குற்றவாளிகள் 13 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை
கேரளா மாநிலம், பாலக்காடு அட்டப்பாடி கடுகுமன்னா பழங்குடி கிராமத்தைச் சேர்ந்த மல்லான் என்பவரின் மகன் மது, சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர்.
மது பசிக்காக 2018 பிப்ரவரி 22-ம் தேதி முக்கலி பகுதியில் உள்ள ஒரு கடையில் இருந்து உணவு திருடியதாக கூறி அவரை கையும், காலையும் கட்டி தரையில் இழுத்துச் சென்று அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
உடம்பில் 15 இடங்களில் ஏற்பட்ட கொடுங்காயங்களால் தான் மது உயிரிழக்க நோ்ந்ததாக உடற்கூராய்வு அறிக்கையிலும் கூறப்பட்டியிருந்தது.
இந்த வழக்கில் அந்த பகுதியில் உள்ள வியாபாரிகள், கார் டிரைவர்கள் உட்பட 16 பேர் மீது கொலை வழக்குப் பதிவு செய்து குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்தனர்.
இதில் முக்கிய குற்றவாளிகளான கார் டிரைவர் சம்சுதீன், வியாபாரிகளான ஹீசைன், முனீர் ஆகியோர் முதல் மூன்று குற்றவாளிகளாக குற்றப்பத்திரிக்கையில் குறிப்பிடப்பட்டியிருந்தது.
இந்த வழக்கில் 16 பேர் மீது கொலை, பழங்குடியினர் மீதான தாக்குதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. வழக்கில் 129 சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டன.
5 ஆண்டுகளாக விசாரிக்கப்பட்டு வந்த இந்த வழக்கில் மன்னார்காடு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஆர்.எம். ரத்தீஷ்குமார் தீர்ப்பளித்தார். அட்டப்பாடி மது கொலை வழக்கில் 14 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
குற்றவாளிகள் 14 பேரில் 13 பேருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.