– ஆதங்கப்பட்ட டொமினிக் ஜீவா
1980-ல் அவரைச் சந்தித்தது நினைவு அடுக்குகளில் பளிச்சென்றிருக்கிறது.
அப்போது அவர் சென்னை வந்திருந்தார்.
குமரி அனந்தன் இலங்கை பயணம் முடித்து வந்திருந்தார். நானும் நண்பர் மனோபாரதியும் ‘இதயம் பேசுகிறது’ இதழில் எழுதிக் கொண்டிருந்தோம்.
“ஜீவாவையும் குமரியையும் சந்திக்க வைத்து அவர்கள் உரையாடலை போடலாமே” என்றார் பொறுப்பாசிரியர் தாமரை மணாளன்.
இருவரும் மகிழ்ச்சியுடன் சம்மதித்தார்கள். ‘மல்லிகை’ இதழை அச்சடித்து தெருத் தெருவாக சென்று விற்று வருவதாகச் சொன்ன டொமினிக் ஜீவா, “அன்று பாரதி-ஜீவா எப்படி இலக்கியத்திற்காக தங்களை அர்ப்பணித்தார்களோ அதே உணர்வில் தான் நானும் இருக்கிறேன்” என்றார் உருக்கமும் நெகிழ்வும் கலந்த குரலில்.
“நாங்கள் தமிழ்நாட்டு எழுத்தாளர்களைக் கொண்டாடுகிறோம்; கௌரவிக்கிறோம்.
ஆனால் அதுபோல ஈழத்து இலக்கியவாதிகளை இந்தியத் தமிழர்கள் கௌரவிப்பதில்லையே; ஏன்?” என்று உரிமையுடன் கூடிய ஆதங்கத்துடன் கேட்டார் ஜீவா.
குமரி கொஞ்சம் சங்கடப்பட்டுப் போனார் என்றுதான் சொல்ல வேண்டும்.
“நீங்கள் எங்களை சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. ஒரு உதாரணம். முதன் முதலாக உலகத்தமிழ் மாநாடு நடத்துவதற்கு முன்னோடியாக விளங்கியவர் இலங்கை நெடுந்தீவைச் சேர்ந்த தனிநாயகம் அடிகள்.
அவர் மறைந்தபோது நான் சென்னையில் இருந்தேன். அவர் மறைந்த செய்தியை ஒரு தமிழ் பத்திரிகைக் கூட வெளியிடவில்லை” என்று வருத்தத்தை வெளிப்படுத்தினார் ஜீவா.
(தனிநாயகம் அடிகள் மறைந்தது 1980, செப்டம்பர் 3-ம் தேதி. டொமினிக் அவர்களை நாங்கள் சந்தித்தது செப்டம்பர் மூன்றாவது வாரம்).
“உங்கள் மனக்குறை நியாயமானதே” என்று ஒப்புக்கொண்டார் குமரி. அந்தச் சந்திப்பு என்னவோ இரண்டு மணி நேரம் தான்.
ஆனால் டொமினிக் ஜீவா அன்று வெளிப்படுத்திய ஆதங்கமும், தார்மீக கோபமும், குமுறலும் தான் வருடங்கள் பல கழிந்தும் நினைவுகளை பசுமையாக வைத்திருக்கின்றன. அன்னாரது ஆத்மா இறைவன் திருவடியில் இளைப்பாறட்டும்.
நன்றி: ப்ரியன்