என் பயணத்திற்கு ஆன்ம பலம்!

பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணன் நெகிழ்ச்சி

சென்னையில் பரபரப்பான பத்திரிகையாளராக இருந்து, இல்லற வாழ்வில் இருந்துகொண்டே துறவியாக மாறி வாழ்ந்துவருகிற நண்பர் சுந்தரவடிவேலின் சந்திப்புப் பற்றிய ஓர் அற்புதமான அனுபவப் பதிவு ஒன்றை பேஸ்புக் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் எழுதியுள்ளார் பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணன்.

*****

எதிர்பாரா விதமாக போன் வந்தது!

நான் தான் சுந்தர வடிவேல் பேசறேன்! உங்களை பார்க்கணும் என்றார்! சட்டென்று அவரை நினைவுக்கு எடுத்து வருவதற்கே இரண்டொரு நொடிகள் ஆனது!

ஆமா..! நம்ம பத்திரிகையாளர் சுந்தர வடிவேலாச்சே..! ஏங்கப்பா… பார்த்து ஐந்து வருஷம் இருக்கலாம்..! சரி வாங்க என்றேன்!

வந்து நின்ற அவரை பார்த்தவுடன், நம்ம சுந்தர வடிவேல் தானா..? என சற்று தடுமாற்றம் ஏற்பட்டது! அவருக்கே உரிய மென்மையான அந்த புன்னகையை உதிர்த்து கையை உயர்த்தி ஆட்டிக் கொண்டே வந்தார்!

பேண்ட் சட்டையில் கிராப் வைத்த முடியுடன், வழ,வழ சேவிங் செய்த கன்னத்துடன் அவரை பார்த்து பழக்கப்பட்ட எனக்கு அவரது துறவு தோற்றம் ஆச்சரியமளித்தது! இவர் படு சுறுசுறுப்பான நிருபராக வலம் வந்த காலங்கள் மனக் கண்ணில் நிழலாடியது!

அதுவும் குறிப்பாக சுனாமி கோர தாண்டவம் ஆடிய அந்த காலகட்டங்களில் ரஜினி உள்ளிட்ட பல பிரபல நடிகர்கள் நிர்கதியாக நின்ற மக்களுக்கும், அனாதையான குழந்தைகளுக்கும் ஒரு பெரும் நிதி தருவதாக அறிவித்தனர்!

அந்த அறிவிப்புக்கே அவர்களுக்கு பாராட்டுகள் குவிந்துவிட்டன! அதற்கு பிறகு அவர்கள் மெய்யாலுமே கொடுத்தார்களா..? என எந்த ஊடகங்களும் கண்காணிக்கவில்லை!

ஆனால், சுந்தர வடிவேல் மாத்திரம் அதை விடாபிடியாக மாதக்கனக்கில் தொடர்ந்து பாலோ பண்ணி, ’அவை வெறும் அறிவிப்புகளே தானே அன்றி செயல் வடிவம் காணவில்லை’ என ஆதாரங்களுடன் எழுதி அம்பலப்படுத்தினார்!

அதற்கு பிறகே சிலர் சொன்ன தொகையை தந்தனர்!

அந்த செய்தியை எழுதியதில் இருந்து தான் எனக்கு சுந்தர வடிவேல் அறிமுகமானார்! அந்த இன்வெஸ்டிகேட்டிங் ரிப்போர்ட்டுக்காக நான் அவரை மனதார பாராட்டினேன்.

பத்திரிகை துறையில் சுயமரியாதை உள்ளவர்கள், நியாய, அநியாயங்கள் பார்ப்பவர்கள் நிறுவனங்களில் தொடர்ந்து வேலை பார்க்க முடியாது என்ற நிலையே அன்றும் சரி, இன்றும் சரி உள்ளது!

எனவே, பத்திரிகை பணியை தவிர்த்துவிட்டு டிபன் கடையை நடத்தப் போய்விட்டார். அதிலும் குறைந்த காசுக்கு நல்ல உணவு தந்து கொண்டிருந்தார்!

“பேனா பிடித்தவன் நியாயங்களை எழுத வாய்ப்பில்லாவிட்டால் கரண்டியை தூக்குவதும் மக்கள் பசி தீர்க்க நல்ல உணவு படைப்பதும் தவறல்ல! அதைத் தான் நானும் சுமார் ஐந்தாண்டுகள் செய்துள்ளேன்.

ஆனால், ஐம்பத்தைந்து வயதுக்கு மேல் சமையல் தொழிலின் கடின உழைப்புக்கு உடல் ஒத்துழைக்காது! எனவே தான், சுயாதீனத்துடன் இயங்க வாய்ப்புள்ள நிலையில் நான் எழுத்துப் பணிக்கே என்னை மீண்டும் அர்ப்பணித்துவிட்டேன்!”

நண்பர் சுந்தர வடிவேல் அறத்தில் நான் எழுதுவதை வாசித்து வருவதாகவும், இது சிறந்த சமூகப் பணி என்றும் என்னை பாராட்டினார்!

தன்னந்தனியாக இப்படி சமரசமற்று இயங்கி கொண்டு உள்ளீர்கள், அந்த இறை சக்தி தான் உங்களை இயக்கி வருவாத நம்புகிறேன் என்றார்.

தேனீர் அருந்தக் கேட்டேன். அதையெல்லாம் ஓராண்டாக தவிர்த்துவிட்டேன். ஒரு நாளைக்கு ஒரு வேளை மட்டுமே உணவு எடுக்கிறேன்.

மற்ற நேரங்களில் தண்ணீர் மட்டுமே! பச்சைத் தண்ணீர் போதுமானது என வாங்கி அருந்தினார்!

குடும்பத்தாருக்கு என் துறவை நன்கு புரிய வைத்துவிட்டேன். பையனும், மனைவியும் டிபன் கடையை பார்த்துக் கொள்கிறார்கள்! வீட்டாருடன் இருந்து கொண்டே துறவு மன நிலையில் ஏகாந்தமாக உள்ளேன் என்றார்.

கொண்டு வந்திருந்த துணிப்பையை துழாவி ஆயிரம் ரூபாய் நோட்டுடன் ஒற்றை ரூபாய் நாணயத்தையும் வைத்து ஆயிரத்து ஒரு ரூபாய் அறத்திற்கான என் பங்களிப்பு என்றார்.

“நீங்க இங்க என்னை பார்க்க வந்ததே மகிழ்ச்சி! வருமானத்தை துறைந்து ஆன்மீகத்தில் உள்ள நிலையில் நீங்க எனக்கு பணம் தருவது சரியில்லை. வேண்டாம்’’ என மறுத்தேன்.

“இல்லை. ஆறு மாதமாக இதை உங்களுக்கு தந்தே ஆக வேண்டும் என்று நினைத்த வண்ணம் இருந்தேன். அது இன்று தன் கைகூடியது. எனவே தவிர்க்காமல் வாங்கிக் கொள்ள வேண்டும்’’ என வற்புறுத்தி தந்துவிட்டுச் சென்றார்!

முதன்முதலாக ஒரு துறவியின் மனப்பூர்வமான வாழ்த்தும், ஆதரவும் கிடைத்ததில் என் பயணத்திற்கு ஒரு ஆன்ம பலம் கிடைத்ததாக உணர்ந்தேன்!

You might also like