வதந்தியின் பின்விளைவு தெரியாமல் எப்படிப் பதிவிடலாம்?

புலம்பெயர் தொழிலாளர் வழக்கில் நீதிமன்றம் கண்டனம்

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் வடமாநில தொழிலாளர்கள், தமிழகத்தில் தாக்கப்படுகின்றனர் என்று பொய்யான வதந்திகள் பரவின.

இதனை அடுத்து தமிழக அரசு துரிதமாக நடவடிக்கை எடுத்து இது வெறும் வதந்தி பிரமாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என உறுதிப்படுத்தினர்.

அந்த சமயம் பாஜக தேசிய பிரமுகரும் வழக்கறிஞருமான பிரசாந்த் உம்ராவ் என்பவர் தனது சமூக வலைத்தளத்தில், பிற மாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப்படுகிறார்கள் என பொய்யான வதந்தி வீடியோவை பரப்பினார்.

இதனால் அவர் மீது தமிழகத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்குப்பதிவை அடுத்து, டெல்லி நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு மனு அளித்து இருந்தார்.

இந்த வழக்கு தமிழகத்தில் பதியப்பட்டு இருப்பதால் தமிழக நீதிமன்றத்தை நாட டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை அடுத்து, மதுரை உயர்நீதிமன்றத்தில் பிரசாந்த் உம்ராவின் முன்ஜாமீன் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

இன்று விசாரணையின் போது பிரசாந்த் உம்ராவ் நேரில் ஆஜராகவில்லை. அவரது வழக்கறிஞர் வாதிடுகையில், ”பிரசாந்த் உம்ராவ் அந்த வீடியோவை தயார் செய்யவில்லை.

அவர் டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்யமட்டும் செய்தார். பிரசாந்த் உம்ராவ் ஒரு கட்சி பிரமுகர் என்பதால் அரசியல் உள்நோக்கத்தோடு இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே முன்ஜாமீன் வழங்க வேண்டும்” என வாதிடப்பட்டது.

இந்த வழக்கு விசாரணையில் நீதிபதி, ”வதந்தி வீடியோ பதிவிட்டவர் வழக்கறிஞர். அவருக்கு இந்த விவகாரத்தின் தீவிர தன்மை தெரியாதா? அவருக்கு சமூக பொறுப்பு இல்லையா என கடிந்து கொண்டது.

அதற்கடுத்து வாதிட்ட அரசு வழக்கறிஞர், அமைதியாக இருக்கும் தமிழகத்தில் இது போன்ற தகவல்களை பரப்பி அசாதாரணமான சூழலை உண்டு செய்ய நினைக்கிறார்கள். அதனால், இவருக்கு முன்ஜமீன் வழங்கக் கூடாது” என வாதிடப்பட்டது. இதன் பிறகு தீர்ப்புக்காக வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

You might also like