எனது அப்பா ஒரு நல்ல வாசிப்பாளர். அவரைப் பார்த்து எனக்கும் சிறுவயதிலேயே படிக்கும் ஆர்வம் தொத்திக் கொண்டது.
5-ம் வகுப்பில் முயல், அணில் (சிறுவர் பத்திரிக்கை) என்று வாசிக்க ஆரம்பித்து, பிறகு முத்து காமிக்ஸ், தமிழ்வாணன், பிறகு 6 வதில் பொன்னியின் செல்வன்.
பிறகு சுஜாதா.. அதன் பிறகு சுஜாதாவைப் பற்றிக் கொண்டேன். எந்தப் பத்திரிகையில் அவர் தொடர் எழுதினாலும் அதை வாங்கிப் படிப்பது வழக்கம்.
அப்பா, நிர்வாக அதிகாரியாக இருந்தார். தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் ஊர் ஊராக மூன்று வருடத்திற்கு ஒரு முறை டிரான்ஸ்பர்.
அய்யம்பேட்டை, பாபநாசம், ஒரத்தநாடு, வல்லம், திருக்காட்டுப்பள்ளி என்று எந்த ஊர் போனாலும் அந்த ஊர் லைப்ரரியில் மெம்பராகி சுஜாதா நாவல்களைத் தேடி வாசிக்க ஆரம்பித்து விடுவேன்.
கல்லூரி வந்தப் பிறகு கொஞ்சம் தீவிர இலக்கியம் பக்கம் திரும்பினாலும் சுஜாதாவை விடவில்லை.
ஜெரி காலேஜ் வந்த பிறகுதான் படிக்க ஆரம்பித்தான்.
சுஜாதாவில் தொடங்கி மளமளவென சுந்தர ராமசாமி, வண்ண நிலவன், வண்ணதாசன் என்று படித்து முடித்தான்.
சென்னை வந்த பிறகு இருவரும் அவ்வப்போது போய் சுஜாதா சாரை பார்த்து வருவோம். அவரது வீட்டில், சுஜாதா மேடத்தின் காபியோடு, ஒரு வாசகராக.
உல்லாசத்திற்குப் பிறகு அவரை சந்தித்தபோது தேனுகா சாரின் ஸ்கிரிப்ட் பற்றிச் சொல்ல அவர் ஆர்வமாகி பண்ட்ஸ் ஏற்பாடு பண்ணி படம் பிடிக்கச் சொன்னார்.
அதை முடித்து அவர் பார்த்ததும் சந்தோசம் ஆகி மிகப்பெரிய பொறுப்பைக் கொடுத்தார்.
பென்டா மீடியாவின் ‘பாண்டவாஸ்’ என்ற அனிமேஷன் பிலிம்க்கு கிரியேட்டிவ் இயக்குனராகப் பொறுப்பேற்கச் சொன்னார்.
மிகப் பெரிய வேலை அது. மோஷன் கேப்சர்-ல் படம்பிடித்து… வொயர் இமேஸ்கள் கம்யூட்டர் கம்யூட்டராக மாறி… உருப்பெற நாட்கணக்கில், மாதக்கணக்கில், ஏன் வருடக் கணக்குகூட ஆகும்.
பிறகு போஸ்ட் புரொடக்ஷன்ஸ்…. (பாண்டவாஸ் பற்றி தனியே எழுதுகிறோம்.) அந்தப் பணியைச் சிறப்பாகச் செய்துமுடித்தோம்.
பாண்டவாஸ் டெல்லி பிலிம் பெஸ்டிவல்-க்கு திரையிடத் தேர்வானது. சுஜாதா சார் எங்களை ரெபரசண்ட் பண்ண அனுப்பினார். டெல்லி பயணம்.
தொடர்ந்து படத் திருவிழாக்களில் படங்கள் பார்ப்பது, டெல்லி, ஆக்ரா என சுற்றினோம். பாண்டவாஸ்க்கு சிறந்த அனிமேஷன் படத்திற்கான நேஷனல் அவார்டும் கிடைத்தது.
அதன்பிறகு, என்ஜாய் என்ற ஒரு ஸ்கிரிப்ட்-ஐ கொடுத்தோம். அது ஒரு மியூசிக் பேண்ணட் பற்றிய கதை.
பிரஷாந்த் நடிப்பதாகவும் ஹாரிஸ் இசை (மின்னலே வந்த புதிது) என்றும் முடிவாயிற்று. பூர்வாங்க வேலைகள் முடிந்து ஏனோ அது டேக் ஆப் ஆகவில்லை. (இப்போது 20 வருடம் கழித்து ஹாரிசோடு வொர்க் பண்ணிக்கொண்டு இருக்கிறோம்).
அந்தக் கதை முழுமையான பௌண்டடு ஸ்கிரிப்ட் ஆக இருந்ததால் சிங்கப்பூர் டெலிவிஷனில் வாங்கிக் கொண்டார்கள்.
ஆக்டிங் ஒர்க் ஷாப் நடத்தி, அதில் தேர்ந்த நடிகர்களை வைத்து அந்தப் படத்தை எடுத்தாக கேள்வி. எங்களுக்கு கணிசமான ஒரு தொகையைத் தந்தார்கள்.
அடுத்து சுஜாதா சார் வண்ணதாசன் சிறுகதைகளைப் படமாக்க வழிவகை செய்து கொடுத்தார். இரண்டு கதைகளைப் படமாக்கினோம்.
சுஜாதா சார் எங்கள் மேல் உள்ள நம்பிக்கையில் சங்கர் சாரோடு இணைந்து வேலை செய்யச் சொன்னார். ரோபோட் படத்திற்கான கதை விவாதம். பிற வேலைகள். அப்போது அது கமல் சாரும், பிரீத்தி ஸிந்தாவும் நடிப்பதாக இருந்தது.
சங்கர் சார் இந்தி ‘நாயக்’கில் பிஸியாக இருந்ததால் நிறைய வேலைகளை நாங்கள் பார்த்தோம். மும்பையில் அதுல் கஸ்பேக்கரை வைத்து ஒரு போட்டோ சூட்டும் எடுக்கப்பட்டது.
கமல் சார் பேச ஒரு ரோபோட் குரலில் இன்விடேஷனும் தயார் செய்தோம். ஆனால் அந்தப் படம் நடக்கவில்லை….. சில வருடம் கழித்து ரஜினி சார் நடிக்க இயந்திரனாக வெளிவந்தது.
பிறகு விசில் ப்ராஜக்ட். ஆங்கிலத்தில் வருடத்திற்கு ஒரு காம்பஸ் திரில்லர் வரும். அந்த ஜானரில் ஒரு படம் பண்ணலாம் என்று சுஜாதா சாரிடம் கேட்க அவர் மீடியா ட்ரீம்ஸ்ல் படம் பண்ண வாய்ப்பு வாங்கிக் கொடுத்தார்.
அதற்கு வசனமும் எழுதிக் கொடுத்தார். 1.25 கோடி செலவில் 43 நாட்கள் படபிடிப்பில் அந்தப் படத்தை முடித்தோம். (விசில் பற்றி தனியாகப் பதிவிடுகிறோம்)
மீண்டும் சங்கர் சாருடன் சிவாஜி படத்தில் பணியாற்றினோம். சுஜாதா சார், சங்கர் சாருடன் கதை விவாதிப்பதே ஒரு அருமையான அனுபவம்.
சுஜாதா சார், கதைகளில் முடிச்சுகளைச் சுலபமாக அவிழ்ப்பார்.
கேள்விகள் கேட்டுத் திசைதிருப்புவார். எங்க போய் கதை முட்டிக் கொண்டு நின்றாலும் லாஜிக்காக அதைச் சரி செய்வார். அதோடு அவரது நகைச்சுவை உணர்வு… சுஜாதா சாரை இழந்த தமிழ்ப் பட உலகம் தவிப்பதை இப்போது கண்கூடாகப் பார்க்கிறோம்.
சுஜாதா சார் எங்களுக்கு ஒரு வழிகாட்டி. வாழ்க்கையில் எப்போதெல்லாம் அடுத்து என்ன என்று கலங்கி நின்றபோதெல்லாம் கைகொடுத்தவர்.
எங்களுக்கு மட்டுமல்ல எத்தனையோ பேருக்கு.
சுஜாதா சாருக்கு கடைசி வரை எங்களில் யார் ஜெரி, யார் ஜேடி என்ற குழப்பம் இருந்து கொண்டே இருக்கும். மாத்தி மாத்தி கூப்பிடுவார். “அதனால் என்ன இரண்டு பேரும் ஒன்னுதானே” என்பார். மறக்கவே முடியாத மனிதர்.
நன்றி: இயக்குநர் ஜேடி பதிவு