சென்னையில் நடைபெற்ற புத்தக விழாவில் மருதுவை மீண்டும் பார்த்தேன். மருதுவை எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம்.
சந்தியா பதிப்பகம் அரங்கிற்கு முந்திய அரங்கில் அவர் வேறு யாருடனோ பேசிக்கொண்டிருந்தார்.
மருதுவுக்குப் பேசவும் முடியும் அல்லது மருதுவுக்குப் பேசாமல் தீராது. அவருடைய உரையாடலில் குறுக்கிடும் அளவுக்கு என் சந்தோஷம் இருந்தது.
சில பொழுதுகளில் சந்தோஷம் இப்படி நாகரிகக் குறைவுகளை அனுமதிக்கிறது. அவர் அப்படியே தழுவிக்கொண்டார்.
அவர் சிரிப்பில் சமீபத்தில் அவர் இழந்திருந்த முன் கடைவாய்ப் பல்லின் இடைவெளி இருந்தது.
அவருடன் நான் கழித்த ‘திரைக்கூடம்’ பொழுதுகளை நினைவூட்டினேன். அஞ்சுகம் நகர் ஐந்தாவது தெருவாகிவிட்டது அந்த ஷெல்லி வீதி.
அவர் எப்போதும் சொல்லத் தயாராக இருக்கிற, அவருடைய செல்ல வட்டாரமான சந்திரபாபு, சோலை மலைத் தாத்தா பற்றி நுனியெடுத்துக் கொடுத்தேன். அதற்குள் சாம்ராஜ். பி.ஜி.சரவணன் எல்லோரும் வந்துவிட்டார்கள்.
ஒரு சொடக்குப் போடும் நேரத்துக்குள், அது வைகை மேல் பாலமாகவும், கோரிப்பாளையமாகவும் தல்லாகுளமாகவும் அழகர்கோவிலாகவும் மாறிவிட்டது. மருது ராக்கியம்மன் பற்றிப் பேச ஆரம்பித்துவிட்டார்