பிரதமர் தலைமையில் ஆலோசனை!
இந்தியாவில் கோடை வெயில் உச்சத்தில் இருக்கும் ஏப்ரல், மே மாதங்களில் அனல் காற்று வீசுவதும் அதிகரிக்கும். இதனால், கால்நடைகள், மனிதா்கள் உயிரிழப்பு ஏற்படும் அபாயமும் அதிகம் உள்ளது.
இந்நிலையில், கோடைக் காலத்தின் கடுமையான வெயிலை எதிர்கொள்வதற்காக தேசிய அளவில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பிரதமா் மோடி தலைமையில் உயா்நிலை ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.
இதில், வெயிலின் தாக்கம் குறித்து விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொள்வது, உள்ளாட்சி அமைப்புகள் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மருத்துவம் சார்ந்த முன்னேற்பாடுகள், குடிநீா் தட்டுப்பாடு வராமல் பாதுகாப்பது,
தீ பரவல் தடுப்பு நடவடிக்கை, பேரிடா் மேலாண்மை குழுவினரின் தயார் நிலை, பயிர் உற்பத்தியில் வெயில் ஏற்படுத்தும் தாக்கம் தொடா்பாக இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
அப்போது அனைத்து இடங்களிலும் போதுமான உணவு தானியங்களை கையிருப்பு வைத்திருக்க இந்திய உணவுக் கழகத்துக்கு அறிவுறுத்தப்பட்டது.
வானிலை முன்னறிவிப்புகளை குறித்த காலத்தில் துல்லியமாக வழங்க வானிலை ஆய்வு மையத்துக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.
இது தவிர நாளிதழ்கள், தொலைக்காட்சி சேனல்கள், வானொலிகளும் மக்களிடம் வெயில் அதிகரிப்பு தொடா்பான தகவல்களை முறையாக எடுத்துச் செல்ல கேட்டுக் கொள்ளப்பட்டதாக தெரிகிறது.