– நடிகர் அஜித் கோஷி
பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் சிறிய கதாப்பாத்திரங்களில் தோன்றி மனதை ஈர்க்கும்படியான நடிப்பை தருபவர் நடிகர் அஜித் கோஷி.
ஹீரோயின் அப்பா, போலீஸ் கமிஷ்னர் என இவரது முகம் மனதிற்குள் பச்செக்கென ஒட்டிக்கொண்ட முகம்.
ஓடிடி, பான் இந்தியா என வளர்ந்திருக்கும் திரைத்துறையில் இவரது பயணம் வெற்றிப்பாதை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது. அவரிடம் ஒரு சிறு நேர்காணல்.
உங்களைப் பற்றிச் சொல்லுங்கள்..
“நான் பிறந்தது கேரளாவில், ஆனால் வளர்ந்தது படித்தது எல்லாமே சென்னைதான். பக்கா ராயபுரவாசி. நான் குடும்பத்துடன் ராயபுரத்தில் வசித்து வருகிறேன்.
சினிமா ஆர்வம் என் இளைமைப்பருவத்தில் இருந்தே எனக்கு பள்ளி, கல்லூரிகளிலயே மேடை ஏறி நடிப்பது, நாடகம் போடுவது என நடிப்பின் மீது தீராத ஆர்வத்துடன் இருந்தேன்.
அப்போது வாய்ப்புகள் கிடைக்கவில்லை. பின்னர் 45 வயதுக்கு பிறகு, தீவிரமாக நடிகராக மாற வேண்டும் என்று முடிவெடுத்து இறங்கிவிட்டேன்.
இப்போது 35 படங்கள், 40 விளம்பரங்கள், 5 வெப் சீரிஸ்கள் என தொடர்கிறது என் பயணம்.
நடிக்க வருவதற்கு முன் என்ன செய்தீர்கள்?
நடிக்க வருவதற்கு முன் நான் கன்ஸ்ட்ரக்சன் பிரிவில் ரூஃப் இன்ஸ்டாலிங்க் செய்து வந்தேன்.
சில காலம் துபாயில் தொழில் செய்துகொண்டு இருந்தேன், 2010-க்கு பிறகுதான் நான் தமிழ்நாட்டிற்கு வந்தேன். பின்னர் எல்லாவற்றையும் விட்டுவிட்டு சினிமாவிற்கு வந்துவிட்டேன்.
நீங்கள் அதிகமாக போலீஸ் கதாபாத்திரத்தில் தான் நடித்து இருக்கிறீர்கள்..!?
அது ஏன் என்று தெரியவில்லை. தமிழ் சினிமாவில் இதில் ஒரு ஸ்ட்ரீயோடைப் செய்கிறார்கள்.
எதாவது ஒரு படத்தில் போலீஸ் கதாபாத்திரம், கமிஷ்னர் கதாபாத்திரம் வேண்டுமென்றால் அஜித் கோஷியெய் அழைக்கலாம் என்று முடிவெடுத்து விடுவார்கள்.
எனது பெயரையே கமிஷனர் அஜித் கோஷி என்றுதான் டெக்னீஷியன் சிலர் அவர்களது செல்லில் வைத்துள்ளார்கள்.
நீங்கள் இதுவரை பண்ண கதாபாத்திரங்களில் உங்களுக்கு நெருக்கமாக அமைந்த கதாபாத்திரம்..
நந்தா சார் முன்னணி நாயகனாக நடித்த இருதுருவம் வெப் தொடரில் ஒரு வில்லன் கதாபாத்திரம் செய்து இருந்தேன்.
அது எனக்கு பிடித்தமான ஒன்றாக இருந்தது. அந்த தொடரின் இரண்டாவது சீசன் இப்போது விரைவில் வெளியாக உள்ளது.
என்ன மாதிரியான கதாபாத்திரங்கள் செய்ய ஆசை??
எல்லா நடிகர்களுக்கும், பலமும் இருக்கும் பலவீனமும் இருக்கும். எனது பலம் முதலில் எனது பலமான உடல்மொழியும் உருவமும்.
அதனால் ஒரு ஸ்டைலான வில்லனாகவோ, கார்பரேட் வில்லனாகவோ என்னால் நடிக்க முடியும் என்று பலர் என்னிடம் கூறி இருக்கிறார்கள். அது போன்ற கதாபாத்திரங்களை செய்ய நான் ஆர்வமாக இருக்கிறேன்.
ஒரு நடிகராக வெவ்வேறு மொழிகளில் நடிப்பது உங்களுக்கு என்னவிதமான உணர்வுகளை கொடுக்கிறது?
ஒவ்வொரு மொழியிலும் திரையாக்கத்திலயே வித்தியாசம் இருக்கிறது. திரைப்படம் எடுக்கும் அணுகுமுறையிலும் வித்தியாசம் உண்டு.
இந்தியில் அதிக புரொபசனிலிசம் இருக்கும், கேரவனில் சீன் பேப்பர் நாம் வருவதற்கு முன்னரே இருக்கும். மலையாள சினிமா அதில் இருந்து மாறுபட்டு இருக்கும். தமிழ் சினிமா முற்றிலுமாக வேறு மாதிரி இருக்கும்.
மிகப்பெரிய கதாபாத்திரங்கள் அமையவில்லை என்று யோசித்து இருக்கிறீர்களா?
ஆம்.. அந்த வருத்தம் கொஞ்சம் இருக்கிறது. ஆனால் நடிகர்கள் வாழ்க்கை கிரிக்கெட்டர் வாழ்க்கைபோலதான். ஒரு கிரிக்கெட்டர் உடைய வாழ்க்கையை டெஸ்ட் போட்டி தான் மாற்றும்.
அதுபோல நிறைய கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கும்போது, ஒரு நாள் எனக்கான திரைப்பட டெஸ்ட் வாய்ப்பு எனக்கு கிடைக்கும் என்று நினைக்கிறேன்.
நீங்கள் தற்போது நடித்து கொண்டு இருக்கும் படங்கள்?
பா.ரஞ்சித் தயாரிப்பில் இயக்குனர் அதியன் ஆதிரையின் அடுத்த படத்தில் நடிப்பதற்கான பேச்சுவார்த்தை நடக்கிறது.
அடுத்து நடிகர் ரகுமான் நடிப்பில் உருவாகவிருக்கும் ஒரு பான் இந்திய வெப் தொடரில் நடிக்கிறேன்.
சந்திப்பு – தான்யா