண்டார். என் இயல்பும், தைரியமும் பிடித்திருந்ததால், ‘இவன்தான் ஹீரோ, மத்தவங்களை போகச் சொல்லிடுங்க’ என்றார். இப்படித்தான் ‘காதலிக்க நேரமில்லை’ படத்துக்குள் நான் வந்தேன்”.
ஆனால் சினிமாவை ஏற்றுக்கொள்ளாத ஆச்சாரமான குடும்பம் ரவிச்சந்திரனுடையது. அவருடைய அப்பாவும் அம்மாவும் நடிக்கச் செல்வதை ஏற்றுக்கொள்ளவில்லை.
மருத்துவக் கனவு மடிந்துபோவதில் அவர்களுக்கு விருப்பமில்லை. பிறகு இந்த ஒரு படத்தில் மட்டும் நடித்துக்கொள்ளட்டும் என்று அனுமதித்தார்கள். ரவிச்சந்திரனும் அப்படித்தான் நினைத்தார். ஆனால் சினிமா எனும் மேக்னெட் அப்படி விட்டுவிடுமா என்ன?
‘காதலிக்க நேரமில்லை’ முடிந்ததும் முழு நடிகராக, தன்னை உணரத் தொடங்கினார் ரவிச்சந்திரன். பிறகு வாய்ப்புகள் தொடர, நிலையான நடிகரானார்.
– அழகு