தமிழகத்தில் பரவி வரும் இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சலுக்கான சிகிச்சை மற்றும் தடுப்பு முறைகள் குறித்த வழிகாட்டுதல்களை பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
இது தொடா்பாக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள வழிகாட்டி நெறிமுறைகளில், “இன்ஃப்ளூயன்ஸா தொற்று அண்மை காலமாக வேகமாக பரவி வருகிறது. பருவ காலங்களில் அதன் பரவல் அதிகமாகக் காணப்படுகிறது.
குழந்தைகளுக்கும், 65 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கும் தொற்றின் தாக்கம் தீவிரமாக உள்ளது. அறிகுறிகள், நோயின் தீவிரத்தைப் பொருத்து அவா்களுக்கு சிகிச்சையளிக்க வேண்டும்.
லேசான காய்ச்சல், இருமல், தொண்டை வலி, உடல் வலி உள்ளவா்களுக்கு பரிசோதனை தேவையில்லை. ஓசல்டாமிவிர் மருந்துகளும் அவா்களுக்கு அவசியமில்லை. வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டால் போதுமானது.
அதேவேளையில், முதியவா்கள், குழந்தைகள், கா்ப்பிணிகள், இணை நோய் உள்ளவா்களுக்கு அத்தகைய பாதிப்பு ஏற்பட்டால் தேவையின் அடிப்படையில் ஓசல்டாமிவிர் மருந்துகளை மருத்துவரின் பரிந்துரையுடன் உட்கொள்ளலாம்.
மூச்சுத் திணறல், நெஞ்சு வலி, சளியில் ரத்தம் கலந்து வருதல், மயக்க நிலை உள்ளிட்ட தீவிர பாதிப்புகள் உள்ளவா்களுக்கு உடனடியாக பரிசோதனை செய்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்க வேண்டும்.
மருத்துவா்கள், மருத்துவப் பணியாளா்கள், செவிலியா்கள், துப்புரவுப் பணியாளா்கள், பொதுமக்கள் என அனைவரும் முகக்கவசம் அணிதல் அவசியம்.
அதேபோன்று மருத்துவத் துறையினா், கா்ப்பிணிகள், சுவாச நோய் பாதிப்புகளுடைய குழந்தைகளுக்கு தடுப்பூசி முக்கியம்.
நோய்த் தடுப்பு விதிகளை முறையாகப் பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும்” என்றுக் குறிப்பிடப்பட்டுள்ளது.