ஒவ்வொரு திரைப்பட உருவாக்கத்திலும் ‘காம்பினேஷன்’ என்ற வார்த்தை முக்கியப் பங்காற்றும்.
நடிகர் நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என்று யார் யாரெல்லாம் பணியாற்றுகிறார்கள் என்பதைப் பொறுத்து கவனத்தையும் ஈர்ப்பையும் அப்படம் சம்பாதிக்கும்.
வணிக நோக்கிலும் அதுவே வெற்றிகளைத் தீர்மானிக்கும் ஆற்றலாகத் திகழும்.
தமிழ் தொலைக்காட்சி உலகில் பணியாற்றிய மைக்கேல் தங்கதுரை, அப்சல் ஹமீது, கேப்ரியேலா, வினுஷா தேவி ஆகியோர் முதன்மை பாத்திரங்களில் நடிக்கும் திரைப்படம் என்ற வகையில் ‘என்4’ படமும் அப்படியொரு கவனக்குவிப்பை நிகழ்த்தியது.
இவர்கள் தவிர்த்து, இன்னொரு ஜோடியாக அக்ஷய் கமல் – பிரக்யா நாக்ரா நடித்துள்ளனர்.
வடிவுக்கரசி, அழகு, அபிஷேக், அனுபமா உள்ளிட்ட மூத்த கலைஞர்களோடு நகை திருட்டில் ஈடுபடும் கொள்ளையர்கள், அவர்களைப் பின்தொடர விரும்பும் இளந்தாரிக் கும்பல், போலீசார் என்று இரண்டு டஜன் பேர் திரையில் நடமாடுகின்றனர்.
இத்தனை பேரைத் திரையில் காட்டுவதற்கே, கதையில் பல சுவாரஸ்யமான விஷயங்களைச் சேர்க்க வேண்டியிருக்கும்.
அதற்கேற்றாற் போல, என்4 ட்ரெய்லரும் வட சென்னையின் இன்னொரு முகத்தைக் காட்டும் என்ற நம்பிக்கையை விதைத்தது.
உண்மையிலேயே படம் அப்படித்தான் இருக்கிறதா?
வழக்கமான கதை!
வடசென்னையின் கடற்கரையோரப் பகுதியில் மீன் விற்றுப் பிழைப்பு நடத்தும் பெண்மணி கண்ணம்மா (வடிவுக்கரசி). இளம் வயதிலேயே, அவரது கணவர் (அழகு) எதுவும் சொல்லாமல் வேறெங்கோ சென்றுவிடுகிறார்.
தனிமையே துணை என்றிருக்கும் கண்ணம்மா, தனது வீட்டில் சூர்யா, கார்த்தி, சவுந்தர்யா, அபிநயா (மைக்கேல் தங்கதுரை, அப்சல் ஹமீது, கேப்ரியேலா, வினுஷா) என நான்கு பேரை வளர்த்து வருகிறார்.
நால்வருமே ஒரு ஆதரவற்றோர் இல்லத்தில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள்.
வயதில் மூத்த சூர்யாவும் சவுந்தர்யாவும் திருமணம் செய்யும் எண்ணத்தில் இருக்க, கார்த்தியும் அபிநயாவும் ஒருவரையொருவர் காதலித்து வருகின்றனர்.
இவ்விரு ஜோடிகளைப் போலவே, வசதியான பின்னணியுடைய விஜய் – சுவாதி (அக்ஷய் கமல், பிரக்யா) ஜோடியும் தீராக்காதலுடன் திரிகிறது.
ஒருபக்கம் காதல், இன்னொருபுறம் நண்பர்களுடன் போதைப்பொருட்களைப் பயன்படுத்துவதைச் சாதாரணமாகக் கருதுவது என்றிருக்கிறார் விஜய்.
ஒருநாள், கடலோரம் நிற்கும் படகொன்றில் போதையின் பிடியில் விஜய்யும் அவரது நண்பர்களும் தள்ளாடிக் கொண்டிருக்கின்றனர். அப்போது, அவர்களது கையில் ஒரு துப்பாக்கி கிடைக்கிறது.
அதேநேரத்தில், கரையில் சூர்யா, கார்த்தி, சவுந்தர்யா, அபிநயா நால்வரும் நடந்து வருகின்றனர். அப்போது, திடீரென்று பாய்ந்துவரும் ஒரு குண்டு அபிநயாவைத் தாக்குகிறது.
அபிநயாவைச் சுட்டது யார்? இந்த கேள்விக்கான விடை தேடி விரிகிறது ‘என்4’ இரண்டாம் பாதி.
என்னதான் ராயபுரம் பகுதியிலுள்ள கடலோர மக்களின் வாழ்வைக் காட்ட மெனக்கெட்டிருந்தாலும், அடிப்படைக் கதை என்னவோ வழக்கமான ஒன்றாகவே உள்ளது.
அதிலும், பல காட்சிகள் வெறுமனே கேள்விகளை மட்டும் எழுப்பிவிட்டு பதிலையே சொல்லாமல் முடிந்துவிடுகின்றன.
வீணான முயற்சி!
மைக்கேல் தங்கதுரை, கேப்ரியேலா, அப்சல் ஹமீது, வினுஷா தேவி ஆகியோர் மேக்கப் இல்லாமல் தோன்றியிருப்பது நல்ல முயற்சி. அவர்களது நடிப்பும் அப்பகுதி மக்களின் இயல்பைப் பிரதிபலிப்பதாகவே உள்ளது.
ஆனாலும், பார்வையாளர்களை ஈர்க்கும் காட்சிகள் எவருக்கும் கிடைக்கவில்லை என்பதுதான் சோகம்.
இவர்கள் நால்வரையும் ஒப்பிடும்போது, பிரக்யா – அக்ஷய் கமல் ஜோடி கொஞ்சம் மேக்கப்புடன் திரிவது மட்டுமே வித்தியாசம்.
வடசென்னை வட்டார மொழியைப் பேசுபவர்களாக வடிவுக்கரசி, அழகு வருவதும், போலீஸ் கெட்டப்பில் அனுபமா, அபிஷேக் தோன்றுவதும் பார்க்கத் துருத்தலாகத் தெரியவில்லை.
ஆனாலும், அவர்கள் தோன்றும் காட்சிகள் நமக்குச் செயற்கையானதாகவே தோற்றம் தருகின்றன.
இவர்கள் போதாதென்று, ‘சம்பவம் செய்றோம்’ என்று சொல்லிக்கொண்டு இரண்டு கும்பல் திரையில் நடமாடுகின்றன. ‘நாங்களும் இருக்கிறோம்’ என்று அக்ஷயின் நண்பர்களாகச் சிலரும் தலையைக் காட்டியிருக்கின்றனர்.
ஒருவரது பாத்திரம் கூட தனித்துவமாக வடிவமைக்கப்படாததால், ஒட்டுமொத்த உழைப்பும் வீணாகியிருக்கிறது.
டைட்டில் காட்சியில் வரும் ராயபுரம், காசிமேடு மாண்டேஜ் காட்சிகளில் தித்திக்கிறது திவ்யாங்க் ஒளிப்பதிவு.
இரவு நேரக் காட்சிகளும் அழகாகப் படம்பிடிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், முக்கியமான காட்சிகளில் கதாபாத்திரங்களின் உணர்வுகளைத் தனியே படம்பிடிக்கத் தவறியிருக்கிறது.
பாலசுப்பிரமணியன் ஜி பாடல்கள் மற்றும் பின்னணி இசை பார்வையாளர்களை இடையூறு செய்யாமல் திரையில் தெரியும் காட்சிகளோடு ஒன்றிணைகிறது.
சுவாரஸ்யமான காட்சிகள் என்று தேர்ந்தெடுத்துச் சிலவற்றைத் திரையில் கோர்த்திருக்கிறார் படத்தொகுப்பாளர் டேனி சார்லஸ்.
அதனால், பல கேள்விகளுக்குப் பதில் கிடைக்காமல் குழப்பம் அதிகமானதுதான் மிச்சம். இயக்குனர் லோகேஷ்குமாரின் திரைக்கதைக்கும் அதில் பெரும்பங்கு இருக்கிறது.
என்ன நோக்கம்?
ஒவ்வொரு கதைக்கும் ஒரு நோக்கம் இருக்கும். ‘என்-4’ பொறுத்தவரை அந்த நோக்கம் என்னவென்ற கேள்விக்குப் பதிலே இல்லை.
கடலோரத்தைச் சேர்ந்த ஏழை மீனவர்களில் சிலர் வசதி வாய்ப்புகள் இல்லாத வாழ்க்கையை வாழ்கின்றனர் என்பதைக் காட்டுவதற்கோ, அவர்களுக்குள் பணம் உள்ளிட்ட பல காரணங்களையொட்டி ஏற்றத்தாழ்வுகள் உள்ளன என்பதை விளக்குவதற்கோ திரைக்கதை முயற்சிக்கவில்லை.
முக்கியமாக, ஒரு காட்சிக்கும் அடுத்த காட்சிக்குமிடையேயான தொடர்பிழை மிகப் பலவீனமாக உள்ளது.
முன்பாதியில் பல காட்சிகள் பிரதான பாத்திரங்களின் குணாதிசயத்தைச் சொல்வதாகவே உள்ளன.
கதையில் திருப்புமுனை ஏற்படுத்தும் காட்சி வரும்போது, இடைவேளையும் கூடவே வந்துவிடுகிறது.
அதனால், பின்பாதிக் காட்சிகள் என்னதான் பரபரப்பூட்ட முயற்சித்தாலும் பார்வையாளர்களான நமக்கு எந்த தாக்கமும் ஏற்படுவதில்லை.
ஒருநாள் கடலுக்குச் செல்லும் மைக்கேலும் அப்சலும், அடுத்த நாள் காலையில்தான் கரை திரும்புகின்றனர்.
அவர்கள் எதற்காகச் சென்றனர், கடலில் என்ன நடந்தது என்று கதையில் சொல்லப்படவே இல்லை.
அக்ஷய் – பிரக்யா ஜோடியும் சரி, அவர்களது நண்பர்களும் சரி, ஏன் கடலோரத்தில் வந்து ‘ஜில்’ பண்ணுகின்றனர் என்பதன் பின்னணியும் திரைக்கதையில் விளக்கப்படவில்லை.
ஒரு தரப்பினரின் வாழ்வை இன்னொரு தரப்பினர் பாதிக்கும் வகையில் நடந்து கொள்வதற்குச் சாதி, மதம், பணம் உள்ளிட்ட ஏதோ ஒரு காரணி இருக்க வேண்டும். அதனை மையப்படுத்தியே மொத்தக் கதையும் நகர்ந்திருக்க வேண்டும்.
அதனைச் செய்யத் தவறியிருப்பதால், வெவ்வேறு தளங்களில் வாழும் நபர்கள் ஒரு சம்பவத்தால் பெரிய பாதிப்பையொன்றை எதிர்கொள்கின்றனர் என்ற வாதம் கொஞ்சம் கூட எடுபடவே இல்லை.
இவ்விரு தரப்பைத் தாண்டி செயின் கொள்ளையர்களையும் போலீசாரையும் கூட இக்கதை காட்டுகிறது.
இவர்களில் யாரைக் கெட்டவர்களாகக் காட்டுவது என்பதில் இயக்குனர் லோகேஷ் ரொம்பவே தடுமாறியிருக்கிறார்; கூடவே, அவர்களை மோசமானவர்களாக மாற்றியது சூழல்தான் என்று ஒவ்வொரு காட்சியிலும் தெளிவுபடுத்த முயன்றிருக்கிறார். அது, இன்னும் எரிச்சலூட்டுகிறது.
இயக்குனர் இக்கதையை உண்மையான நிகழ்வுகளின் அடிப்படையில் உருவாக்கியிருக்கலாம் அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட சம்பவங்களை ஒரு திரைக்கதையாகக் கோர்க்க முயற்சித்திருக்கலாம்.
ஆனாலும், தனக்கோ அல்லது பார்வையாளர்களுக்கோ திருப்தி தரும் ஒரு படைப்பைத் தெளிவுற வடிவமைப்பதில் இயக்குனர் லோகேஷ்குமார் தவறியிருக்கிறார் என்பதே உண்மை.
அதனால், என்4 படம் ஒரு இலக்கில்லா பயணம் என்பதாகவே முடிந்துவிடுகிறது.
– உதய் பாடகலிங்கம்