ஒரு செல்ஃபியும் கொஞ்சம் வெறித்தனமும்..!

இன்றைய தினத்தில் செல்ஃபி என்பது நல்வார்த்தையா என்று கேட்டால் பதில் சொல்வது கடினம்.

எத்தகைய சூழலில், எத்தனை முறை, என்ன நோக்கோடு செல்ஃபி எடுக்கிறோம் என்பதைப் பொறுத்து, சமூகம் அதற்கொரு முகம் கொடுக்கிறது.

அது புரியாதபோது, செல்ஃபியும் அதனை எடுப்பவர்களும் சர்ச்சைக்குரிய பிரச்சனைகளில் சிக்குவார்கள்.

பிரபல பாடகர் சோனு நிகம் உடன் செல்ஃபி எடுக்க முடியாத வருத்தத்தில் மகாராஷ்டிரா எம்.எல்.ஏ. ஒருவரின் மகன் செய்த வேலை அப்படியொன்றாக மாறியிருக்கிறது.

பிரபலங்களின் பின்னால்..!

ஏதேனும் ஒரு வகையில் தன்னைக் கவனிக்க வேண்டுமென்ற எண்ணம் எல்லோருக்குள்ளும் இருக்கும். பிரபலம் ஆக யாருக்குத்தான் ஆசை இருக்காது.

உருவத்தைக் கவனிக்காவிட்டாலும் தன் திறமைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்ற எண்ணமே வெட்கத்தோடு கூனிக்குறுகுபவரும் சாதனை புரியத் தூண்டுதலாக இருக்கிறது.

ஆனால், நம்மில் பலருக்கும் தம் தோற்றத்தைப் பிறர் ஆராதிக்க வேண்டுமென்ற ஆசை அதிகம்.

அதன் வெளிப்பாடுதான் செல்ஃபி புகைப்படங்களாகவும் வீடியோக்களாகவும் அமைகின்றன.

அவற்றின் வழியே, பொதுவெளியில் தங்களைப் பிரபலப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.

ஒருகாலத்தில் அதற்கு டிக்டாக் வடிகாலாக இருந்தது போல, இன்று இன்ஸ்டாரீல்ஸ் போன்ற பல விஷயங்கள் உள்ளன.

அதையும் மீறி தன்னைச் சுற்றியுள்ளவர்களை உடனடியாகக் கவர பிரபலங்களுடன் எடுத்துக்கொள்ளும் புகைப்படங்களும் வீடியோக்களும் கூட உதவுகின்றன.

ஒரு புகைப்படக் கலைஞரைக் கையோடு கூட்டிக்கொண்டு திரிவது கட்டுப்படியாகாது என்றிருந்தவர்களுக்கு, மொபைல் கேமிரா தந்த செல்ஃபி வரமாகிப் போனது.

மிகச்சில நொடிகளில் பிரபலங்களுடன் நாங்களும் இருந்தோம் எனும் தொனியில் அவை பதிவு செய்யப்படுகின்றன.

இந்த தொழில்நுட்ப வசதியைப் பல பிரபலங்கள் வேறு வழியில்லாமல் சகித்துக் கொள்கின்றனர் என்பது வேறு விஷயம். இப்படிப் பிரபலங்களின் பின்னால் திரிவது ரசிகரொருவர் தன்னைத் தானே பிரபல்யப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதிதான்.

வெறித்தனம்.. வெறித்தனம்..!

‘பிகில்’ படத்தில் இடம்பெற்ற ‘வெறித்தனம்..’ பாடல் நடிகர் விஜய் மீது அவரது ரசிகர்கள் எப்பேர்ப்பட்ட அபிமானத்தை வைத்துள்ளனர் என்று சொல்லப் பயன்படுத்தப்பட்டது.

அதே வெறித்தனமான அன்பை, பிற பிரபலங்கள் மீதும் ரசிகர்கள் பொழிகின்றனர். அது கட்டுக்கடங்காமல் சென்று நேரடியாகச் சம்பந்தப்பட்ட பிரபலத்தைப் பாதிக்கும்போதுதான் விவாதமாக மாறுகிறது.

இந்தி, கன்னட மொழிகளில் பிரபல பாடகராக விளங்குபவர் சோனு நிகம். ’வாராயோ தோழி’, ‘விழியில் உன் விழியில்’, ‘மனசெல்லாம் மழையே’ உட்பட மிகச்சில தமிழ் பாடல்களையும் இவர் பாடியுள்ளார்.

பிப்ரவரி 20 அன்று செம்பூரில் நடந்த கலை நிகழ்ச்சியொன்றில் தன் குழுவினருடன் கலந்து கொண்டார் சோனு நிகம். பாடி முடிந்ததும், உடனடியாக அங்கிருந்து கிளம்பியிருக்கிறார்.

அப்போது, சோனு உடன் செல்ஃபி எடுப்பதற்காக அத்தொகுதியின் எம்.எல்.ஏ. பிரகாஷ் பதேர்பேகரின் மகன் ஸ்வப்னில் மேடைக்கு வந்துள்ளார்.

அதற்கு சோனு மறுப்பு தெரிவித்துவிட்டு படிக்கட்டுகளில் இறங்க, அவர் பின்னாலேயே அந்த நபரும் வர, பாதுகாவலர்கள் அவரை செல்ஃபி எடுக்கவிடாமல் தடுத்துள்ளனர்.

உடனே, படிக்கட்டுகளில் நின்றிருந்தவர்களைத் தள்ளிவிட்டுள்ளார் ஸ்வப்னில்.

அதையடுத்து, நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்கள் உடனடியாக சோனுவையும் அவரைச் சார்ந்தவர்களையும் பாதுகாப்பாக அனுப்பி வைத்திருக்கின்றனர்.

அந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானதால், தற்போது விவகாரம் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.

ஸ்வப்னிலின் சகோதரி சுப்ரதா, மகாராஷ்டிர மாநில மகளிர் ஆணைய உறுப்பினராக உள்ளார்.

அவசரம் மற்றும் ஆவேசத்தால் நிகழ்ந்த சலசலப்பு இது என்று சொல்லி தனது சகோதரருக்காக சோனு நிகம் மற்றும் அவரது குழுவினரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

இதை அரசியலாக்க வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார். காரணம், அவரது தந்தை சிவசேனா கட்சியைச் சேர்ந்தவர் என்பதுதான்.

தற்போது இந்த நிகழ்வு தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பின்னணிப் பாடகர் பாடகிகளின் சார்பில் பாடகர் ஷான் குரல் கொடுத்துள்ளார்.

இது போன்ற நிகழ்வுகள் அவ்வப்போது நடந்துகொண்டுதான் இருக்கின்றன.

சமீபத்தில் மும்பையிலுள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலுக்கு தனது நண்பருடன் சென்ற கிரிக்கெட் வீரர் பிருத்வி ஷா உடன் சிலர் செல்ஃபி எடுக்க முயன்றுள்ளனர். அதில் சமூகவலைதளப் பிரபலமான சப்னா கில் என்ற பெண்ணும் அடக்கம்.

பிருத்வி ஷா மறுத்த காரணத்தால், அந்த கும்பல் அவரது காரை சேதப்படுத்தியிருக்கிறது.

அந்த வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளிவந்த சப்னா, தற்போது பிருத்வி ஷா தன்னை மானபங்கப்படுத்தியதாகப் புகார் அளித்துள்ளார்.

இந்த விவகாரம் விசாரணையில் உள்ளதால், இதன் பின்னணி எப்படிப்பட்டது என்று இன்னும் தெரியவரவில்லை. அதையும் மீறி, பிரபலமாக இருப்பதற்கு இப்படியொரு விலையைத் தர வேண்டுமா என்ற கேள்வியை இந்நிகழ்வும் எழுப்பியுள்ளது.

இவர்கள் மட்டுமல்ல; சல்மான்கான், ராணா தாக்குபதி, கே.ஜே.யேசுதாஸ், சிவகுமார் என்று பல பிரபலங்கள் தங்களது அனுமதியில்லாமல் ரசிகர்கள் செல்ஃபி எடுக்க முயன்றபோது ஆவேசப்பட்டிருக்கின்றனர்.

உண்மையில், இது போன்ற நிகழ்வுகள் ரசிகர்களின் வெறித்தனமாக உணரப்படாமல் பிரபலங்களின் அலட்சியமாகவே கருதப்படவே வாய்ப்புகள் அதிகம்.

அவர்களது இடத்தில் இருந்து நோக்கினால், நிச்சயம் அது பாதுகாப்பு சம்பந்தப்பட்டது என்பதை உணர முடியும்.

தேவையற்ற பரிசு!

சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு டப்பிங் படத்தைத் தமிழ்படுத்துவதற்காகச் சில நகைச்சுவை காட்சிகள் படமாக்கப்பட்டன. அந்த படப்பிடிப்பின்போது ஒரு முன்னணி நடிகரை ஒரு ரசிகர் முத்தமிட்டுவிட்டார்.

ஒரு பிரபலம் தானாக முன்வந்து தனது ரசிகரை அரவணைத்து முத்தமிடுவதற்கும் இதற்கும் நிச்சயம் வித்தியாசம் உண்டு.

அது அந்த நடிகருக்கு அருவெருப்பைத்தான் ஏற்படுத்தியிருக்கும்.

இதைவிட மோசமாகச் சீண்டிய அனுபவங்களும் சில நட்சத்திரங்கள் மனதில் மிச்சமிருக்கலாம்.

இந்த விஷயத்தில் பாதிக்கப்படுவதிலும் பாதிப்புக்குள்ளாவதிலும் ஆண், பெண் வித்தியாசம் இல்லை. பாதிப்புக்குள்ளான பிரபலம் பெண் எனும்போது, அச்செய்தி இன்னும் பூதாகரப்படுத்தப்படும்.

விருப்பமின்றி செல்ஃபி எடுப்பதும் இதுவும் ஒன்றா எனக் கேட்கலாம். நிச்சயமாக இரண்டுக்கும் பெரிய வித்தியாசமில்லை.

என்னதான் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், பவுன்சர்கள், காவல் துறையினர் இருந்தாலும், அத்துமீறும் ரசிகர்கள் எந்தக் காலத்திலும் உண்டு என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

அதீத நேசம் என்பதையும் மீறி, ‘நாம் ஆராதிப்பதால் தானே இந்த நட்சத்திர அந்தஸ்து’ என்று சிந்திக்கும்போது ஒரு ரசிகனோ, ரசிகையோ தங்களை ‘கிங் மேக்கர்’ ஆக நினைத்துக் கொள்கின்றனர்.

அதுவே, தாங்கள் என்ன விரும்பினாலும் அதனைப் பூர்த்தி செய்ய வேண்டிய பொறுப்பு சம்பந்தப்பட்ட பிரபலங்களுக்கு இருப்பதாக எண்ண வைக்கிறது.

அப்படிப்பட்ட சூழல்களில் பிரபலங்கள் விலகி நிற்க பாதுகாப்பு கெடுபிடிகளை வேறு வழியில்லாமல் கடைப்பிடிக்கத்தான் வேண்டும்.

எம்ஜிஆர் காலத்தில், அவரைப் போன்ற முன்னணி நட்சத்திரங்கள் மட்டுமல்லாமல் சாதாரண நடிகர் நடிகைகளும் பல விழாக்களில் பாதுகாப்பாக வளைய வந்த தகவல்கள் இந்நேரத்தில் நினைவுக்கு வருகின்றன.

அந்த காலத்தில் செல்ஃபி கலாசாரம் இல்லை என்றாலும், ரசிகர்களால் பிரபலங்களுக்கு இடையூறோ, அசம்பாவிதமோ நேர்ந்தது என்று செய்தி உருவாகாமல் இருப்பதற்கான முன்னேற்பாடுகளும் அன்றிருந்தன.

திரையில், மேடையில் முகம் காட்டும் ஒருவர் தன்னையும் திறமையும் வெளிப்படுத்திக் கொள்வதன் பின்னணியில்,

‘நீங்களும் மகிழ்ந்திடுங்கள்; என்னையும் கொண்டாடுங்கள்’ என்ற எண்ணமே உள்ளது.

அப்படியிருக்க, ரசிகர்களின் இது போன்ற விருப்பங்கள் தேவையற்ற பரிசுகளாக மாறும்போது அதனை மறுக்கவும் சம்பந்தப்பட்ட பிரபலத்துக்கு உரிமை உண்டு.

அதனைப் புரிந்து கொள்ளாமல் கொஞ்சம் வெறித்தனத்துடன் ஒரு செல்ஃபி தானே என்று முரண்டு பிடித்தால், நாமும் பிரபலமாக வேண்டியதுதான் பிரபலங்களிடம் அத்துமீறிய குற்றவாளி எனும் முத்திரையுடன்..!

– உதய் பாடகலிங்கம்

You might also like