பாலிவுட்டின் புகழ்பெற்ற மூத்த பின்னணிப் பாடகியும், இந்தியாவின் தலைசிறந்த பாடகிகளில் ஒருவருமான லதா மங்கேஷ்கரின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று.
1980-களில் கமல் – அமலா இருவரும் பேருந்தில் தொங்கியபடி காதல் பயணம் செல்லும் ‘வளையோசை’ பாடலுடன் காதலில் விழாத தமிழ் சினிமா ரசிகர்கள் இருக்க முடியாது.
இன்று வரை கொண்டாடப்படும் இந்தப் பாடலின் மற்றுமொரு சிறப்பு, மறைந்த பாடகர் எஸ்பிபியுடன் இணைந்து பின்னணி பாடிய லதா மங்கேஷ்கரின் தேன் குரல்!
சுமார் 80 ஆண்டுகளுக்கு மேல் திரைத்துறையில் பாடியபடி ஒட்டுமொத்த இந்தியாவின் இசைக்குயிலாக வலம் வந்த லதா மங்கேஷ்கர் இந்தூரில் பிறந்து வளர்ந்தவர்.
நான்கு சகோதர சகோதரிகளுடன் பிறந்த லதாவின் வீட்டில் பெற்றோர் தொடங்கி அனைவரும் பாடகர்கள். இவரது இளைய சகோதரியான ஆஷா போஸ்லே மற்றொரு புகழ்பெற்ற பின்னணிப் பாடகி.
தன் இசைப்பயணத்தில் 50 ஆயிரத்தும் மேற்பட்ட பாடல்களை 14 மொழிகளில் பாடி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்று சாதனை புரிந்தவர் லதா மங்கேஷ்கர்.
வட இந்திய மொழிகளில் தொடர்ந்து பாடி வந்த லதா மங்கேஷ்கரை தமிழில் பாட வைத்த பெருமை இளையராஜாவையே சேரும்.
தமிழில் டப்பிங் செய்யப்பட்ட இந்தி படங்களின் மூலம் லதா மங்கேஷ்கரின் குரல் 1950களிலேயே கோலிவுட்டில் அறிமுகமாகி இருந்தது.
ஆனால் 1987-ம் ஆண்டு பிரபு – ராதா நடிப்பில் வெளியான ‘ஆனந்த்’ படத்தில் இடம்பெற்ற ‘ஆராரோ ஆராரோ’ பாடல் தான் லதா மங்கேஷ்கரின் நேரடி தமிழ் பாடல்.
காட்சி அமைப்புகள் தாண்டி இந்தப் பாடல் மற்றும் லதா மங்கேஷ்கரின் குரலுக்கென இன்று வரை தனி ரசிகர் பட்டாளம் உள்ளது.
தொடர்ந்து சத்யாவில் இடம்பெற்ற வளையோசை பாடல், அவரது தனித்துவமான ரீங்காரக் குரலால் கோலிவுட் ரசிகர்களை ஒட்டுமொத்தமாகக் கட்டிப்போட்டு, ஆல்டைம் க்ளாசிக்காக உருவெடுத்தது.
தொடர்ந்து ஒரு சில தமிழ் பாடல்களை இளையராஜாவின் இசையில் மட்டுமே பாடிய லதா மங்கேஷ்கர் அதன் பின் வேறெந்த தமிழ் திரைப் பாடல்களையும் பாடவில்லை.
அதே நேரம் 2006ஆம் ஆண்டு வெளியான அமீர் கானின் ‘ரங் தே பஸந்தி’ படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் லுகா சுப்பி எனும் இந்தி பாடலை ரஹ்மானுடன் இணைந்து பாடியுள்ளார்.
இந்தி சினிமாவின் உணர்வுப்பூர்வமான பாடல்களுள் ஒன்றாகவும் லதாவின் குரலுக்காகவும் இந்தப் பாடல் தொடர்ந்து கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்தியாவின் உயரிய விருதுகளான பாரத ரத்னா, பத்ம பூஷண், பத்ம விபூஷண் எனத் தொடங்கி தாதா சாகேப் பால்கே விருது, 3 தேசிய விருதுகள் என லதா மங்கேஷ்கர் பெறாத விருதுகளே இல்லை.
தன் 92ஆம் வயதில் காற்றோடு காற்றாய் கரைந்த லதா மங்கேஷ்கர் குரலை அவரது நினைவு நாளான இன்று கேட்டு ரசித்துக் கொண்டாடுவோம்!