மீண்டும் சசிகுமார்!

‘என்னங்கடா நொண்ணைகளா’ என்ற வசன உச்சரிப்போ, ‘ஹேஹேஹே…’ என்ற சிரிப்போ, அத்தனையையும் மீறி தன்னையுமறியாமல் தாடியைத் தடவும் சுபாவமோ தமிழ் ரசிகர்களுக்கு சசிகுமாரை நினைவுபடுத்திவிடும்.

‘சுப்பிரமணியபுரம்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு ‘நாடோடிகள்’, ‘போராளி’, ’சுந்தர பாண்டியன்’, ‘குட்டிப்புலி’ என்று அவர் நடித்த படங்களனைத்தும் பெரும் வரவேற்பைப் பெற்றன.

கம்பெனி புரொடக்‌ஷன்ஸ் சார்பாக அவர் தயாரித்த படங்கள் ரசிகர்களின் கவனிப்புக்கு உள்ளானது. பல இயக்குனர்களிடத்தில் தயாரிப்பாளர் ஆகும் வேட்கையைத் தூண்டிவிட்டது.

ஆனால், கடந்த சில ஆண்டுகளாக அந்த நிலைமை தலைகீழானது. அடுத்த பாக்யராஜ், டி.ராஜேந்தர் என்று புகழப்பட்ட சசிகுமார் நடித்த படங்கள் திரையரங்குகளுக்குச் சென்ற வேகத்தில் திரும்பி வந்தன.

’தன்னுடைய பாணி எது’ என்று தன் கடந்த காலப் படங்களைத் திரும்பிப் பார்த்து அலசும் அளவுக்கு ஆனது சசிகுமாரின் நிலை, ‘அயோத்தி’ எனும் ஒரே படத்தால் அந்த எண்ணவோட்டம் அடியோடு மாறியிருக்கிறது.

வெற்றியும் சரிவும்..

2000க்கு பிறகு, நகர்ப்புறத்து காதல்களும் அடிதடிகளும் மட்டுமே தமிழ் சினிமாவில் இடம்பெற முடியும் என்ற சூழல் உருவானது. அப்படி ஒற்றைக் கிளை விரிப்பது தமிழ் திரைப்படப் படைப்பாளிகளின் வழக்கமல்ல என்று ‘சுப்பிரமணியபுரம்’ தந்தார் சசிகுமார்.

எண்பதுகளில் நிகழ்வதாக கதை அமைக்கப்பட்டாலும், திரைக்கதையில் காட்டப்பட்ட நிகழ்வுகள், பேச்சுப்பொருள் எல்லாமே 2கே கிட்ஸ் அறிய இயலாத பொக்கிஷங்களாக இருந்தன.

மெட்ரோ நகர வாழ்வின் சாயல் சிறிதும் இல்லாத கதைகளுக்கான வாய்ப்பை ’சுப்பிரமணியபுரம்’ அதிகப்படுத்தியது.

அதனாலேயே, அதன்பிறகு சசிகுமார் நாயகனாக நடித்த அத்தனை படங்களும் வெற்றியடைந்தன. தமிழ்நாட்டிலுள்ள பெரும்பாலான திரையரங்குகளில் முதல் நாள் படக்காட்சிகள் ‘ஹவுஸ்ஃபுல்’ ஆகும் சிறப்பைப் பெற்றன அப்படங்கள்.

மிகவும் நல்லவனாக, அதேநேரத்தில் வம்பு வந்தால் சண்டைக்கோழியாக மாறுகிற எளிய கிராமத்தான் என்ற ‘டெம்ப்ளேட்’டில் சசிகுமாரின் படங்கள் இருந்தன.

எண்பதுகளில் விஜயகாந்த், பிரபு, கார்த்திக் என்று பலர் இது போன்ற கதைகளில் நடித்திருக்கின்றனர்; ராமராஜன் புகழ் பெற வழியமைத்துக் கொடுத்ததும் இது போன்ற கதைகளே. அந்த பயத்தாலோ என்னவோ, அந்த ‘டெம்ப்ளேட்’டில் இருந்து விலக விரும்பினார் சசிகுமார்.

நகரத்து ஆணாக சசிகுமார் தோன்றுவதேயில்லை. வண்ணமயமான உடைகள் அணிவதே இல்லை.

நாயகியோடு சேர்ந்து நடனம் ஆடுவதே இல்லை என்று அவரை வழக்கமான கமர்ஷியல் ஹீரோவாக்க துடித்தன சிலரது குற்றச்சாட்டுகள். அதன் எதிரொலியாக, 2014இல் வெளியான ‘பிரம்மன்’ படத்தில் நடித்தார்.

சூரி, சந்தானம் என்ற இரண்டு நகைச்சுவை நடிகர்கள் இருந்தும், விஜய் நடித்த ‘ஷாஜகான்’ பாணியில் அமைந்த அப்படம் வரவேற்பைப் பெறவில்லை.

’நமக்கு இந்த ரூட் வேண்டாம்’ என்று பாதை மாற நினைத்தபோதும், அடுத்த ஆண்டில் சசிகுமார் நடித்து எந்த படமும் வெளிவரவில்லை.

அந்த அளவுக்குப் பாலாவின் ‘தாரை தப்பட்டை’யில் மூழ்கி முத்தெடுத்தார். அனைவருமே சிறப்பாக நடித்தபோதும், மீண்டும் ஒருமுறை திரையரங்குக்கு வரும் யோசனையை அறுத்தெறியும் வகையிலேயே அப்படத்தின் கதையமைப்பு இருந்தது.

அதனைத் தொடர்ந்து வந்த ‘வெற்றிவேல்’ நல்லதொரு கமர்ஷியல் பட அனுபவத்தைத் தந்தபோதும், ‘ஒரேமாதிரியா நடிக்குறாரு’ என்ற குற்றச்சாட்டால் கவனிக்கப்பெறாமல் போனது.

சசிகுமாரை ஒரு ஆக்‌ஷன் ஹீரோவாக ‘கிடாரி’ மறுஉருவாக்கம் செய்தபோதும், தனது நகைச்சுவைத் திறனை வெளிப்படுத்துவதற்காக அவர் தயாரித்து நடித்த ‘பலே வெள்ளையத்தேவா’ பலன் தரவில்லை.

அந்த ஒரே ஆண்டில் சசிகுமார் பெற்ற வெற்றிகளும் தோல்விகளும், திரையுலகில் அவரது இருப்பையே ஆட்டம் காணச் செய்துவிட்டது.

ரசிகர்கள் மத்தியில் சசிகுமாருக்கு என்றிருந்த ‘டெம்ப்ளேட் இமேஜ்’ உடன் 2017 டிசம்பரில் ‘கொடிவீரன்’ ரிலீஸானது. ஆனால், அதுவரையில் அவரது தயாரிப்பு நிறுவனம் சந்தித்த நிதி நெருக்கடி தனிப்பட்ட முறையிலும் அவர் இழப்புகளை எதிர்கொள்ளக் காரணமானது.

2018 முதல் 2022 வரையிலான நான்காண்டு காலத்தில் சசிகுமார் நடித்த படங்கள் அனைத்துமே, 2009 முதல் 2014 வரை வெளியான அவரது படங்களின் சாயலில் அமைந்தவைதான்.

அவற்றைப் பார்த்துச் சலித்தவர்கள் எண்ணிக்கை அதிகமானபோது, ’அசுரவதம்’ போன்ற முற்றிலும் வேறாக இருந்த படங்கள் கூட கவனிப்பைப் பெறாமல் போனது.

அயோத்தியின் வேறுமுகம்!

கடந்த மார்ச் 3ஆம் தேதியன்று எவ்வித முன்னறிவிப்புகளும் இல்லாமல் திரையரங்குகளில் வெளியானது ‘அயோத்தி’.

சசிகுமார் குறித்த திரைப்படச் செய்திகளில் கூட, அது குறித்த தகவல்கள் பெரிதாக இடம்பெறவில்லை.

டீசரும் ட்ரெய்லரும் மட்டும் கொஞ்சம் வித்தியாசமான படமாக இருக்குமோ என்ற எண்ணத்தை ஏற்படுத்தின.

அதையும் மீறி, இது சசிகுமாரின் வழக்கமான ‘டெம்ப்ளேட்’டில் அமைந்த படம் என்ற எண்ணம் மேலெழுந்தது.

‘அயோத்தி’யில் இடம்பெற்ற சசிகுமாரின் அறிமுகக்காட்சி வரை அந்த எண்ணத்தில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால், அதன்பிறகு ஒண்ணேமுக்கால் மணி நேரம் அப்படம் தந்த அனுபவம் நிச்சயம் புதுரகம்.

கொஞ்சம் கூர்ந்து பார்த்தால், இப்படத்திலும் சசிகுமாரின் பாத்திரச் சித்தரிப்பில் முந்தைய படங்களின் தாக்கம் இருக்கும்.

‘நீங்கள் நடிக்கிறீர்கள் என்றால் அப்பாத்திரம் மற்றவர்களுக்கு உதவக்கூடியது என்பதைச் சொல்லத் தனியாகக் காட்சிகள் வைக்க வேண்டியிருக்காது’ என்று இயக்குனர் ஆர்.மந்திரமூர்த்தி தன்னிடம் கூறியதாக ஒரு நேர்காணலில் கூறியிருக்கிறார் சசிகுமார்.

நாடோடிகள், போராளி, சுந்தரபாண்டியன் என்று பல படங்களில் அவர் ஏற்ற கதாபாத்திரங்களின் அடிப்படைத்தன்மையே அதுதான். அதனை வெளிப்படையாகச் சொல்லாதது மட்டுமே ‘அயோத்தி’ திரைக்கதையில் நிகழ்ந்திருக்கிறது.

’அயோத்தி’யில் கால்வாசி பகுதி இந்தி வசனங்களே இடம்பெற்றுள்ளன. ஏனென்றால், இந்தி பேசும் ஒரு குடும்பத்தினர் அயோத்தியில் இருந்து ராமேஸ்வரம் வருவதுதான் மையக்கதை.

அவர்கள் பேசும் மொழி கொஞ்சமும் புரியாதபோதும், அவர்களுக்கு சசிகுமார் பாத்திரம் உதவுவதுதான் திரைக்கதையில் மாற்றம் ஏற்படுத்தும்.

அதோடு, இந்துத்துவ ஆதிக்கமும் இஸ்லாமியர்கள் மீதான வெறுப்பும் மிக மெலிதாக காட்சிகளில் வெளிப்பட்டிருக்கும்.

மிக முக்கியமாக, இதுநாள்வரை தமிழ்ச் சமூகத்தில் தமிழ் முஸ்லிம்கள் எப்படிப்பட்ட நிலையில் இருந்து வருகின்றனர் என்பதைக் காட்டியுள்ளது ‘அயோத்தி’.

அண்டை மாநிலங்களாக இருந்துவரும் கேரளா, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகாவிலுள்ள முஸ்லிம் மக்களின் வாழ்க்கைமுறையில் இருந்து இங்குள்ள முஸ்லிம்களின் வாழ்வு வேறானது.

குறிப்பாக, உருது மொழி பேசுவதால் முஸ்லிம்களுக்கு இந்தி எளிதாகப் புரியும் என்ற கருத்தாக்கம் இதில் உடைக்கப்பட்டுள்ளது.

சீறாப்புராணம் காலந்தொட்டு தமிழ் மண்ணில் வாழும் முஸ்லிம்களுக்கென்று தனித்துவமான கலாசாரம் உண்டென்பதை நுணுக்கமாகக் கூறியுள்ளது.

இரண்டாவது முறை படம் பார்க்கும் பட்சத்தில், அதனை நம்மால் உணர முடியும். அந்த வகையில், மீண்டுமொரு முறை ‘மண்ணின் மைந்தன்’ பாத்திரத்தைத் தந்துள்ளார் சசிகுமார்.

கவனிக்காமல்போகும் அவலம்!

ஒரு நல்ல திரைப்படம் கவனிப்புக்கு உள்ளாகாமல் போகும்போது உண்மையான ரசிகன் ரொம்பவே வருத்தப்படுவான்.

சம்பந்தப்பட்ட நடிகர் நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்புக்கு மரியாதை கிடைக்காமல் போவதோடு, அடுத்தடுத்த வாய்ப்புகள் இல்லாமல்போகும் நிலைமையையும் அது ஏற்படுத்திவிடும்.

ஒரு இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் வெற்றிகள் பல பெற்ற சசிகுமார், அப்படியொரு நிலைமையை எதிர்கொண்டபோது நிச்சயம் நொந்து போயிருப்பார். அவரது கடந்தகாலக் காயங்களுக்கு மருந்திட்டுள்ளது ‘அயோத்தி’.

அதேபோல, சசிகுமாரின் முந்தைய படங்கள் ஏன் கொண்டாடப்பட்டன என்ற காரணத்தையும் தெளிவுபடுத்தியுள்ளது ‘அயோத்தி’.

அவர் ஒரு கதாநாயகன் அல்ல; கதையின் நாயகன். அவரால், இந்த மண்ணில் விரவியிருக்கும் பல நூறு கதைகள் திரை வடிவம் பெற வேண்டும்.

அச்சிந்தனைக்கு உரமிட்டுள்ளது எனும் வகையில், அயோத்தியையும் சசிகுமாரையும் தமிழ் சினிமா ரசிகர்கள் இன்னும் அதிகமாகக் கொண்டாடத்தான் வேண்டும்!

– உதய் பாடகலிங்கம்

You might also like