2022-23-ம் கல்வியாண்டிற்கான 12ம் வகுப்பு பொதுத் தேர்வு இன்று தொடக்கம்!

தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு 2022-23-ம் கல்வியாண்டிற்கான பொதுத் தேர்வு இன்று தொடங்கி ஏப்ரல் 3-ம் தேதி முடிவடைகிறது.

இந்தத் தேர்வினை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து 8 லட்சத்து 51 ஆயிரத்து 303 பேர் எழுதுகின்றனர். இவர்களில் தமிழ்நாட்டு பள்ளிகளில் இருந்து 4 லட்சத்து 3 ஆயிரத்து 156 மாணவர்கள், 4 லட்சத்து 33 ஆயிரத்து 436 மாணவிகள், மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் என 8 லட்சத்து 36 ஆயிரத்து 593 பேர் எழுதுகின்றனர். மொத்தம் 3,185 மையங்களில் தேர்வினை எழுத உள்ளனர்.

இந்த தேர்வினை எந்தவித புகாரும் இல்லாமல் நடத்துவதற்காக மாநில அளவில் பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் அலுவலர்கள் மாவட்டங்களுக்கு மேற்பார்வை பணிக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

 12-ம் வகுப்பு பொதுத் தேர்வினை எழுதும் மாற்று திறனாளிகள் 5,206 பேருக்கு தனி அறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அவர்களுக்கு சொல்வதை எழுதுபவர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அரசின் உத்தரவின் படி அவர்களுக்கு சலுகைகளும் வழங்கப்பட்டுள்ளன.

தேர்வு மையங்களில் குடிநீர், இருக்கை, மின்சாரம், காற்றோட்டம், வெளிச்சம், கழிப்பிட வசதிகளை சிறப்பான முறையில் அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

  11, 12ஆம் வகுப்பு மாணவர்கள், தேர்வர்கள், பொதுமக்கள் தங்களது புகார்கள், கருத்துக்கள் மற்றும் ஐயங்களை தெரிவித்து பயன்பெற வசதியாக அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் முழுநேரத் தேர்வுக் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

தேர்வுக் காலங்களில் ஒவ்வொரு நாளும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை இக்கட்டுப்பாட்டு அறையினை 9498383081, 9498383075 ஆகிய எண்களில் தொடர்புக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்காக பள்ளிக்கல்வித்துறை பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்துள்ளன.

அந்த வகையில், தேர்வு மையமாக செயல்படகூடிய பள்ளிகளில் காலையில் வகுப்புகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தேர்விற்கான பாடத்தை கற்பிக்கும் ஆசிரியர்களை தேர்வினை கண்காணிக்கும் பணியில் நியமிக்க கூடாது, தேர்வுத்துறையால் வழங்கப்படும் அடையாள அட்டையை கட்டாயம் அணிந்திருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

தேர்வின்போது பறக்கும்படையில் பணியில் அமர்த்தப்படும் ஆசிரியர்கள் தங்களது பணியின்போது தேர்வர்களை அச்சமுறும் வகையில் நடத்தக்கூடாது. தேர்வு மையத்தில் யாரும் செல்போன்களை பயன்படுத்தக் கூடாது. தேர்வு கண்காணிப்பு பணியில் ஈடுபடும் அலுவலர்களும் செல்போன் பயன்படுத்தக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், தேர்வர்களின் மனநிலை, உடல்நிலை, தேர்வெழுதும் நேரம் பாதிக்காத வகையில் செயல்படுதல் வேண்டும். தேர்வர்கள் கண்ணியமாக நடத்தப்படுதல் வேண்டும். சந்தேகத்திற்குரிய தேர்வர்களிடம் மட்டும் சோதித்தல் போதுமானது என்று அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

காலையில் 10 மணிக்கு மாணவர்களுக்கு கேள்வித்தாள் வழங்கி படிக்க அறிவுறுத்தவும், காலை 10 மணி 10 நிமிடத்திற்கு விடைத்தாள் கொடுத்து அதனை பூர்த்திச் செய்யவும் கூற வேண்டும். காலை 10 மணி 15 நிமிடத்திற்கு தேர்வுகள் துவக்கப்பட்டு, மதியம் 1 மணி 15 நிமிடம் வரையில் தேர்வு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like