கருப்புத் துணியை அவிழ்த்து விடுங்கள்!

– மாவீரன் பகத்சிங்  நினைவுநாள் பதிவு

*
1931 ஆம் ஆண்டு, மார்ச் 23ஆம் தேதி.

லாகூர் மத்திய சிறைச்சாலையின் விடியல், மற்ற நாட்களை போல இயல்பானதாக இல்லை. அன்று மாலை நான்கு மணிக்கே சிறைக்கைதிகள் தங்கள் அறைகளுக்குள் அனுப்பப்பட்டது அனைவருக்கும் ஒரு சந்தேகத்தை தந்தது.

மேலிடத்து உத்தரவு என்பதைத் தவிர வேறு எந்த காரணமும் கூறப்படவில்லை. பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகிய மூவரும் அன்று இரவு தூக்கிலிடப்படப் போவதாக சிறையில் முடி திருத்தும் பணியில் இருப்பவர் ஒவ்வொருவரின் அறைக்கும் வந்து தகவல் சொல்லிப்போனார்.

சிறைச்சாலை மயான அமைதியில் மூழ்கியது. கலகம் ஏதும் ஏற்படக்கூடாது என்ற முன்னெச்சரிக்கையின் விளைவாகவே அனைவரும் விரைவாகவே அறைக்குள் அடைக்கப்பட்டது புரிந்தது.

நிலைமையை மாற்ற முடியாது என்று உணர்ந்த கைதிகள், தாங்களும் பகத்சிங்குடன் சிறை வாழ்க்கையை கழித்தவர்கள் என்று பெருமையுடன் கூற ஆசைபட்டார்கள்.

பகத்சிங் பயன்படுத்திய பேனா, சீப்பு, கடிகாரம் போன்ற எதாவது ஒரு பொருள் கிடைத்தால், தங்கள் பேரப்பிள்ளைகளுக்கு காண்பிக்கலாம் என்று தெரிவித்தார்கள்.

சிறிது நேரத்திற்கு பிறகு, மூன்று புரட்சியாளர்களை தூக்குமேடைக்காக தயார் செய்வதற்காக வெளியே அழைத்து வந்தார்கள்.

அப்போது, பகத்சிங், ராஜகுரு, சுகதேவின் கைகள் விலங்கிடப்பட்ட நிலையில், தங்களுக்கு விருப்பமான சுதந்திரப் பாடல்களைப் பாடத் தொடங்கினார்கள் –
அந்த நாளும் கண்டிப்பாக வரும்.

நாம் சுதந்திரம் அடையும் போது,
இந்த மண் நம்முடையதாக இருக்கும்
இந்த வானமும் நம்முடையதாக இருக்கும்…

– என்ற பொருள் கொண்ட பாடல்கள் அவை.

அனைவரது எடையும் பரிசோதனை செய்ததில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட நாளில் எந்த எடையில் இருந்தனரோ அந்த எடையைவிட கூடுதலாகவே இருந்தனர்.

சுகதேவ் முதலில் செல்வதற்கு விருப்பம் தெரிவித்தார்.

பின்பு பகத்சிங்கிடம் “வாயே குரு” என்ற சீக்கியர்களின் புனிதமான வார்த்தையை நினைவில் கொள்ளுமாறு சிறை வார்டன் சரத்சிங், பகத்சிங்கின் காதில் சொன்னார்.

“என் வாழ்க்கை முழுவதும் நான் கடவுளை நினைக்கவில்லை.” உண்மையில், ஏழைகளின் துயரங்களை பார்த்து, கடவுளை நான் திட்டியிருக்கிறேன். அவர்களிடம் இப்போது நான் மன்னிப்பு கேட்க நினைத்தால், என்னைவிட பெரிய கோழை வேறு யாரும் இருக்க முடியாது. இவனுடைய இறுதி காலம் வந்துவிட்டதால், மன்னிப்பு கேட்கிறான் என்று நினைப்பார்கள்” என்றார் பகத்சிங்.

சிறைச்சாலையின் கடிகாரம் ஆறு மணியைக் காட்டியதும், கைதிகளின் ஓலக்குரல் தொலைவில் இருந்து கேட்டது. அத்துடன் காலணிகளின் கனமான ஓசையும் ஒலித்தது.

அத்துடன், பாடலும் கேட்டது. “தியாகத்தின் ஆசையே எங்கள் இதயத்தில் உள்ளது” என்ற பொருள் கொண்ட பாடல் அது.

“இன்குலாப் ஜிந்தாபாத்” என்றும், “ஹிந்துஸ்தான் ஆஜாத் ஹோ” (“புரட்சி ஓங்குக”, “இந்தியா விடுதலை வேண்டும்”) என்ற முழக்கங்கள் எழுந்தன.

உலக வரலாற்றில் தூக்குக் கொட்டடியில் ஏராளமான வீரர்கள் தியாகம் உள்ளது.
ஆனால், கயிரை கழுத்தில் மாட்டும் போதும் பகத்சிங் ஓர் தேர்ந்த படைப்பாளியை போல சிறிய கவிதையை படைத்தான்.

அது:
…அந்த கண்களை கட்டும்
கருப்பு துணியை
அவிழ்த்துவிடுங்கள்;
என் கண்கள் என் தாய் மண்ணை
பார்த்தவாரே உயிர் பிரியட்டும்…….!

பகத்சிங் இந்திய வரலாற்றின் பிறப்பும் அல்ல மரணமும் அல்ல; புதிய சிந்தனையின் துவக்கம்.

நன்றி: முகநூல் பதிவு

You might also like