சொந்த ஊரின் நினைவுகளை தன் சிறகுகளில் சுமந்தலையும் ஒரு பறவையைப் போலவே இருக்கிறது மனம்.
நமக்கு ஆயிரமாயிரம் கதைகளைச் சொல்லிக் கொண்டிருப்பவை ரயில் நிலையங்கள். ஞாயிறன்று மாலையில் தம்பி அருண்மொழிவர்மனுடன் திருவாரூர் சந்திப்பு சென்றிருந்தேன்.
“கொஞ்ச நேரம் நடக்கலாம் அண்ணன்…” என்றார்.
சிவந்த அந்திவானம். ஊதலான குளிர்க்காற்று. ரயில்வே நிலையத்தை ஒட்டிய மண் சாலையில் நடந்தோம். நீண்ட நாட்களுக்குப் பிறகு காலாற நடை. எத்தனையோ முறை திருமதிக்குன்னம் ரயில் நிலையத்தில் ரயிலுக்காக காத்திருந்து பாட்டியுடன் தஞ்சாவூர், நாகூர் சென்ற பயணங்கள்…
எப்போதும் மனதுக்கு நெருக்கமான ஊர் திருவாரூர்.
எர்ணாகுளம் வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலுக்காக பயணிகள் வேகமாக வந்துகொண்டிருந்தனர்.
சிமெண்ட் பெஞ்சுகளில் அவ்வளவாக யாரும் உட்கார்ந்திருக்கவில்லை. பிளாட்பாரத்தில் நடந்தால் அபராதம் என்ற பயத்தில் சர்வீஸ் சாலையில் வந்தோம்.
இன்று வரையில் மனங்களை மலரவைக்கும் அழகிய தருணங்களைத் தந்துகொண்டே இருக்கின்றன ரயில்களும் ரயில்வே சந்திப்புகளும்.
நன்றி: சுந்தரபுத்தன்