பிரதமருக்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் கடிதம்!
சிபிஐ, அமலாக்கத்துறை போன்ற விசாரணை அமைப்புகளை தவறாக பயன்படுத்த வேண்டாம் என ஒன்பது எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் சேர்ந்து பிரதமர் மோடிக்கு கடிதத்தை எழுதியுள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளாக சி.பி.ஐ, அமலாக்கத்துறை, லஞ்ச ஒழிப்புத்துறை ஆகிய விசாரணை அமைப்புகள் ஆளும் பாஜவின் கைப்பாவையாக இருந்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இதேப்போன்று பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் அவர்களுக்கு ஆதரவான ஆளுநர்களை நியமித்து அம்மாநில அரசுகளுக்கு பெரும் நெருக்கடிகளை ஒன்றிய அரசு கொடுத்து வருகிறது.
இந்த நிலையில் விசாரணை அமைப்புகளின் நடவடிக்கைகள் குறித்து ஒன்பது தேசியக் கட்சிகளின் தலைவர்கள் பிரதமர் மோடிக்கு புகார் கடிதத்தை எழுதி அனுப்பி வைத்துள்ளனர்.
அதில், தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவ், மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான், பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ்,
தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சரத்பவார், தேசிய மாநாட்டுக் கட்சியைச் சேர்ந்த பரூக் அப்துல்லா, சிவசேனா கட்சியைச் சேர்ந்த உத்தவ் தாக்கரே, சமாஜ்வாடி கட்சியைச் சேர்ந்த அகிலேஷ் யாதவ் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.
அந்த கடிதத்தில், இந்தியா ஜனநாயக நாடு என்பதை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்கள் என்று நம்புகிறோம் என்றும்,
எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக ஒன்றிய அமைப்புகள் அப்பட்டமாக பயன்படுத்தப்படுவது நாம் ஜனநாயகத்தில் இருந்து ஏதேச்சதிகாரத்திற்கு மாறிவிட்டோம் என்பதை உணர்த்துகிறது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
இதேபோல் தனது அதிகாரத்தில் எதிர்க்கட்சிகளில் உள்ளவர்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுகளைக் கூறி,
அவர்களை அச்சுறுத்தி பாஜகவில் இணைப்பதற்கான பணிகளை பாஜகவினர் துரிதமாக செயல்படுத்துகின்றனர் எனக் குற்றம்சாட்டியுள்ள எதிர்க்கட்சியினர், அதற்கு அஸ்ஸாம் முதலமைச்சர் உள்ளிட்ட பலரை பட்டியலிட்டுள்ளனர்.