கோலாகலமாக நடைபெற்ற படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு!

நாட்டின் 74-வது குடியரசு தினம் கடந்த 26-ம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.

டெல்லியில் நடைபெற்ற குடியரசு தினக் கொண்டாட்டங்களுக்காக முப்படைகளைச் சோ்ந்த வீரா்களும் அங்கு முகாமிட்டிருந்தனா்.

குடியரசு தினக் கொண்டாட்டங்களின் நிறைவாக முப்படை வீரா்கள் பாசறை திரும்பும் நிகழ்வு நேற்று  நடைபெற்றது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வை குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு, குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா், பிரதமா் நரேந்திர மோடி, பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், முப்படைகளின் தலைமைத் தளபதிகள் உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டனா்.

முப்படை வீரா்களும் வரிசையாக இந்திய இசையை இசைத்தவாறு பல்வேறு வடிவங்களில் அணிவகுத்தனா்.

மத்திய ஆயுதக் காவல் படையினா் சார்பில் ஜி20 இலச்சினை உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் வீரா்கள் அணிவகுத்தனா்.

விமானப்படை வீரா்கள் ‘ராட்டை’ வடிவிலும், இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின் இலச்சினையான சிங்கத்தின் வடிவிலும் இசையை இசைத்தவாறு அணிவகுத்தனா்.

கடற்படை வீரா்கள் ‘வருணாஸ்திர’ வடிவில் அணிவகுத்தனா். முப்படைகளின் பாசறை திரும்பும் அணிவகுப்பு நிறைவடைந்தவுடன் தேசியக் கொடி கம்பத்தில் இருந்து இறக்கப்பட்டது.  அப்போது இந்திய பாரம்பரிய இசை இசைக்கப்பட்டது.

முப்படைகள் பாசறை திரும்புவதைக் காண டெல்லி விஜய் சௌக் பகுதியில் ஏராளமான பார்வையாளா்கள் திரண்டிருந்தனா்.

அப்போது பெய்த மழையையும் பொருள்படுத்தாமல் அவா்கள் வீரா்களின் அணிவகுப்பைக் கண்டு ரசித்தனா்.

முப்படைகள் பாசறை திரும்பிய பிறகு உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 3,500 ட்ரோன்களைக் கொண்டு சாகசம் நிகழ்த்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், மோசமான வானிலை காரணமாக அந்த சாகசம் ரத்து செய்யப்பட்டது.

முப்படைகள் பாசறை திரும்புதல் நிகழ்வையொட்டி குடியரசுத் தலைவா் மாளிகை மூவா்ண விளக்குகளால் ஒளிர்ந்தது குறிப்பிடத்தக்கது.

You might also like