வெற்றிப் படங்களின் 2ம் பாகங்களில் வேறு நடிகர்கள், ஏன்?

இமாலய வெற்றிபெற்ற சினிமாக்களின் இரண்டாம் பாகங்களை அதே நட்சத்திரங்களை வைத்து சுடச்சுட உருவாக்கி, ரசிகர்களுக்கு விருந்தளிப்பது கொஞ்சகாலமாக தமிழில் பெருகியுள்ளது.

இதில் சூர்யாவின் சிங்கம், சுந்தர்.சி.யின் அரண்மனை தவிர வேறு படங்கள் எதிர்பார்த்த வெற்றியை எட்டவில்லை.

விசுவரூபம்-2, சாமி-2, சண்டக்கோழி- 2 போன்றவை ஆகச்சிறந்த உதாரணங்கள். ஆனால் பிரமாண்ட வெற்றிபெற்ற சினிமாக்கள், வேறு நடிகர்களின் பங்களிப்பில் தயாராகி ஒரிஜினல் படங்களின் வசூலை முறியடித்துள்ளன.

ஆதியில் ஆரம்பித்து அண்மைக்காலம் வரையிலான அத்தகைய சினிமாக்கள் குறித்த ஓர் அலசல்.

அம்பிகாபதி

1937 ஆம் ஆண்டு வெளிவந்த அம்பிகாபதி, அந்த காலத்தில் தலை சிறந்த தமிழ்க் காதல் காவியமாக கருதப்பட்டது. அம்பிகாபதியாக தியாகராஜ பாகவதரும், அமராவதியாக சந்தானலட்சுமியும் நடித்திருந்தார்கள்.

எல்லீஸ் ஆர்.டங்கன் இயக்கி இருந்தார். இளைஞர்களை கொள்ளைகொண்ட இந்தப் படம் சக்கைப் போடு போட்டது. படம் ரிலீசான பல ஆண்டுகள் வரை பாகவதரை, அவரது ரசிகர்கள் ‘அம்பிகாபதி.. அம்பிகாபதி’ என்றே அழைத்தனர்.

இருபதாண்டுகள் கழித்து (1957) அம்பிகாபதி படம் மீண்டும் உருவானது. கதாநாயகன் சிவாஜி. இயக்கம் – ப.நீலகண்டன்.

இந்தப் படத்தில் கம்பர் வேடத்தில் நடிக்க பாகவதரை அணுகினர்.

ஹீரோவை விட அதிக சம்பளம் தருவதாக சொல்லியும், ஒரிஜினல் ‘அம்பிகாபதி’ இதில் நடிக்க மறுத்து விட்டது தனிக்கதை.

“முதல் அம்பிகாபதி போல் இரண்டாம் அம்பிகாபதி இல்லை” என அப்போது விமர்சனம் வந்தது.

ஆனால், இதனை தயாரித்த ஏ.எல்.சீனிவாசன், “சிவாஜியின் அம்பிகாபதியால் தயாரிப்பாளர், வினியோகஸ்தர்கள் உள்ளிட்ட பலரும் லாபம் சம்பாதித்தனர்’’ என விளக்கம் கொடுத்தார்.

உத்தமபுத்திரன்

மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்து பி.யு.சின்னப்பா, நாயகனாக நடித்த உத்தமபுத்திரன் 1940-ம் ஆண்டு ரிலீஸ் ஆனது.

தமிழ்த் திரை உலகில் ஒரு நடிகர் இரட்டை வேடத்தில் நடித்த முதல்படம் இதுவே. இரண்டு வேடங்களிலும் சின்னப்பா கலக்கி இருந்தார்.

இதே படம் மறுஆக்கமாக சிவாஜி-பத்மினி ஜோடியாக நடிக்க 1958 ஆம் ஆண்டு வெளியானது. இரண்டு புத்திரன்களும் வசூல் குவித்தனர்.

சிவாஜியின் உத்தமபுத்திரன் தான் வடிவேலு நடிப்பில் ‘இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி’யாக உருவாகி கோடிகளை கொட்டியது.

தனுஷும் உத்தமபுத்திரன் என்ற பெயரில் உருவான படத்தில் நடித்துள்ளார்.

பில்லா

ரஜினிகாந்த் சினிமா வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்திய படம் பில்லா. கே.பாலாஜி தயாரித்தார். எம்.ஜி.ஆரின் குடியிருந்த கோயில் படத்தின் கதையை தழுவி எடுக்கப்பட்டது. பில்லா பெயரில் உருவான இரண்டாம் பாகத்தில் அஜித் நடித்தார். அதுவும் சூப்பர்ஹிட் ஆனது.

சந்திரமுகி

சாந்தி திரையங்கில் ஒரு வருடம் தாண்டி ஓடிய படம் ரஜினியின் சந்திரமுகி. தனது படங்கள், இரண்டாம் பாகமாக எடுக்கப்படுவதில் உடன்பாடு இல்லாதவர் ரஜினி.

இதனால் பி.வாசு, சந்திரமுகி இரண்டாம் பாகம் எடுக்க முற்பட்டபோது அதில் நடிக்க மறுத்து விட்டார் ரஜினி.

இதனால் லாரன்சை வைத்து சந்திரமுகி இரண்டாம் பாகத்தை உருவாக்கி வருகிறார் பி.வாசு. ஜோதிகா வேடத்தில் கங்கனா ரணாவத் நடிக்கிறார்.

லிங்குசாமி தயாரித்து, டைரக்ட் செய்த படம் பையா. கார்த்தி-தமன்னா ஜோடியாக நடித்த இந்த படம், வசூலை வாரிக் குவித்தது.

இதன் இரண்டாம் பாகத்தை இப்போது உருவாக்க ஆரம்பித்துள்ளார் லிங்குசாமி. ஆனால் ஹீரோ, ஆர்யா. நடிகை, முடிவாகவில்லை.

அபூர்வ சகோதரர்கள்

ஜெமினி ஸ்டூடியோ சார்பில் எஸ்.எஸ்.வாசன் தயாரித்த படம் ’அபூர்வ சகோதரர்கள்.

1949 ஆம் ஆண்டு வெளியான இந்தப்படத்தில் எம்.கே.ராதாவும், பானுமதியும் நடித்திருந்தனர்.

ஆங்கிலப் படங்களுக்கு இணையாக தயாரிக்கப்பட்ட தமிழ்ப் படம் என்ற பெருமையைப் பெற்ற படம்.

அதே பெயரில் கமல் தயாரித்து, மூன்று வேடங்களில் நடித்து 1989 ஆம் ஆண்டு வெளியான படம்.

ஆனால் 49 ஆம் ஆண்டு சகோதரர்களுக்கும், 89 ஆம் ஆண்டு சகோதரர்கள் கதைக்கும் சம்மந்தமில்லை.

இதேபோல், சதிலீலாவதி, பழனி, கர்ணன், சந்திரலேகா ஆகிய படங்களின் கதைக்கும், இதே பெயரில் பின்னாட்களில் வந்த படங்களுக்கும் எந்த ஒற்றுமையும் கிடையாது.

– பி.எம்.எம்.

You might also like