”நினைத்ததை முடிப்பவன்” படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தது அதில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.அவர்கள் இரு வேடம் ஏற்றிருந்தார்கள். அதில் இரண்டு பாடல்கள் எடுத்தும் அவருக்கு முழுத்திருப்தி ஏற்படாததால் என்னைக் கூப்பிட்டு அனுப்பினார்கள்.
அதில் ஏற்கனவே கண்ணதாசன் எழுதியிருந்த “நான் பொறந்த சீமையிலே நாலு கோடிப் பேருங்க. நாலு கோடிப் பேர்களிலே நானும் ஒரு ஆளுங்க” என்ற பாட்டு எனக்கு மிகவும் பிடித்திருந்தது இந்தப் பாடல் நன்றாக இருக்கிறது என்று சொன்னேன்.
ஆனால் எம்.ஜி.ஆர். அவர்கள் பாட்டு நன்றாகத்தான் இருக்கிறது. எனக்கே உரிய தனித் தன்மை அதில் இல்லையே என்றார். எப்படி என்று கேட்டேன். ஆயிரத்தில் ஒருவன் என்பதற்கும் நாலு கோடிப் பேர்களிலே நானும் ஒரு ஆளுங்க என்பதற்கும் வித்தியாசம் தெரியவில்லையா என்று எம்.ஜி.ஆர். கேட்டார்.
பத்து நிமிடங்கள் நான் அசந்து உட்கார்ந்து விட்டேன் இவர் பழைய எம்.ஜி.ஆர்.அல்ல. ஒவ்வொரு நிமிடமும் வளர்ந்து கொண்டே. இருக்கும் மாமனிதர், என்ற எண்ணமும், அதுவரையில் அவரிடம் நான் வைத்து இருந்த நம்பிக்கையின் உயர்வும்- என்மனதில் வளர்ந்து கொண்டே போயிற்று.
பிறகு அதே சூழ்நிலைக்கு ட்யூன் போட்டு நான் எழுதிய பாடல் தான் “கண்ணை நம்பாதே! என்று ஆரம்பிக்கும் பாடல் இந்தப் பாடல் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு பரி பூரண திருப்தியளித்தது. மறுநாள் ரிக்கார்டிங்கிற்கு வந்திருந்தார். பாடல் ஒலிப்பதிவு ஆவதற்கு 5 நிமிடங்களுக்கு முன் என்னைத் தனியே அழைத்துச் சென்றார். கடைசி சரணத்தை மறுபடியும் பாடிக் காட்டுங்கள் என்றார்.
பாடினேன், “பொன் பொருளைக் கண்டவுடன் வந்தவழி மறந்து விட்டு தன் வழியே போகிறவர் போகட்டுமே” என்ற வரியில் தன் வழி நல்ல வழியாக,
வந்த வழியை விட சிறந்த வழியாக இருந்தால் தன் வழியே செல்வதில் என்ன தவறு? எனக் கேட்டார்.
பிறகு தான் “வந்த வழி மறந்து விட்டு கண்மூடிப் போகிறவர் போகட்டுமே” என்று மாற்றினேன்.
– கவித்திலகம் மருதகாசி
நன்றி முகநூல் பதிவு