நூல் அறிமுகம் :
பெண் எழுத்தாளர் என்றால் கவிதை, சிறுகதை போன்றவைகள் மட்டும்தான் எழுத முடியும் என்று உலகம் முழுவதும் நம்பிக் கொண்டிருக்கிறது என்பதை உணர்த்த
ரெபெக்கா என்ற ஒரு எழுத்தாளரை சுட்டிக்காட்டி பெண்களுக்கு தன் உடல்நலம் விஷயத்தில் கூட கணவரை கேட்டு தான் செயல்படுகிறார்கள் என்று நூலில் படிக்கும் போது வியப்பாகத்தான் இருந்தது.
ஆனால் அதுதான் உண்மை.
இது கூட பெண்ணடிமையா? என்றால் நீங்கள் இன்னும் பெண்ணியம் பற்றி அறிவு இல்லாமல் இருப்பதை சாட்டையால் சுழற்றுகிறார்.
இந்த காலத்தில் வரதட்சணை கொடுமையா என்று நாம் நினைத்தோமானால் அதற்கும் பட்டியலிட்டுக் காட்டுகிறார்?
அதேபோன்று குழந்தையின்மை பிரச்சனையை எதிர்கொள்ளும் இளம் பெண்களின் மன அழுத்தத்தை பதிவு செய்திருப்பது மிகமிகச் சிறப்பு!
அதேபோன்று ஒரு ஆண் அதிகாரி ஆபாச மெசேஜை வாட்ஸ் அப் குரூப்பில் அனுப்ப, அது சம்பந்தமாக பெண்களே அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் இருப்பதும் அவர்களுக்கு பெண்ணுரிமை பற்றிய அறிவு இல்லாமல் இருப்பதையும்
காட்டமாக பதிவு செய்கிறார்.
ஒரு ஆண் தன்னுடைய காதலை வாழ்நாள் முழுவதும் சொல்லிக் கொள்கிறான். ஆனால், ஒரு பெண் நான் இப்படி காதலித்தேன் என்று சொல்வது அரிதாக இருக்கிறது.
அதை ஏன் நாம் சொன்னால் என்ன? காதலித்தால் என்ன? என்று சொல்லும் விதமும் சிறப்பு.
காதல் பற்றிய ஒரு புரிதலையும் இந்தக் கட்டுரை சிறப்பாக எடுத்துரைத்துள்ளது.
அப்புறம் வழக்கம் போல பெண்ணைப் பார்த்தால் மண்ணை பார்ப்பவனுடைய அனுபவம், ரொம்ப நல்ல பையன் என்பது போன்ற கோமாளித் தனங்களுக்கு
தோழர் அவர்களது பேச்சு வழக்கிலே எழுத்துக்களையும் கொடுத்திருப்பது மிக சிறப்பு.
அடுத்ததாக மிக முக்கியமான ஒரு கட்டுரை திரைப்படங்களில் தொடரும் பெண்வெறுப்பு.
பாலச்சந்தர், விசு, பாக்கியராஜ், பார்த்திபன் என்று சொல்லிக் கொண்டே போகலாம்.
இப்படி அனைவரையும் திரைப்படங்களில் பெண்களை வெறுப்பு சித்திரங்களாக வைத்திருப்பது என்பது மிகுந்த கேவலத்துக்குரியதை துணிச்சலாக பட்டியலிட்டு இருக்கிறார்.
உண்மைதான். திரைப்படத்தில் ஒரு பெண் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டால்
தற்கொலை, இல்லையென்றால் அவனை கொன்று விட்டு மரணம் அடைவது, இல்லை என்றால் அவனுடன் சேர்ந்து வாழ்வது இதுதான் முடிவாக இருக்கும்.
இதை மாற்ற முயற்சிக்க வேண்டும். மக்கள் மனம் மாற வேண்டும். அதற்கு திரைப்படத்தின் காட்சிகளும் மாற்றப்பட வேண்டும் என்று இந்த கட்டுரை இரண்டு பக்கங்களில் இருந்தாலும் கருத்துக்கள் மிக சமூகத்தின் அவலங்களை அழுத்தமாக பதிவு செய்கிறது.
அனைவரும் இந்தக் கட்டுரையை படிக்க வேண்டும்.
அதேபோன்று ஆண்களும் புரணி பேசுவார்கள் என்பது ஆண்களுக்குத் தான் தெரியும். அதை தெளிவாகவே உணர்த்துகிறார்.
அடுத்து சமூக வலைத்தளத்தில் ஒரு பெண்ணுக்கு எதிராக எவ்வளவு வக்கிரத்தோடு நடந்து கொள்கிறார்கள் என்பதும் தாயின் உடல் நலத்தில் மகன்களின் கவனக்குறைவு!
குறிப்பாக சகோதரிகளின் சுதந்திரத்தில் அண்ணனின் தலையீடு, மனைவியின் மீது கொஞ்சல் என்ற பெயரில் மிதிப்பது என ஒட்டுமொத்த ஆண் மற்றும் பெண் சமூகத்தின் மனநிலை இவ்வாறு இருக்கிறது.
இதையெல்லாம் நீங்கள் திருத்திக் கொள்ளாமல் சமூகத்தில் பெண் விடுதலை சாத்தியமில்லை என்று ஆசிரியர் சொல்லி இருப்பது மிகச் சிறப்பு.
அதேபோல் பேர் சொல்லி அழைப்பது இந்த விஷயத்தில் எனக்கும் ஒரு தீர்வு கிடைத்தது.
அனைவரையும் தோழர் என்று அழைப்பதில்லை மகிழ்ச்சி இல்லை என்றால் சார் மேடம் என்று அழைக்கலாம்.
எதற்காக நாம் அக்கா அம்மா என்று உறவு சொல்லி அழைக்க வேண்டும்.
மேல்நாட்டு கலாச்சாரத்தை நாமும் பின்பற்றினால் நன்றாக இருக்கும் என்று ஒரு புரிதலை கொடுத்திருக்கிறார்.
இந்த புத்தகத்தை படிக்கும் நீங்கள் ஆண் பெண் யாராக இருந்தாலும் இப்படி எல்லாம் நாம் இருந்திருக்கிறோமே என்று என்ன தோன்றுகிறது.
இதற்கு நாம் பெண் உரிமை பற்றிய அடிப்படை அறிவு கூட இல்லாமல் இருக்கிறோமே என்பதை இந்த புத்தகங்கள் தெளிவாக விளக்குகிறது.
பெண்ணுரிமை பற்றிய ஒரு முழுமையான புரிதலை பற்றி தெரிந்து கொள்ள இந்த புத்தகத்தை அவசியம் ஆண் பெண் இருபாலரும் கண்டிப்பாக படிக்க வேண்டும்
இது பெண்ணுரிமை நூல் என்பதை விட இது உளவியல் நூல் எனலாம்.
தோழர் தீபலட்சுமியின் இந்த முயற்சி சமூகத்தின் பெண்ணுரிமைக்கு
ஒரு புது வரவு. இது போன்ற பல நூல்களை கொண்டு வர வாழ்த்துக்கள்!
ப.வெங்கடேசன்
நூல்: குத்தமா சொல்லல குணமாவே சொல்றோம்
ஆசிரியர்: ஜெ.தீபலட்சுமி
பக்கங்கள்: 94
விலை. : 125
பதிப்பகம்: ஹெர்ஸ்டோரிஸ்
நூல் தேவைக்கு தொடர்பு எண்: 7550098666
நன்றி: முகநூல் பதிவு