பிப்ரவரி 28 – தேசிய அறிவியல் தினம்
அறிவியலைக் கொண்டாட மனமில்லாதவர்கள், அவற்றின் பயன்களைக் கட்டாயம் தினசரி வாழ்வில் உணர்ந்திருப்பார்கள்.
ஒரு தேவையைப் பூர்த்தி செய்வதற்கான வழிமுறையைப் பகுத்தறிந்து செயல்படுத்துவதே அறிவியல். அப்படியொரு கண்டுபிடிப்புதான் காலகாலத்துக்கும் தீர்வளிப்பதாக அமையும்.
நோபல் பரிசு பெற்ற இந்திய அறிவியலாளர் சர் சி.வி.ராமன் நினைவாக, ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 28ஆம் தேதியன்று ‘தேசிய அறிவியல் தினம்’ ஆகக் கொண்டாடப்படுகிறது.
அறிவியல் மற்றும் தொழில்நுட்ப தொடர்புக்கான தேசிய கவுன்சில் முயற்சியினால், 1986ஆம் ஆண்டு முதல் இந்நாள் கொண்டாடப்படுகிறது.
இதனை முன்வைத்து பள்ளிகள், கல்லூரிகள் அளவில் பல்வேறு போட்டிகள், விவாதங்கள், கண்காட்சிகள் நடத்தப்படுகின்றன.
வெறுமனே ஒரு சம்பிரதாயமாக ‘தேசிய அறிவியல் தினம்’ கொண்டாடப்படுவதை விட, அவற்றின் நோக்கத்தை பெற்றோர்கள் உணரச் செய்வதில் இதன் வெற்றி அடங்கியிருக்கிறது.
அறிவியலின் நோக்கம்!
மனிதகுலத்துக்கு நன்மை தருபவற்றை வழங்குவதே அறிவியல் துறையின் நோக்கம். அதாவது, எந்தவொரு கண்டுபிடிப்பும் முற்றும் முழுதாக மனிதர்களுக்குப் பயன் தருவதாக அமைய வேண்டும்.
அதையும் மீறி ஒரு கண்டுபிடிப்பு சில தீமைகளைத் தருகிறது என்றால், அவற்றைத் தவிர்த்து நன்மைகளை நோக்கிச் செல்லும் வகையில் மனிதர்களை வழி நடத்துவது முக்கியம்.
இதனைப் புரிந்துகொண்டால், அறிவியலில் இருந்து விலகி பழமைவாதத்தைத் தாங்கிப் பிடிப்பதற்கும் தூய்மையான அறிவியல் செயல்பாடுகளைக் கொண்டாடுவதற்கான வித்தியாசம் தெளிவாகும்.
அதே நேரத்தில் நாம் பள்ளியிலும் கல்லூரிகளிலும் பயிலும் அறிவியல் கோட்பாடுகளோ, கணித தேற்றங்களோ நேரடியாக நம் வாழ்க்கையில் பயன்படுமா என்று கேள்வி எழுப்பக் கூடாது. ஏனென்றால், எல்லாமே எல்லாருக்கும் பொதுவானதாக அமைந்துவிடாது.
‘ரேடியம் கண்டுபிடிக்கப்பட்டபோது, மருத்துவமனைகளில் அது பயன்படுமென்று ஒருவரும் அறியவில்லை. அது வெறுமனே அறிவியல் சார்ந்த பணியாக மட்டுமே இருந்தது.
ஆனால், நேரடி பயன்பாட்டை முன்வைத்து நோக்கப்படும் பார்வையை அறிவியல் செயல்பாடுகள் பொருட்படுத்த தேவையில்லை என்பதை அது நிரூபித்தது’ என்றார் ரேடியத்தைக் கண்டறிந்த மேரி க்யூரி.
நுகர்வு மட்டும் போதுமா!?
முந்தைய தலைமுறையினரில் எந்தவொரு துறையையும் முற்றுமுழுதாகத் தெரிந்துகொள்ள வேண்டுமென்று இறங்குபவர்கள் எண்ணிக்கை அதிகமிருந்தது.
இதனால் கலை, பண்பாடு, வரலாறு, விளையாட்டு, சமூகம், உளவியல் என்று தொடங்கி அறிவியலின் வெவ்வேறு கிளைகளைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டவர்கள் கணிசமாக இருந்தனர்.
ஆனால், அறிவியலின் அதீத வளர்ச்சியையும் புதிய தொழில்நுட்பப் பயன்பாடுகளையும் நுகர்ந்துவரும் இன்றைய சமூகம் அதன் பின்னணி பற்றி அறிவதில் ஆர்வம் போதவில்லையோ என்ற சந்தேகம் பலமாகிறது.
நுகர்வை மட்டுமே முன்னிறுத்தும் வாழ்க்கை முறையும் அதையே வாழ்க்கை நோக்கமாகக் கொண்ட ஒரு தலைமுறையையும் வளர்த்தெடுக்கிறோமோ என்ற கேள்வியும் கெட்டிப்படுகிறது.
எதையும் மேம்போக்காக தெர்ந்துகொண்டாலே இந்த உலகில் வெற்றிகரமாக ஜீவித்துவிடலாம் என்ற மனநிலையும் இதன் பின்னிருக்கிறது.
உண்மையில் ஏன், எதற்கு, எப்படி என்று கேள்வி எழுப்பும் மனப்பான்மை இருந்தால்தான் எல்லா துறைகளிலும் வளர்ச்சி மேல்நோக்கி செல்லும். அறிவியலுக்கு இது முற்றிலுமாகப் பொருந்தும்.
ஆதலால், வெகு சிலருக்கு மட்டுமே புகுத்தப்படும் அறிவியல் அறிவை ஒட்டுமொத்தமாக அனைத்து இளைய தலைமுறையினருக்கும் கடத்த வேண்டியது நம் கடமை.
அறிவியல் அறிவோம்!
அறிவியல் என்றால் சிலருக்கு இனிக்கும்; சிலருக்கு வேப்பங்காயாக கசக்கும். அதைப் புரிந்துகொள்வதில் இருக்கும் ஆர்வத்தில் தோன்றும் வேறுபாடே இதற்குக் காரணம்.
‘சுயாதீனமான சிந்தனையும் கடின உழைப்புமே அறிவியலுக்கு முக்கியம், ஆய்வுக்கான சாதனங்கள் அல்ல’ என்பது சர் சி.வி.ராமனின் கருத்து. இவர் கண்டறிந்த ‘ராமன் விளைவு’ நோபல் பரிசையே பெற்றுத் தந்தது.
அந்த ஆய்வுக்காக இவர் செலவழித்தது வெறும் 200 ரூபாய் (அந்தக்கால மதிப்பில்) தான்.
இதே காலகட்டத்தில் பிறநாட்டு அறிவியலாளர்கள் பன்மடங்கு செலவு செய்திருப்பார்கள் என்பதே இதிலிருந்து நாம் புரிந்துகொள்ள வேண்டியது.
பொருளொன்றின் வழியே உட்புகுந்து சிதறும் ஒளியின் அலைநீள மாற்றமே ‘ராமன் விளைவு’ என்றழைக்கப்படுகிறது. இதனைக் கண்டறிவதற்காக, ராமன் அரசின் உதவியை நாடவே இல்லை.
“வழிகாட்டுதல், தொழில் துறை, அரசு அல்லது ராணுவத்தின் அழுத்தங்கள் மூலமாக அடிப்படை அறிவியலை செயலாக்க முடியாது என்று தீவிரமாக நம்புகிறேன். அதனாலேயே, முடிந்தவரை ரசிடம் இருந்து பணத்தை பெறக்கூடாது என்று முடிவு செய்தேன்” என்றிருக்கிறார் ராமன்.
போதுமான பணமோ, தகுந்த வசதி வாய்ப்புகளோ இல்லாத காரணத்தால் ஒருவரால் அறிவியல் கண்டுபிடிப்புகளில் மனதைச் செலுத்த முடியாது என்ற வாதத்தை தோற்கடிப்பதற்கான வார்த்தைகளே இவை.
கண்டுபிடிப்புக்கே இந்த நிலை என்றால், அறிவியலைப் புரிந்துகொள்வதற்கு என்னதான் வேண்டும்? தூய்மையான ஆர்வம் இருந்தாலே போதும்.
இன்று ‘இல்லை’ என்று அழுத்தமாகச் சொல்வதை விடவும், நாளை ‘இருக்கிறது’ என்று சொல்வதற்கான நடவடிக்கைகளில் இறங்குவது எளிதான காரியம்.
அதனால், இப்போதே அறிவியலை எளிய வழியில் அணுகும் மனப்பாங்கை இளைய தலைமுறையிடம் விதைப்போம்.
‘இல்லை, இப்போதே அறிவியலைப் புரிந்துகொள்ளும் திறன் நன்றாகத்தான் இருக்கிறது’ என்று சொல்வீர்கள் எனில், அதனை மேலும் மேம்படுத்துவதற்கான நோக்கத்தோடு கைகோர்ப்போம்.
வாருங்கள், அடுத்த தலைமுறையின் அறிவியலாளர்களை உருவாக்குவோம்!
– உதய் பாடகலிங்கம்