ரெட்டைவால் குருவி – ஆண்களின் கனவுலகம்!

‘ராஜராஜ சோழன் நான்..’ பாடல் ஒலிக்கத் தொடங்கியதுமே, கேட்பவர் மனம் இலகுவாகும்; காற்றில் மிதக்கும்.

’ரெட்டைவால் குருவி’யில் இடம்பெற்ற அந்த பாடலைக் கண்டால் ஆண்களின் பகல்கனவுகளுக்குச் சிறகு முளைக்கும்.

இப்படிச் சொல்லக் காரணம் உண்டு. இரண்டு பெண்களோடு ஒரேநேரத்தில் திருமண வாழ்வைப் பகிரும் ஒரு ஆணின் அனுபவங்களாகவே அப்பாடல் திரையில் ஒளிரும்.

உடனே, ‘என்ன ஒரு ஆணாதிக்கச் சிந்தனை’ என்று எதிர்க்குரல் எழுப்ப வேண்டாம்.

பதிலுக்கு ஒரு பெண் இரண்டு ஆண்களோடு காதல் புரிந்தால் இந்த சமூகம் ஏற்றுக்கொள்ளுமா என்ற எதிர்க்கேள்வி கேட்கத் தோன்றலாம்.

அப்படிப்பட்ட விவாதம் பெருகிக் கிடக்கும் இந்நாட்களில் கூட மேற்சொன்ன பாடல் இதமாக இருக்கிறது என்பதைச் சொல்லித்தான் ஆக வேண்டும்.

கிளைக்கும் பல விவாதங்களுக்கு நடுவே, இன்றும் ‘ரெட்டைவால் குருவி’ திரைப்படம் சாமான்யர்களுக்கும் பலருக்கும் பிடித்தமானதாக இருப்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

இந்தப் படத்தை உருவாக்கியவர் கமர்ஷியல் திரைச் சூத்திரங்களில் முத்துக் குளித்தவர் அல்ல.

அதேநேரத்தில், கலையம்சமிக்க பல படங்களைத் தந்து பெருவெற்றிகளைக் கண்டவர். அவர்தான் இயக்குனர் பாலு மகேந்திரா.

பாலு மகேந்திராவின் உலகம்!

திரைப்படம் என்பதே நிகழ முடியாததைச் சாத்தியப்படுத்தும் ஒரு சாதனம்.

என்னதான் சமூகத்தைப் பிரதிபலித்தாலும், சமூகத்திற்குத் தேவையானதைத் தந்தாலும், மாற்றங்களைப் புகுத்த முயற்சித்தாலும், மூடிய கண்களுக்குள் ஊடாடிக் கொண்டிருக்கும் கனவுகள் மீது யதார்த்த சாயம் பூசியதாகவே அது அமையும்.

அதனை நன்கு புரிந்துகொண்டவர் மறைந்த இயக்குனர் பாலு மகேந்திரா.

இந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத படங்கள் பலவற்றில் தன் பங்களிப்பைத் தந்தவர் பாலு மகேந்திரா.

ஒளிப்பதிவாளராக இருந்து இயக்குனரான பிறகும் கூட, புதுமுக இயக்குனர்களின் கனவுகளுக்கு ஒளி வடிவம் கொடுத்தவர்.

வர்த்தக சினிமாவின் இலக்கணங்களை மீறி, அவர் தந்த கலையம்சமிக்க படங்களுக்கு மூன்றாம் பிறை, யாத்ரா, நீங்கள் கேட்டவை போன்ற உதாரணங்களைச் சொல்லலாம்.

பாலு மகேந்திரா இயக்கிய படங்கள் வெளித்தோற்றத்தில் யதார்த்த வாழ்வைப் பிரதியெடுத்தாற் போன்று இருக்கலாம். ஆனால், அதன் வழியே அவர் காட்டும் உலகம் பகற்கனவையும் மிஞ்சக்கூடியது.

அதிலொன்று தான் 1987-ல் வெளியான ‘ரெட்டைவால் குருவி’. இன்றோடு அப்படம் வெளியாகி 36 ஆண்டுகள் ஆகிறது.

கலைஞனின் மனம்!

பாலு மகேந்திரா ஹாலிவுட் படங்கள் மீது ஈர்ப்பு கொண்டவர் என்ற குற்றச்சாட்டு அப்போதும் இப்போதும் உண்டு. ‘தி ப்ரிட்ஜ் ஆன் தி ரிவர் குவாய்’ படப்பிடிப்பை பார்த்த பதின்ம வயது முதல், அந்த ஈர்ப்பு அவருக்குள் தோன்றியிருக்கலாம்.

ஆனாலும், பிரமாண்டமான படங்கள் நோக்கி அவர் ஓடியதே இல்லை.

மிகச்சில பாத்திரங்கள், அவற்றுக்கு இடையே பாவும் உணர்வுகள், அதனால் ஏற்படும் போராட்டங்களைச் சுற்றியே அவரது படங்கள் இருக்கும்.

அதனை ‘ரெட்டைவால் குருவி’யும் வழிமொழிந்திருக்கும். நகைச்சுவைப் படம் என்றாலும், வழக்கமான தமிழ் சினிமா கண்டிருந்த காமெடியை இதில் பார்க்க முடியாது.

கோபி என்ற ஒரு சாதாரண மனிதன் துளசி, ராதா என்ற இரு பெண்களை ஒரேநேரத்தில் காதலிப்பதும் அதனால் அவர்கள் கர்ப்பமாவதும்தான் இப்படத்தின் மையக் கதை.

இருவரையுமே அந்த மனிதர் திருமணம் செய்திருப்பார் என்பது கூடுதல் தகவல். சட்டப்பூர்வமாகப் பார்த்தால், இதுவொரு தண்டனைக்குரிய குற்றம்.

நாயகன் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளர், ஒரு நாயகி வங்கியில் உதவி மேலாளர், இன்னொரு நாயகி சுயாதீனமான வாழ்வை விரும்பும் ஒரு மேடைப் பாடகி.

இது போன்ற பாத்திர வார்ப்புகள் அக்காலத்தில் அபூர்வம்.

அதேநேரத்தில், நாயகனின் குழந்தை பெற்றுக் கொள்ளும் விருப்பமே கதைத் திருப்பத்தில் பிரதானமாகக் காட்டப்படும்; அதனால், முதன்மையான மூன்று பாத்திரங்களில் எதுவுமே வில்லத்தனத்தை வெளிப்படுத்தாது.

ஒருகட்டத்தில் இரண்டு நாயகிகளுக்கும் உண்மை தெரிந்து இருவருமே புறக்கணித்தாலும், அவர்களைச் சுற்றிச் சுற்றி வருவார் நாயகன்.

இறுதியில், இருவரோடு அவர் குடும்பம் நடத்துவதாகப் படம் முடியும். இன்றும் சர்ச்சையைக் கிளப்பும் கிளைமேக்ஸ் இது.

இதற்கான எதிர்வினைகளைக் கேட்டபிறகே, இதே கதையை வெவ்வேறு விதமாக எழுதினால் எப்படியிருக்கும் என்ற நோக்கில் ‘மறுபடியும்’, ‘சதிலீலாவதி’ என்ற இரு படங்களைத் தந்தார் பாலு மகேந்திரா.

இவ்வளவு ஏன், அவர் முதன்முதலாக டைரக்ட் செய்த ‘கோகிலா’வும் கூட இதே போன்றதொரு கதைக்களத்தைக் கொண்டதுதான்.

பாலு மகேந்திராவின் தனிப்பட்ட வாழ்வைக் குறிப்பிட்டு, ‘ஒரு கலைஞனின் மனம் அது’ என்று விமர்சித்தவர்களும் உண்டு. அதற்கு அவர் பதில் சொன்னதே இல்லை. அதேநேரத்தில், இது அவருக்குப் பிடித்தமான கதை என்று தாராளமாகச் சொல்லலாம். அதற்கொரு காரணம் இருக்கிறது.

யாருடைய கதை?

‘ரெட்டைவால் குருவி’யின் கதையை எழுதியவர் என்று கௌரி என்பவருடைய பெயர் படத்தில் குறிப்பிடப்படுகிறது. அந்த நபர் யார் என்பது படக்குழுவினருக்கே வெளிச்சம்.

ஆனால், இப்படம் 1984-ல் வெளியான ‘மிக்கி அண்ட் மௌட்’ எனும் ஆங்கிலப் படத்தைத் தழுவியது என்பதை மறுக்க முடியாது. அது ஹாலிவுட்டில் பெருவெற்றியைப் பெறவில்லை; ஆனாலும், துள்ளிக் குதித்துச் சிரிக்க வைக்கும் காட்சிகள் பல அதில் இருந்தன.

அவற்றில் பல ‘ரெட்டைவால் குருவி’யிலும் உண்டு. நாயகன் தொலைக்காட்சியில் பணியாற்றுபவர் என்பது முதல் ஒரு நாயகியின் தந்தை பயில்வான் என்பது வரை பல விஷயங்கள் அப்படியே எடுத்தாளப் பெற்றிருக்கும்.

ஆனால், அந்த படத்தைப் பார்த்தவர்களும் ‘ரெட்டைவால் குருவி’யைப் பார்க்கும்போது ‘ப்ரெஷ்’ஷாக உணர்வார்கள். அதுதான் பாலு மகேந்திராவின் மாயாஜாலம்.

இந்திய சினிமாவில் இது போன்ற கதைகள் கையாளப்பட்ட விதத்திற்கும், ரெட்டைவால் குருவிக்கும் இடையே தலைகீழான வித்தியாசங்களைக் காண முடியும்.

உதாரணமாக, நாயகனை ஒரு நவீன மன்மதனாகவோ அல்லது பார்க்கும் பெண்களை எளிதில் வீழ்த்தும் வித்தகனாகவோ பாலு மகேந்திரா காண்பித்திருக்க மாட்டார்.

இரு பெண்களிடமும் அடி வாங்கும், வசைகள் பெறும், சமாளிக்க முடியாமல் திண்டாடும் சாதாரண மனிதனாகவே காட்டியிருப்பார். இப்படம் 200 நாட்களைக் கடந்து ஓடியதற்கும் இதுவே கூட காரணமாக இருக்கலாம்.

‘ரெட்டைவால் குருவி’ வெளியான நாட்களில் மனைவியிடம் அடிவாங்கும் கணவனாக கவுண்டமணி, வடிவேலு நடித்த படங்கள் வெளிவரவில்லை என்றே சொல்ல வேண்டும்.

சுருளிராஜன் இது போன்ற வேடங்களைத் தொட்டுச் சென்றிருக்கிறார் என்றாலும், இன்றிருப்பது போலப் பொதுவெளியில் அக்காட்சிகள் கொண்டாடப்பட்டதில்லை.

தனக்குப் பிடித்தமான பெண்ணுக்கு அடங்கி நிற்பது; அதேநேரத்தில் இரண்டு பெண்களோடு காதல் புரிவது; இப்படி ஒன்றுக்கொன்று முரணான எண்ணங்களுக்கு வழி தந்து, அக்காலத்து ஆண்களின் கனவுலகுக்குத் தீனி போட்ட படமாகவும் ரெட்டைவால் குருவி இருந்ததை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

வேறு இயக்குனர்களின் படமாக இருந்திருந்தால், இதில் நாயகனோடு சேர்ந்து ஒரே பாடலுக்கு இரு நாயகிகள் போடும் குத்தாட்டமும் இடம்பெற்றிருக்கும். இதில் அந்த அபத்தமெல்லாம் கிடையாது.

இன்று ‘ரெட்டைவால் குருவி’யை ஒருவர் சிலாகித்தால், அவர் மீது ஆணாதிக்கவாதி என்ற முத்திரை மிகச்சாதாரணமாக விழும்.

ஆனால், இப்போதும் ஒரு நாயகன் இரு நாயகிகள் அல்லது அதற்கு மேற்பட்டவர்களோடு சேர்ந்து குத்தாட்டம் போட்டு கும்மாளமிடுவதை கைதட்டி ரசித்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

தமிழ் திரைப்படங்கள் அதைக் கைவிட்டு வெகுநாட்களாகிவிட்டதே என்பவர்கள் கூட, யூடியூபில் அது போன்ற பாடல்களைக் கொண்ட தெலுங்கு படங்களை விழிகள் விரியப் பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றனர்.

அவ்வளவு ஏன், அவர்களை வைத்து பிழைப்பை ஓட்டிவிடலாம் என்ற நம்பிக்கையில்தான் சில ஓடிடிகள் 18+ வெப் சீரிஸ்களை வாரியிறைத்து வருகின்றன.

எத்தனை சர்ச்சைகள் பிறந்தாலும், ‘ரெட்டைவால் குருவி’ தரும் காட்சியனுவம் தனித்துவமானது என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

அதற்குக் காரணம், பாலு மகேந்திரா எனும் மகா கலைஞன் தனது கேமிரா வியூபைண்டர் வழியே இவ்வுலகை நோக்கிய பார்வை என்பதையும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்!

– உதய் பாடகலிங்கம்

You might also like