அன்றும் இன்றும் என்றுமே தக்காளி சேர்க்காத சமையல் என்பதே அபூர்வம். ஆனால் இன்றைய தக்காளி எப்படியிருக்கிறது? என்று சுவையாக எழுதியுள்ளார் பத்திரிகையாளர் செ. இளங்கோவன்.
நான் சிறுவனாக இருந்த சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு, எங்கள் கிராமத் தோட்டங்களில் விளைந்த தக்காளியின் சுவையே அலாதி.
இன்றுபோல் அன்றைய தக்காளிகளெல்லாம் ஏதோ தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டதுபோல் ஒரே அளவில் அழகாக இருந்ததில்லை. அன்றைய தக்காளிகளெல்லாம் வெவ்வேறு அளவுகளில் வெவ்வேறு தினுசாகத்தான் இருந்தன.
தக்காளிச் செடி என்று சொன்னாலும் கொடியாகத்தான் தரையில் படரும்.
இன்றைக்குப்போல் நெட்டுக்குத்தாக விரைத்துக் கொண்டு நிற்காது.
என் சிறுவயதில் தக்காளிப் பழத்தை அப்படியே செடியிலிருந்து பறித்து, நகத்தால் தோலைக் கிள்ளி உரித்துவிட்டுச் சாப்பிடுவேன். புளிப்பான அந்தச் சுவையே அலாதி.
அன்றைய பெண்கள் அவசரமாகக் குழம்பு வைக்க வேண்டுமென்றால், சில தக்காளிகளை மண்சட்டியில் பறித்துப்போட்டு, அதனுடன் பச்சை மிளகாய், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வேகவைப்பார்கள்.
வெந்ததும் மத்தால் நன்றாகக் கடைவார்கள். பிறகு, மாடு பூட்டி மரச்செக்கில் ஆட்டிய நல்லெண்ணெய்யைத் தாராளமாக விட்டு, கடுகு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டுவார்கள்.
தட்டில் சோற்றைப் போட்டு, அதில் கடைந்த தக்காளிச் சாறை ஊற்றிப் பிசைந்து சாப்பிட்டால்… தேவாமருதம் என்று சொல்லப்படுவதெல்லாம் தோற்றுப் போகும்.
அன்றைய தக்காளியைக் கடையும்போது அதன் தோலெல்லாம் ஏதோ காகிதத்தைச் சுருட்டிப் போட்டதுபோல் சுருண்டு சுருண்டு குழம்பில் தனியாகக் கிடக்கும்.
அதை எடுத்துப் போட்டுவிட்டுச் சாப்பிடவும் வசதியாக இருக்கும். இன்றைய தக்காளியையும் அதன் தோலையும் பிரிக்கவே முடியாது போலிருக்கிறது. அன்றைய தக்காளி மூன்று நான்கு நாட்களில் வாடி வதங்கி கெட்டுப்போகும்.
இன்றைக்கு? பறித்துப் பத்து நாட்களானாலும் பளபளப்புக் குறையாமல் அப்படியேதான் இருக்கின்றன. சுவைதான் காணாமல் போய்விட்டது.