ஒரு திரைப்படத்தை விளம்பரப்படுத்தும் நோக்கில் ஊடகங்களில் வெளியாகும் புகைப்படங்கள், செய்திகள், சம்பந்தப்பட்ட கலைஞர்களின் பேட்டிகள், டீசர், ட்ரெய்லர் என்று ஒவ்வொன்றும் ரசிகர்கள் ஒவ்வொருவரது மனதிலும் ஒரு பிம்பத்தை உருவாக்கும்.
அதன் ஒட்டுமொத்த உருவமாக ஒரு படம் திகழ்ந்தால் ‘ஆச்சு’; ‘இல்லாவிட்டால் ‘போச்சு’ கதை தான்.
காலத்தே நிற்கும் நோக்கோடு ஆக்கப்படும் கலைப்படங்களை விட, கமர்ஷியல் திரைப்படங்களுக்கு இது ரொம்பவே பொருந்தும்.
எதற்கு இந்தக் கதை என்கிறீர்களா? நானியின் தசரா படம் தொடர்பான முன்னோட்ட நிகழ்வுகளும் அப்படியொரு உலகை நம் முன் வைத்தது.
அதுவே, அப்படம் ஓடும் தியேட்டரை நோக்கி நம்மைத் தள்ளியது.
அதே வேகத்தில் தியேட்டரை விட்டு வெளியே வந்தோமா அல்லது படம் பார்த்த திருப்தியில், பூரிப்பில் வீடு திரும்பினோமா என்பதுவே அதன் வெற்றியைத் தீர்மானிக்கும் கேள்வி.
கரி படிந்த உலகம்!
ஒரு நிலக்கரிச் சுரங்கம். அருகிலுள்ள கிராம மக்கள் அதனை நம்பியே வாழ்கின்றனர். சுரங்கத்தில் இருந்து வெளியேறும் கசடுகள், கரிப்புகை அனைத்தும் அக்கிராமத்தின் மீது படிந்திருக்கிறது.
தாகமெடுத்தால் தண்ணீர் அருந்துவதற்குப் பதிலாக, அங்குள்ள ஆண்கள் சாராயத்தையே குடிக்கின்றனர்; அதனால், காலையிலேயே சாராயக்கடை வாசலில் பெரிய வரிசை நிற்கிறது.
சிறுவயது முதல் நண்பர்களாக இருந்துவரும் சூரியும் (தீக்ஷித் ஷெட்டி) தரணியும் (நானி) அதனைப் பார்த்தே வளர்கின்றனர்.
அதனால், எந்நேரமும் சாராயத்திலேயே மிதக்கின்றனர். சுரங்கத்தில் இருந்து வெளியே வரும் சரக்கு ரயிலில் இருந்து நிலக்கரி மூட்டைகளைத் திருடுகின்றனர்.
பள்ளிக்காலத் தோழியான வெண்ணிலாவை (கீர்த்தி சுரேஷ்) தரணி விரும்புகிறார்; ஆனால், நண்பன் சூரி அப்பெண்ணை விரும்புவது அறிந்ததும் தன் காதலைக் குழி தோண்டிப் புதைத்துவிடுகிறார்.
அதையும் மீறி, அவரது ஒருதலைக் காதல் அவ்வப்போது உயிர்த்தெழுந்து தொந்தரவு செய்கிறது.
தரணி ஒதுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்தவராக இருக்க, ஆதிக்க சாதியைச் சேர்ந்தவர்களாக வெண்ணிலாவும் சூரியும் இருக்கின்றனர்.
உள்ளாட்சித் தலைவர் பதவியைக் கைப்பற்றும் நோக்கில் மோதலைக் கடைப்பிடித்துவரும் ராஜன் – சிவன் இடையிலான போட்டி இந்த முக்கோணக் காதலைச் சிதைத்துச் சின்னாபின்னாமாக்குகிறது.
சூரியின் உயிரைப் பறித்து வெண்ணிலாவைக் கைம்பெண் ஆக்குகிறது; அதனைக் காணச் சகிக்காத தரணி என்ன செய்தார் என்பதே ‘தசரா’வின் மீதிக்கதை.
கரி படிந்த களமொன்றைக் கண்ணில் காட்டி, சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்பு அங்குள்ள மனிதர்களின் வாழ்க்கை எவ்வாறிருந்தது என்று கதை சொல்ல முனைந்திருக்கிறார் இயக்குனர் ஸ்ரீகாந்த் ஓடேலா.
ஆனால், அந்த உலகம் நாம் சகிக்கும்படியாக இருக்கிறதா என்றால் தலையைக் குனிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.
ராமாயண சாயல்!
நானி, தீக்ஷித் ஷெட்டி, கீர்த்தி சுரேஷ் இடையிலான முக்கோணக் காதல்தான் முன்பாதியை நிறைக்கிறது.
அதற்கேற்றவாறு மூவருக்கும் சம அளவில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
வழக்கமான தெலுங்கு படங்களை விட, நானியையும் கீர்த்தி சுரேஷையும் குத்து டான்ஸ் ஆட வைத்து ‘கனவுப்பாடல்’ என்று நம் காதில் பூ சுற்றாமல் இருந்தது ஆறுதல்.
சமுத்திரக்கனி, சாய்குமார் இருவரும்தான் வில்லன்கள் என்று எண்ணவைத்து, அவர்களுக்கு நடுவே ‘சின்ன நம்பி’ எனும் பாத்திரத்தில் மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோவைக் காட்டியிருப்பதும் நன்றாகவே உள்ளது.
ஆனால், அதன்பிறகு கதையில் சிறிய அளவில் கூட திருப்பம் இல்லை.
சரி, கதை சொல்லும் விதமாவது வேகத்தைக் கொண்டிருக்கிறதா என்றால் அதுவும் இல்லை.
அதனால், சவசவ என அணிவகுக்கும் காட்சிகளைப் பார்த்து முடித்து கிளைமேக்ஸை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.
அந்த இடத்தில், வழக்கான தெலுங்குப் படம் தான் இது என்று காட்டுவதற்காக ரத்தத்தை பக்கெட் பக்கெட்டாக நம் முகத்தில் ஊற்றி அனுப்புகிறது ‘தசரா’.
முக்கோணக் காதல், சாதீய பாகுபாடுகள், அதிகார வர்க்கத்தின் அடக்குமுறை ஆகியவற்றை மட்டுமே மையமாகக் கொண்ட இக்கதையில் ராமாயணத்தின் சாயலும் ஒட்டியுள்ளது.
இதில் கீர்த்தி சுரேஷை சீதை என்றும், சாக்கோவை ராவணன் என்றும் உருவகப்படுத்தினால், தீக்ஷித் மற்றும் நானி இருவரில் எவரை வேண்டுமானாலும் ராமனாகவும் லட்சுமணனாகவும் கருத முடியும்.
அதற்காகவே, கிளைமேக்ஸில் ராமநவமியின்போது ராவணனின் உருவத்தை தீயிட்டு எரிக்கும் சம்பிரதாயம் காட்டப்படுகிறது.
இந்த படத்தில் நானி, கீர்த்தி, தீக்ஷித், சாக்கோ ஆகியோரோடு சமுத்திரக்கனி, சாய்குமார், பூர்ணா, சுரபி பிரபாவதி உட்படப் பலர் நடித்துள்ளனர்.
நானியின் நண்பர்கள், ஊர் மக்கள் என்று சில நூறு பேர் திரையில் தோன்றுகின்றனர். அவர்களது நடிப்பையும் குறை சொல்ல முடியாது.
கரி படிந்த கிராமமொன்றைக் காட்டுவது முதல் கிளைமேக்ஸ் சண்டைக்காட்சி வரை ஒவ்வொரு பிரேமிலும் கருப்பையும் மஞ்சளையும் சிவப்பையும் பழுப்பையும் வாரியிறைக்கிறது சத்யன் சூரியனின் ஒளிப்பதிவு.
நவீன் நூலியின் படத்தொகுப்பு, இயக்குனர் முன்வைத்த திரைக்கதைக்கு நியாயம் செய்திருக்கிறது.
பாடல்கள், பின்னணி இசையில் தன்னாலான அளவில் ரசிகர்களை உற்சாகப்படுத்த முனைந்திருக்கிறார் சந்தோஷ் நாராயணன்.
ஆனால், ஸ்கிரிப்ட் என்ற ஒன்று மிகப்பலவீனமாக இருப்பதால் அனைத்தும் விழலுக்கு இறைத்த நீராகியிருக்கிறது.
உருப்படியான ஒரே விஷயம்!
கதை மிகச்சாதாரணமாக இருந்தாலும், அதில் இருக்கும் தவிர்க்க இயலாத நிகழ்வுகளையெல்லாம் காட்சிகளாக்கி திரைக்கதையாகக் கோர்ப்பது அவசியம்.
இதில், அப்படிப்பட்ட காட்சிகளை உருவாக்காமல் இதுவரை பெரியதிரையில் கண்டுவந்த ‘க்ளிஷே’க்களையே அடுக்கியிருக்கிறார் ஸ்ரீகாந்த்.
‘தசரா’ கதை கோடு போட்டாற்போல இருப்பது அதன் பலமல்ல; பலவீனம். திரைக்கதையில் ஏற்ற இறக்கங்களே இல்லாததால் சாதீயத்தை விமர்சிக்கும் காட்சிகளில், வசனங்களில் உள்ளடுக்கு அர்த்தங்களுக்கு வேலையே இல்லை.
ஆனால், மேலோட்டமாக ‘அசுரன்’, ‘கர்ணன்’ உள்ளிட்ட படங்களின் தாக்கத்தைக் காட்சியாக்கத்தில் வெளிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர்.
அது, காற்றடைத்த பலூன் விஸ்வரூபமெடுத்து உயர்ந்து நிற்பது போன்றிருக்கிறது.
உறுதிமிக்க சிலையை வடிக்க வேண்டிய இடத்தில் பலூன் எம்மாத்திரம். அதன் விளைவாக, தியேட்டரில் இருந்து வெளிவரும் நாம் தான் காற்று போன பலூன் போல மூஞ்சை வைத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.
’தசரா’வில் இருக்கும் ஒரே உருப்படியான விஷயம், ‘மைனர் வேட்டி கட்டி’ பாடல்.
யூடியூப்களில் இடம்பெற்றுள்ள பலரது ‘கவர் டான்ஸ்’ வீடியோக்களை பார்த்தபிறகு, அந்த பாடல் காட்சியும் நம் மனதில் இருந்து மறைந்துபோக வாய்ப்பிருக்கிறது.
அப்படிப் பார்த்தால், தசரா என்பது நெருப்புச் சகதியில் சிக்கிக் கொண்ட காதல் பலூன் என்று சொல்லலாமா?
– உதய் பாடகலிங்கம்