சில படங்களைப் பார்க்கையில் ரத்தம் சூடேறும்; உடம்பு முறுக்கேறும்; மனம் அதிரும்; நம்மால் இயன்ற மாற்றத்தைச் செய்துவிட மாட்டோமா என்ற எண்ணம் பெருகும்.
திரைப்பட நினைவுகள் மங்கி இரண்டொரு நாட்களில் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்பினாலும், மனதின் ஓரத்தில் அந்த உணர்வு மிச்சமிருக்கும்.
வழக்கமான பொழுதுபோக்கு சித்திரங்களாக அமைந்தபோதும், சமூகத்திற்குத் தேவையான கருத்துகள் இருந்தால் மட்டுமே அப்படியொரு மாயாஜாலம் நிகழும்.
அந்த வகையில், கல்வியை வியாபாரமாகக் கருதினால் ஒரு தலைமுறையின் எதிர்காலமே பாழாய்ப் போகும் என்ற சேதியைத் தாங்கி வந்திருக்கிறது தனுஷ் நடித்த ‘வாத்தி’.
மேற்சொன்ன உணர்வெழுச்சியை ‘வாத்தி’ உண்டு பண்ணுகிறதா?
வாத்தியார் ஊருக்கு வர்றார்!
திருப்பதி பள்ளி, கல்லூரி என்று மாபெரும் கல்வி நிறுவனக் குழுமத்தை நடத்தி வருகிறார் திருப்பதி (சமுத்திரக்கனி). அவர் நடத்தும் பொறியியல் கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவர், ஆசிரியர்கள் நடத்தும் பாடங்கள் புரியாமல் திணறுகிறார்.
அவரது கல்விக் கட்டணத்திற்காக, அவரது பெற்றோர் தங்களது வீடியோ கேசட் கடையை விற்க முயல்கின்றனர்.
அம்மாணவரின் தாத்தாவுக்குச் சொந்தமான கடை அது. விற்பனை செய்ய ஏதுவாக, தன் நண்பர்களுடன் சேர்ந்து கடையைச் சுத்தம் செய்கிறார் அம்மாணவர்.
அப்போது, சில வீடியோ கேசட்கள் அவர்களுக்குக் கிடைக்கின்றன. அதில், பாலமுருகன் (தனுஷ்) என்பவர் கணிதப் பாடம் சொல்லித்தரும் காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன.
யார் இந்த பாலமுருகன்? எதற்காக அவர் பாடமெடுப்பது வீடியோவில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது? இந்த கேள்விகளுக்கு விடை தேடி அம்மாணவர்கள் புறப்படுகின்றனர்.
கதை பிளாஷ்பேக் ஆக விரிகிறது.
இருபதாண்டுகளுக்கு முன்னர், சோழவரம் அரசுப் பள்ளிக்கு கணிதம் சொல்லித்தர வந்தவர்தான் பாலமுருகன். திருப்பதி நடத்திவந்த பள்ளியொன்றில் தற்காலிகமாகப் பணியாற்றியவர்.
அரசுப் பள்ளிகளில் தனியார் பள்ளிகளின் ஆசிரியர்கள் பாடமெடுக்க வேண்டும் என்ற மாநில அரசின் முடிவின் கீழ், அவர் அங்கு பணியமர்த்தப்படுகிறார். பள்ளிக்கு வராமல் இருக்கும் மாணவ மாணவியரைத் திரட்டி பதினோராம் வகுப்பில் சேர்க்கிறார்.
பாலமுருகன் வரவால், சோழவரம் பள்ளியில் மாணவர்களின் வருகை அதிகரிக்கிறது. ஆண்டிறுதியில் அவர்களது மதிப்பெண் சதவிகிதமும் உயர்கிறது.
ஆனால், அம்மாணவர்கள் பன்னிரண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் பெறக்கூடாது என்று சதி செய்கிறார் திருப்பதி. அதனை மீறி, பாலமுருகன் அம்மாணவர்கள் நல்ல மதிப்பெண் எடுக்க உதவினாரா இல்லையா என்று நீள்கிறது ‘வாத்தி’ கதை.
பாலமுருகனாக தனுஷ் நடித்திருப்பதால் முடிவு என்னவாக இருக்கும் என்று தனியாகச் சொல்ல வேண்டியதில்லை. ஆனாலும், ‘ஒரு வாத்தியார் பாடம் சொல்லித் தர வருகிறார்’ என்பதை வைத்துக்கொண்டு சுவைபடக் கதை சொன்ன இயக்குனர் வெங்கி அட்லூரியைப் பாராட்டியே தீர வேண்டும்.
’வாத்தியார்’ தனுஷ்!
தனுஷ், சம்யுக்தா, சமுத்திரக்கனி, நரேன், ஹரீஷ் பேரடி, தணிகலபரணி, கென் கருணாஸ் உட்படப் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.
சோழவரம் கிராமத்தினராகவும் மாணவ மாணவியராகவும் பெருங்கூட்டமே திரையில் தோன்றியிருக்கிறது.
பொல்லாதவனாகவும் படிக்காதவனாகவும் இதுவரை காட்சி தந்த தனுஷ், முதன்முறையாக வாத்தியாராகத் தோன்றியிருக்கிறார்.
‘படிப்பென்ன அவ்ளோ முக்கியமா’ என்று கருதுகிற பெரும்பாலான 2கே கிட்ஸ்களுக்கு திரையில் புத்திமதி சொல்லியிருக்கிறார். நல்ல மாற்றம்!
நகைச்சுவை என்ற பெயரில் இடம்பெற்ற ஒரு சில காட்சிகளில் மட்டும் சுமாரான நடிப்பைத் தந்திருக்கிறார். அதனை திருஷ்டி பரிகாரமாகவே எடுத்துக்கொள்ள வேண்டும்.
நாயகியாக வரும் சம்யுக்தாவுக்குப் பெரிய வேடமில்லை. அதேநேரத்தில், திரையில் சும்மா வந்து போகும் அளவுக்கும் நிலைமை மோசமில்லை.
இவர்களுக்கு அடுத்தபடியாக திரையை ஆக்கிரமிப்பது சமுத்திரக்கனி. வழக்கமான வில்லன் வேடம் என்றாலும், அடித்தொண்டையில் இருந்து வசனம் பேசும் பாணியை அவர் கையாளாதது ஆறுதலான விஷயம்.
ஆசிரியர்களாக வரும் ஹைபர் ஆதி, ஆர்ஜே சரா சம்பந்தப்பட்ட காட்சிகள் சிரிப்பலைகளை எழுப்புகின்றன. ஆனாலும், மையக்கதைக்கு அக்காட்சிகள் எந்தவகையிலும் உதவவில்லை.
போலவே, தனுஷின் பெற்றோராக நரேன் – பிரவீணா ஜோடி சம்யுக்தாவை முதன்முறையாகப் பார்க்கும் காட்சியிலும் குபீர் சிரிப்பு எழுகிறது. ஆனால், அதுவும் திரைக்கதையில் ஒரு தடைக்கல் தான்!
குடும்ப நண்பராக வரும் ஹரீஷ் பேரடி, ஊர்த்தலைவராக வரும் சாய்குமார், ஆசிரியர்களாக வரும் தணிகல பரணி, நாரா ஸ்ரீனிவாஸ், இளவரசு, மொட்ட ராஜேந்திரன் உட்படப் பலரும் திரையில் தோன்றியிருக்கின்றனர். தெலுங்கு ஹீரோ சுமந்த் கவுரவ தோற்றத்தில் வந்திருக்கிறார்.
மாணவ மாணவியராக வந்தவர்களில் பலர் தொடக்கத்தில் செயற்கைத் தனத்தை வெளிப்படுத்தினாலும், பின்பாதி காட்சிகளில் கண் கலங்கவைக்கும் நடிப்பை வெளிப்படுத்தியிருக்கின்றனர். அதில் பலர் நிச்சயம் கவனிப்பைப் பெறுவார்கள்.
அவர்களுக்கு மத்தியில் நமக்குத் தெரிந்தவராக கென் கருணாஸ் மட்டுமே தென்படுகிறார்.
கமர்ஷியல் தெலுங்கு படங்களில் ஒவ்வொரு பிரேமும் வண்ணமயமாக காட்சிப்படுத்தப்படுவது வழக்கம். அதிலிருந்து விலகி, முடிந்தவரை யதார்த்தம் காட்ட முயற்சித்திருக்கிறது ஜெ.யுவராஜின் ஒளிப்பதிவு.
மனதை நெகிழ வைக்கும் காட்சிகளில் ஆங்காங்கே மவுனத்திற்கு இடம் தந்திருக்கிறது நவீன் நூலியின் படத்தொகுப்பு.
அவினாஷ் கொல்லாவின் கலை வடிவமைப்புதான் ஆங்காங்கே செயற்கைத் தனத்தைக் கண்ணில் காட்டி கொஞ்சம் படுத்துகிறது.
அதேநேரத்தில், வழக்கமான தெலுங்கு படங்கள் போல பாடல் காட்சிகளிலும் சண்டைக் காட்சிகளிலும் செயற்கையான சூழலைக் காட்ட மெனக்கெடாமல் இருந்ததையும் குறிப்பிட்டாக வேண்டும்.
ஜி.வி.பிரகாஷின் இசையில் ’வா வாத்தி’ பாடல் மெலடியாக இதயம் தொட, ‘ஒன் லைஃப்’ மற்றும் ‘சூரியப் பறவைகளே’ பாடல் எழுச்சி மெட்டுகளாய் அமைய, ‘கலங்குதே’ சோகமாய் நெஞ்சில் ஈரம் கசியச் செய்ய, ‘நாடோடி மன்னன்’ பாடல் விளையாட்டாய் வெற்றியைச் சுவைப்பதற்கான உத்வேகத்தை தருகிறது.
உணர்ச்சிமயமான காட்சிகளில் ஜிவி பிரகாஷின் பின்னணி இசை நம் மனதினுள் ஊடுருவுகிறது. ஒரு கமர்ஷியல் படத்தில் கட்டாயம் இருந்தேயாக வேண்டிய அம்சம் அது.
எம்ஜிஆர் பாணி!
மடித்துவிடப்பட்ட அரைக்கை சட்டையையுடன் தனுஷ் தோன்றியிருப்பது, ‘எங்கவீட்டுப் பிள்ளை’ காலத்து எம்ஜிஆரை நினைவூட்டுகிறது. ஒரு சிலர் ‘நாயகன்’ கமல் போலிருக்கிறார் என்றும் சொல்லக்கூடும்.
‘வாத்தியார்’ என்ற பெயர் தமிழ் சினிமாவில் எம்ஜிஆரை தவிர்த்து எவருக்கும் பொருந்தாது. அவர் நடித்த பல படங்கள் கல்வி, சுகாதாரம் என்று மக்களின் அடிப்படைப் பிரச்சனைகளைப் பேசியவை.
அதனாலோ என்னவோ, அவரைக் கடவுளாகக் கொண்டாடும் ரசிகர்கள் மனதைப் புண்படுத்திவிடக் கூடாது என்ற நோக்கிலும் இன்றைய ரசிகர்களின் உலகோடு பொருந்தும் வகையிலும் ‘வாத்தி’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
மேற்சொன்னவற்றை தாண்டி எம்ஜிஆரை ’காப்பி’ அடிக்கும் விதமாக எந்த குறிப்பையும் தனுஷ் வெளிப்படுத்தாதது நல்ல விஷயம்.
தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் ஆக்கப்பட்டாலும் நாயகி சம்யுக்தாவோ அல்லது வேறு பெண்களோ கவர்ச்சியாகத் திரையில் காட்டப்படவில்லை.
சண்டைக் காட்சிகளிலும் அதீத வன்முறை தவிர்க்கப்பட்டிருக்கிறது. இவையே தெலுங்குப் படங்கள் இப்படித்தான் இருக்கும் என்ற வாதத்தை உடைத்து, வெங்கி அட்லூரி மீதான மதிப்பை அதிகப்படுத்தியிருக்கிறது.
மிக இளகிய மனதுள்ளவர்கள் கண்ணீர் விடும் அளவுக்குச் சில காட்சிகளை சிறப்பாகத் தந்திருக்கிறார். அதுவே, வழக்கமான கமர்ஷியல் பட அம்சங்கள் ஆங்காங்கே வருவதைத் தாண்டிச் செல்ல உதவியிருக்கிறது.
இறுதி சண்டைக்காட்சிக்காக பாரதியார் போலத் தோன்றுகிறார் தனுஷ். அதனால் அக்காட்சிக்கு எந்தப் பயனும் இல்லை. இது போன்ற விஷயங்களைத் தவிர்த்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.
சற்குணம் இயக்கத்தில் வெளியான ‘வாகை சூட வா’ படத்தின் கதை 1960களில் நடப்பதாக அமைக்கப்பட்டிருந்தது. கிட்டத்தட்ட அதே சாயலில் அமைந்தாலும், கல்வி தனியார்மயமானதால் உருவாகியிருக்கும் ஆபத்தைப் பிரதானப்படுத்துகிறது ‘வாத்தி’.
இதே கதையை நாடகத்தனமான காட்சிகள் இல்லாமல், ஹீரோயிசம் அறவே இல்லாமல் ‘கிளாஸ்’ ஆக எடுத்திருக்கலாம். ஆனால், ‘மாஸ்’ ஆக காட்சிகள் அமைய வேண்டுமென்பதில் கவனம் செலுத்தியிருக்கிறார் இயக்குனர்.
நிச்சயமாய் நேர்த்தியான படைப்பொன்றை எதிர்பார்ப்பவர்களுக்கு அது வருத்தம் தரும் விஷயம்.
ஆனால், பொழுதுபோக்குப் படம் என்பதையும் தாண்டி ‘கல்வி ரொம்ப முக்கியம்’, ‘கற்கச் சிரமப்படுபவர்களுக்கு வாழ்வில் முன்னேறியவர்கள் உதவ வேண்டும்’ என்ற எண்ணங்கள் ரசிகர்களிடம் போய்ச் சேரும் வகையில் இறுதிக் காட்சிகளை அழுத்தமாய் அமைத்திருக்கிறார் இயக்குனர் வெங்கி அட்லூரி.
அதற்காகவே ‘வாத்தி’ டீமுக்கு ஒரு பெரிய ‘வெல்கம்’ சொல்லலாம்!
-உதய் பாடகலிங்கம்