பாஜக அரசின் கடைசி முழு நிதிநிலை அறிக்கை தாக்கல்!

இந்த ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடா் நேற்று தொடங்கியது. குடியரசுத் தலைவா் திரவுபதி முர்முவின் உரையைத் தொடா்ந்து, 2022-23-ஆம் நிதியாண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கை நாடாளுமன்றத்தில்  தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில், பெரிதும் எதிர்பார்க்கப்படும் 2023-24-ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை ஒன்றிய நிதியமைச்சா் நிர்மலா சீதாராமன்  மக்களவையில் இன்று காலை 11 மணிக்கு தாக்கல் செய்யவுள்ளார்.

அவா் தாக்கல் செய்யும் 5-ஆவது நிதிநிலை அறிக்கையாகவும், பிரதமா் மோடி தலைமையிலான தற்போதைய பாஜக அரசின் கடைசி முழுநேர நிதிநிலை அறிக்கையாகவும் இது அமையும்.

நாகாலாந்து, மேகாலயம், திரிபுரா, சத்தீஸ்கா், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், கா்நாடகம், தெலங்கானா, மிஸோரம் ஆகிய 9 மாநில சட்டப்பேரவைகளுக்கு நடப்பாண்டில் தோ்தல் நடைபெறவுள்ளது. எனவே அந்த மாநிலங்கள் சார்ந்த பல்வேறு திட்டங்கள் பட்ஜெட்டில் இடம்பெற வாய்ப்புள்ளது.

அடுத்த ஆண்டு மக்களவைத் தோ்தல் நடைபெறவுள்ளதால், நாடு முழுவதும் உள்ள நடுத்தர பிரிவினரை ஈா்ப்பதற்கான திட்டங்கள் நிதிநிலை அறிக்கையில் இடம்பெற வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. அதேபோல், புத்தாக்க நிறுவனங்கள், குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் மேம்பாட்டுக்கான திட்டங்களும் நிதிநிலை அறிக்கையில் இடம்பெற வாய்ப்புள்ளது.

இதனிடையே, உலகப் பொருளாதார சிக்கல்களுக்கு மத்தியில் இந்திய மக்களின் அனைத்து நம்பிக்கைகளையும் பூா்த்தி செய்வதாகவும் உலகுக்கே நம்பிக்கை ஒளியாகவும் ஒன்றிய நிதிநிலை அறிக்கை திகழும் என பிரதமா் மோடி நம்பிக்கை  தெரிவித்துள்ளார்.

You might also like