பதின் பருவத்தைக் கையாள்வது எப்படி?

பெற்றோர்களின் கவனத்திற்கு

காலநிலை மாற்றங்கள் போன்றே நமது உடலிலும் மனதிலும் வயதுக்கு ஏற்ற மாற்றங்கள் நிகழ்வது இயற்கையே. ஒவ்வொரு வயதுக்கு ஏற்றது போல் மாற்றங்களை கையாளக் கற்றுக் கொள்ள வேண்டும்.

மனித வாழ்வில் இதையெல்லாம் கடந்து தான் வரவேண்டும். மிகக் கடினமான சவலான பருவம் என்றால் அது டீன் ஏஜ் பருவம் தான்.

இந்த வயதில் அதிக மகிழ்ச்சி, சவால்கள், ஹார்மோன் மாற்றம், படிப்பு, காதல், குழப்பம், எதிர்காலம் எல்லாம் எட்டிப்பார்க்கும் வயது.

குழந்தை பருவத்தில் இருந்து அடுத்த கட்டத்திற்கு கூட்டிச் செல்வது. 13 வயதில் டீன் ஏஜ் பருவம் தொடங்கி கிட்டத்தட்ட 18 வயது வரை இந்த சவாலான காலகட்டத்தை கடந்துதான் வரவேண்டும்.

ஹார்மோன் மாற்றங்கள், அலைபாயும் மனது, வாழ்க்கையை தீர்மானிக்கும் படிப்பு என இந்த வயதில் எதிர்கொள்ளக் கூடிய பிரச்சனைகளில் ஒன்று.

பருவ வயதின் மாற்றத்தை எப்படி எதிர்கொள்வது? பெற்றோர்கள் அவர்களை எப்படி கையாள்வது என்பது பற்றி விரிவாக பார்க்கலாம்.

டீன் ஏஜ் வயதில் ஏற்படும் மாற்றங்கள்:

1. ஆண், பெண் இரு பாலருக்கும் ஏற்படும் உடல் மற்றும் மன ரீதியான மாற்றங்கள்.

2. எதிலும் ஈடுபாடற்ற மனநிலை, அல்லது அதிக உற்சாகம்

3. பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் அதிக இடைவெளி விரும்புதல்.

4. பொழுதுபோக்கு, நண்பர்கள், செல்போன், சமூக வலைதளங்களில் அதிக நேரம் தனது நேரத்தை கழித்தல்.

5. படிப்பில் அலுப்பு தட்டுதல், ஒரே வேலையை செய்ய விருப்பமின்மை.

6. தனக்கு எல்லாம் தெரியும் என்ற மனநிலையில் தானே முடிவு செய்ய நினைப்பது.

7. அலைபாயும் மனது, பார்ப்பதை எல்லாம் விரும்பும் வயது.

8. பொறுமையின்மை, ஈகோ, தனி அங்கீகாரம் எதிர்பார்த்தல்.

9. தான் நினைப்பதை செய்ய துடிப்பது, கட்டுப்பாடுகளில் இருந்து விடுபட நினைப்பது.

10. தனிமையை அதிகம் விரும்புவது

உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றத்தால் மனதிலும் உடலிலும் நிறைய மாற்றங்களை சந்திக்க வேண்டியிருக்கும்.

உணர்வுகளும் படிப்பின் எதிர்காலம் நேராக மோதிக் கொள்ளும் நேரம் என்று கூட சொல்லலாம்.

இந்த வயது ஆண், பெண் இரு பாலருக்கும் உடல் மற்றும் மன ரீதியாக பல மாற்றங்களை ஏற்படுத்தும்.

இதற்கான தீர்வு என்ன? எப்படிக் கையாள்வது

1, முதலில் பெற்றோர்கள் தனது வளர்ந்த பிள்ளைகள் குழந்தை இல்லை என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

பருவ மாற்றத்தை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும். அவர்களைக் குறை கூறாமல் சூழ்நிலையை புரிந்து கொண்டு செயல்படுவது சிறந்தது.

2. தற்போது கல்வி முறையை பொருத்தவரையில் கம்ப்யூட்டர், செல்போன் போன்ற அத்தியாவசிய கருவிகள் அவசியம். ஆனால், அதை எப்படி பயன்படுத்துகின்றனர் என்பதை கவனிக்க வேண்டும்.

3. அதிக கட்டுப்பாடு விதைக்காதீர்கள் பிடித்த டிரஸ், சினிமா, பொழுது போக்கை அனுமதியுங்கள்.

அதே நேரம் எது நல்லது என்பதை புரிய வையுங்கள்.

4. எதுவாயினும் உங்களிடம் பகிர்ந்து கொள்ளும் சூழ்நிலையை அவர்கள் மனதில் பதியுங்கள் அம்மாவோ அல்லது அப்பாவோ அவர்களுடன் நெருக்கமாக இருங்கள்.

5. பெற்றோர்களில் ஒருவர் அரவணைப்பும் இன்னொருவர் கண்டிப்பும் காட்டுங்கள் இருவரும் மிரட்டி கொண்டே இருந்தால் மூன்றாம் நபரை தேட ஆரம்பித்து விடுவார்கள்.

6. அவர்களிடம் அதிகாரத்தை செலுத்தாதீர்கள் நண்பனாக, தோழியாக பாருங்கள்.

7. அவர்கள் தவறான வழிக்குப் போகிறார்கள் என்றால் குறைகூறாமல் வழியை திசை திருப்புங்கள்.

8. பிள்ளைகள் மீது நம்பிக்கை வையுங்கள், அவர்களுக்கு சுதந்திரம் கொடுங்கள் அதே நேரம் கண்காணிப்புடன் இருங்கள்.

9. மற்றவர்களிடம் அறிமுகம் செய்யும்போது பிள்ளைகள் வரைந்த ஓவியமோ, விளையாட்டையோ, விருதுகளை பெருமையுடன் அறிமுகம் செய்யுங்கள்.

உங்கள் மீது மரியாதையும் அடுத்தமுறை இன்னும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தைத் தூண்டும்.

10. அவர்கள் செய்யும் சின்னச் சின்ன செயலுக்கும் பாராட்டுங்கள். தோல்வி அடைந்தால் அடுத்தமுறை பார்த்து கொள்ளலாம் என்று தோளை தட்டி கொடுங்கள்.

படிப்பு மட்டும் இல்லாமல் விளையாட்டு, டான்ஸ், யோகா என்று கற்றுக் கொடுங்கள். இது உடல் மற்றும் மனதை வலிமையாக்கும்.

பெற்றோர்கள் தெரிந்து கொள்ள வேண்டியது…

அவர்கள் உணர்வுக்கு மதிப்பு கொடுங்கள், வாய்ப்பு கொடுங்கள். அவர்களுடன் அதிக நேரம் உரையாடுங்கள். வீட்டில் முக்கிய முடிவுகள் எடுக்கும்போது அவர்களும் உடன் இருக்கட்டும்.

ஆண் மற்றும் பெண் குழந்தைகளிடம் பாகுபாடு பார்க்காதீர்கள். சுயமாக முடிவெடுக்க உதவுங்கள்.

புத்தக வாசிப்பை ஊக்கப்படுத்துங்கள்.

இந்த வயதில் ஆண் மற்றும் பெண் குழந்தைகளிடம் பாலியல் விழிப்புணர்வு ஏற்படுத்துவது பெற்றோர்களின் கடமை.

டீன் ஏஜ் பருவம் என்பது மகிழ்ச்சியும், சோதனை கலந்த காலகட்டம்.

எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் கவனமுடன் இருக்க வேண்டும். சற்று சறுக்கினாலும் மீள்வது கடினமாகிவிடும்.

இந்த வயதினை கடக்க பிள்ளைகளுக்கு அன்பையும், அரவணைப்பையும், நம்பிக்கையைக் கொடுத்து அவர்கள் லட்சியத்தை அடைய உதவுவது பெற்றோர்களின் கடமை.

– யாழினி சோமு

You might also like