பாகுபாடு எந்த வடிவிலும் வேண்டாம்!

மார்ச் 1 – உலகளாவிய பாகுபாடு ஒழிப்பு தினம்

‘சாதிகள் இல்லையடி பாப்பா குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்’ என்று பாடினார் பாரதி. அவர் பாடி நூறாண்டுகள் கடந்தபின்னும் அந்த பாகுபாட்டைக் கடந்து செல்லப் போராடுகிறோம்.

சாதி என்றில்லை மதம், பாலினம், மொழி, இனம், பொருளாதார நிலை, புலம்பெயரும் சூழல், நோய்க்கூறுகள் என்று பலவற்றைச் சார்ந்து நமக்குள் நாமே பாகுபாடு காட்டி வருகிறோம்.

பாதிப்புக்குள்ளானவர் இது எப்போது ஒழியும் என்று மனதுக்குள் மாய்வதும், பாதிப்பைத் தந்தவர் அதனை உணராமல் தம் வழி செல்வதும் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது.

சமத்துவச் சமுதாயத்தை நோக்கி அடியெடுத்து வைப்பதாகப் பல ஆண்டுகளாகச் சொல்லிவரும் இந்த உலகம், எப்போது இந்த பாகுபாடுகளில் இருந்து விடுபடும்?

எல்லாவற்றிலும் பாகுபாடு!

நூற்றாண்டுகளாக மனிதத் தோலின் நிறத்தை அடிப்படையாகக் கொண்டு பாகுபாடு காட்டும் வழக்கம் இப்பூமியில் இருந்து வருகிறது.

கருப்பு நிறத்தவர்களைக் கீழானவர்களாகவும் கொஞ்சம் வெளுத்த தோலுடையவர்களை மேலானவர்களும் கருதும் பழக்கம் தொடர்கிறது. இன்றும் அந்த உணர்வு குறைந்தபாடில்லை.

அதனாலேயே, கருப்பு நிறத்தில் இருந்து சிவப்பு நிறத்துக்கு மாறச் செய்யும் கிரீம்களின் பொய்முகம் தொடர்ந்து நமக்கு ‘ப்பே.. ப்பே..’ காட்டுகிறது.

கருப்பும் ஒரு வண்ணம் தான் என்று வக்காலத்து வாங்குபவர்களில் பலர் சிவப்பு வண்ணத்தவரைக் கவரவும் தமது சந்ததியினராவது அவர்களைப் ஆக வேண்டுமென்பதில் காட்டும் ஆர்வத்தில் சிறு பங்கைக் கூட அதுவும் ஒரு வண்ணமே என்று கடந்து செல்லப் பயன்படுத்துவதில்லை.

இன்னும் சிலர் தங்களது உயர்வு நவிற்சியை வெளிப்படுத்த ‘கருப்பே அழகு காந்தளே ருசி’ என்று சொல்லிச் சென்றிருக்கிறார்கள்.

மேலிருந்து பல கைகள் அழுத்தும்போது அதற்கிணையான ஆற்றலை எதிர்க்கப் பயன்படுத்துவதில் எந்தவிதத் தவறுமில்லை.

இன்ன சாதி, இன்ன மதம் என்றால் இப்படித்தான் குணம் இருக்கும் என்று கணிப்புகளை வாரியிறைப்பவர்கள் இன்றும் நம்மோடு வாழ்கின்றனர்.

அந்த சிந்தனையை வளர்க்கும்விதமாகவே, பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் இளையதலைமுறையின் கைகளின் வண்ணக் கயிறுகள் அணியும் வழக்கம் வேரூன்றியிருக்கிறது.

அதேநேரத்தில், தமது இறை நம்பிக்கை சார்ந்து பலர் கயிறுகளைக் கட்டிக்கொள்வதையும் இதையும் குழப்பிக்கொள்ளக் கூடாது என்பதை உணர்வதும் அவசியம்.

உங்கள் செயல்பாட்டின் பின்னணியில் இருப்பது பாகுபாடு காட்டும் எண்ணமா என்பதுதான் இரண்டுக்குமான வித்தியாசம்.

‘குள்ளனை நம்பாதே’, ‘வஞ்சனை இருந்தா தான் உடம்புல சதை பிடிக்காது’ என்று உடல் தோற்றம் சார்ந்து பலவித கற்பிதங்கள் இங்குள்ளன.

‘பெண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும்’, ‘பெண் பலவீனமானவள்’ என்பது போன்ற சொல்லாடல்களும் நிறைய உண்டு.

இது தவிர ஏழை பணக்காரன், உள்ளூர்காரன் வெளியூர்காரன் வேறுபாடுகளும் உண்டு.

இன்று, தமிழ்நாட்டின் ஒவ்வொரு ஊரிலும் வட இந்தியாவில் இருந்து வேலை செய்யப் பலர் வந்திருக்கின்றனர்.

‘வடக்கன்’ என்ற ஒரே சொல்லால் அவர்களது மொழி, மாநில வேறுபாடுகளை அகற்றினாலும், நாம் அவர்கள் மீது காட்டுவது வெறுப்பே. அவர்கள் நம்மைவிட ஏழைகளாக இருப்பதும் ஒரு காரணம்.

அருவெருப்பூட்டும் உடலுழைப்பு!

பாகுபாடு காட்ட மாட்டேன் என்று உறுதிமொழி அளிப்பவர் கூட, சில நேரங்களில் தன்னையும் அறியாமல் அதனைச் செய்யக்கூடும்.

சாதி மதம் இனம் முதல் மனிதரைப் பாகுபாட்டுக்கு உள்ளாக்கும் பல்வேறு காரணிகளை நன்குணர்ந்து, அதனைத் தவிர்ப்பவராகவும் அவர் இருக்கக்கூடும். அப்படியானால், அந்த இடத்தில் எப்படி பாகுபாடு முளைக்கிறது?

கொஞ்சம் யோசித்துப் பார்த்தால், உடலுழைப்பு சார்ந்து உழைப்பவர்களிடம் பாகுபாடு காட்டி வருவது புரியவரும்.

நேற்றுவரை தொழிலாளியாக இருந்து இன்று முதலாளியானவர் கூட, வியர்த்து விறுவிறுத்து தன்னருகில் நிற்கும் தொழிலாளியை மேலும் கீழுமாகப் பார்க்கிறார்.

உடலுழைப்பைச் செலுத்துபவர் கீழானவர் என்றும், அவரிடத்தில் அந்த உழைப்பைப் பெறுபவர் மேலானவர் என்றும் எண்ணம் அவர் மனதின் அடியாழத்தில் இருப்பதே இதற்கான அடித்தளம்.

வீடு கட்டுவதற்காக, குடிநீர் இணைப்பிற்காக மற்றும் இன்னபிற காரணங்களுக்காக குழி தோண்டுபவர்களைச் சிறு வயதில் பார்த்திருக்கிறேன்.

வெயிலில் களைப்புற்று தண்ணீர் கேட்டு வாங்கிக் குடித்ததையும் கண்டிருக்கிறேன்.

நிரம்பித் ததும்பும் செம்பைக் கையில் வாங்கி முடிந்தவரை குடித்துவிட்டு, மீதம் எவ்வளவு இருந்தாலும் கீழே கொட்டுவதைப் பார்த்து குழம்பியிருக்கிறேன்.

அந்த காலத்தில் இன்றளவுக்கு ‘கேன் வாட்டர்’ கலாசாரம் இல்லை என்றபோதும், அந்த உழைப்பாளிகள் ஏன் அப்படிச் செய்தார்கள்?

தாகத்தை அடக்கிய கையோடு தம் மீது காட்டப்பட்ட பாகுபாட்டையும் பொசுக்கும்விதமாக செம்பில் மீதமிருந்த நீரைக் கவிழ்த்தார்கள் என்று இப்போது தோன்றுகிறது.

நோய் எவர்க்கும் வரும்!

அங்கக் குறைபாடுகளுடன் இருப்பவர்களைச் சக மனிதர்களாக கருத முடியாத அளவுக்கு, பாகுபாடு நம்முள் நிறைந்திருக்கிறது.

பேருந்திலோ, பொது இடங்களிலோ கூட்ட நெரிசலில் மாற்றுத்திறனாளிகள் சிக்கும்போது, அவர்களுக்கு இடம் தருவதாகச் சொல்லிகொண்டு அக்குறைகளைப் பற்றி பேசும் வழக்கம் இன்றும் இருக்கிறது.

அது அவர்களது தன்மானத்தோடு விளையாடும் செயல். அதற்குப் பதிலாக, நமது பார்வையாலும் வார்த்தைகளாலும் உடல்மொழியாலும் அவர்களைக் கூனிக் குறுகாமல் இருக்கவைக்க முனைவது சிறப்பான வழி.

அவர்களைச் சாதாரண மனிதராகக் கருதுவதாகக் காட்டிக்கொண்டு மிகமெலிதாக உங்களது இருக்கையை விட்டு எழுவதே போதுமானது.

முதலாவதைச் செய்வதால், நீங்கள் காட்டும் அதீத இரக்கம் பாகுபாடாகவும் மாற வாய்ப்புண்டு என்பதை உணர வேண்டும்.

காசநோய் முதல் கண்டால் பதறியோடச் செய்யும் பல நோய்களை மனித சமுதாயம் கண்டிருக்கிறது.

தொற்றும் நோய்கள், தொற்றா நோய்கள் என்ற வித்தியாசங்களைக் கண்டுணர்ந்தபிறகும் ஒருவரது உடல்குறைவு சார்ந்து பாகுபாடு காட்டுவதைச் சிலர் நிறுத்தியபாடில்லை. கொரோனா காலத்தில் உண்டான முகக்கவச கலாசாரம், அதை மேலும் அதிகப்படுத்தியுள்ளது.

இப்போதெல்லாம், யாராவது ஒருவர் தொடர்ச்சியாக இருமினால் அவரைச் சுற்றியுள்ளவர்கள் அருவெருப்பாகப் பார்க்கமலிருந்தால் அதிசயம்.

நோய் எவர்க்கும் வரும் என்ற உண்மை புரிந்தால், இப்படியொரு விளைவு நம்மிடம் இருந்து வெளிப்படாது.

உலகளவில் ‘பாகுபாடு ஒழிப்பு தினம்’ ஆண்டுதோறும் மார்ச் 1-ம் தேதியன்று கடைப்பிடிக்கப்படுகிறது. அந்த தினம் செயல்பாட்டிற்கு வந்ததன் காரணம், எய்ட்ஸ் நோயாளிகளை இந்த சமூகம் பாகுபாடு காட்டி ஒடுக்குகிறது என்பதுதான்.

2023ஆம் ஆண்டுக்கான ‘உலக பாகுபாடு ஒழிப்பு தினத்தின்’ கருப்பொருளாக ‘உயிரைக் காப்பாற்றுங்கள்: குற்றமற்றதாக்குங்கள்’ என்பது கொள்ளப்பட்டுள்ளது.

பாலியல் தொடர்பால் மட்டும் எய்ட்ஸ் வருவதில்லை என்ற பிரச்சாரம் எப்போதோ தொடங்கிவிட்டாலும், இன்றும் எய்ட்ஸ் நோயாளிகளின் தினசரி செயல்பாடுகளோடு இந்த சமூகம் ஒன்றிணைவதில்லை.

அப்படியே பாலியல் செயல்பாட்டால் ஒருவரை நோய் தொற்றினாலும், பாகுபாடின்றி அவரைச் சக மனிதராக நடத்த மாட்டேன் என்றிருப்பது சரியான வழிமுறையல்ல.

ஒரே பாலின உறவு முதல் பாலியல் தொழில் செய்பவர்களின் சுதந்திரமான வாழ்க்கை வரை பல விஷயங்களில் பாகுபாடு காட்டாமலிருப்பதற்கான பக்குவத்தைக் காட்ட நாம் நெடுந்தொலைவு பயணிக்க வேண்டியுள்ளது.

மிகச் சமநிலை கொண்ட ஒரு பரப்பில் இருந்துதான், இன்று பல்வேறு பாகுபாடுகளைக் கொண்ட சமுதாயம் எனும் நிலைக்கு வந்திருக்கிறோம்.

பாகுபாடுகளை அகற்றுவது பழமைக்குச் செல்வதல்ல; சிறப்பான நிலை நோக்கி நகர்வது. உலகம் இயல்பாக இயங்க, பாகுபாடுகளை முற்றாக ஒழிக்க வேண்டியது அவசியம்.

அருகில் இருக்கும் ஒரு மனிதரை நேர்கோட்டில் பார்க்க இயலாத ஒரு வாழ்க்கை நமக்கெதற்கு?!

உதய் பாடகலிங்கம்

You might also like