புத்தகக் காட்சி அனுபவம்:
சென்னை புத்தகக் காட்சியில் சந்தியா சென்று வந்த கையோடு எழுத்தாளர் வண்ணதாசன் பற்றி எழுதியுள்ளார் ஆகாசமூர்த்தி. அந்தப் பதிவிலிருந்து…
வண்ணதாசன் அரங்கத்தில் நுழையும்போது கூட்டத்திற்குள் புகுந்து வரும்போது அத்தனை உற்சாகமாக வந்தார். எனக்குத் தெரிந்து இவ்வளவு போட்டோ ஷூட் எடுத்த எழுத்தாளர் யாரையும் பார்க்கவில்லை.
நூற்றுக்கணக்கான ‘சில நேரங்களில் பல மனிதர்களில்’ எனக்கு மிகவும் பிடித்த படங்கள் இவை. அவரது முகநூல் பக்கங்களில் இருந்து.
நண்பர் நவீன் கெளதமன் அழகழகாய் செல்போனில் எடுத்துக் கொண்டே இருந்தார்.
எனக்கும் ஆசை வந்து ‘அகிலம்’ வாங்கி அகிலாண்ட நாயகனுடன் படம் பிடித்துக் கொண்டேன். மருந்து வாங்கிய பிறகு சீட்டை வாங்கி மருத்துவரிடம் கையெழுத்து வாங்கினேன்.
ஒவ்வொரு படமும் ஏதேதோ கதைகள், பேசாமல் பேசி, சிரிக்காமல் சிரித்து, அமைதியுடன் ரசித்து, ஆதுரமாய் அணைத்து, அன்பாலே நனைத்து… கொஞ்சம் சீண்டல் கொஞ்சம் கிண்டல், கொஞ்சம் சுண்டல் போல வாழ்க்கையை கண்டனம் எதுவும் இன்றி வண்ணதாசன் ருசிக்கிறார்.
வற்றாத அன்பின் நதி ஓடிக் கொண்டே இருக்கட்டும். வாசகர்களைக் கொண்டாடும் கலைஞனை வணங்குகிறேன். ஒரு படம் ஒரு கதையை மட்டும் இங்கு பகிர ஆசைப்படுகிறேன்.
என் சொந்த வேலைக்கு இடையில் எனக்கு கிடைத்த அந்த நிமிடங்களில் நான் போட்டோ எடுத்துக் கொண்ட பிறகு கவனித்தது.
ஒரு அழகிய பெண் அவர் அருகில் அமர்கிறார். நண்பர் கேமரா ரெடி. “கொஞ்சம் சிரிங்க சார்…. ப்ளீஸ்” இரண்டு மூன்று தடவை கேட்டுக் கொண்டார் அந்தப் பெண். வண்ணதாசன் சார் சிரித்துக் கொண்டுதான் இருந்தார்.
குமின் சிரிப்பு. ம்ம்… என்று ‘அவள்’ முகத்தைப் பார்க்கிறார். ஆனால் வாய் திறந்து சிரிக்கவில்லை. உண்மையில் எனக்குத் தோன்றியது இதுதான். அவர் சிரித்திருப்பார். பொருநை அளவுக்கு வெள்ளமென கரையுடைத்து. ஏதோ ஒரு செல்ல விளையாட்டு.