பாலிவுட்டின் ‘பதான்’ திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இதில் தீபிகா படுகோனேவுடன் ஷாருக்கான் நடித்த பாடல் காட்சி சர்ச்சைக்குள்ளானது.
இதில் காவிநிற உடையுடன் இடம்பெற்ற (ஆபாச) நடனக் காட்சியை தடை செய்ய வேண்டும் என இந்து அமைப்புகள் போர்க்கொடி உயர்த்தின.
இதுபோல் இந்து மதத்திற்கு எதிராக சில திரைப்படங்களில் சர்ச்சை காட்சிகள் இடம்பெறுவதாக அவ்வப்போது புகார் எழுகிறது.
இந்நிலையில் உ.பி.யின் பிரயாக்ராஜில் பல்வேறு மடங்களின் துறவிகள் சார்பிலான தர்மசபை கூடியது.
இதில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து பேசிய ஜோதிஷ்வர் பீடத்தின் அதிபதி சங்கராச்சாரியார் அவிமுக்தேஷ்வரானந்த், “இந்து சனாதன தர்மம் மற்றும் இந்து கலாச்சாரத்திற்கு எதிராக வெளியாகும் எந்த மொழி திரைப்படத்தையும் தொலைக்காட்சி மற்றும் இணையதள தொடர்களையும் அனுமதிக்க மாட்டோம்.
ஆபாசக் காட்சிகளையும் பெண்களுக்கு எதிரான கலவரக் காட்சிகளையும் ஏற்க முடியாது. இதற்காக எங்கள் தர்மசபை கூடி ஆலோசித்து சில வழி காட்டுதல்களை வெளியிடுகிறது.
அதன்படி, 9 பேர் கொண்ட தணிக்கைக் குழு அமைக்கப்படுகிறது. அனைத்து திரைப்படங்கள், தொடர்களை இக்குழு பார்த்தபின் அவை மக்கள் பார்வைக்கு வெளியிடப்படும்.
இக்குழு மத்திய அரசின் தணிக்கைக் குழுவுக்கு உதவியாக இருக்கும். இந்தப் பிரச்சினையில் நாங்கள் நீதிமன்றம் செல்லவும் தயார்” எனக் கூறினார்.
ஏற்கெனவே தீபிகா படுகோனேவின் ‘பத்மாவத்’, தமிழ்ப்பட இயக்குநர் லீனா மணிமேகலையின் ‘காளி’ ஆவணப்படம் உள்ளிட்டவையும் சர்ச்சைக்கு உள்ளாயின.
இதுபோன்ற தயாரிப்புகளை மறு தணிக்கை செய்ய துறவிகளால் அமைக்கப்பட்ட குழுவும் சர்ச்சையை கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏனெனில் மத்திய அரசின் திரைப்படத் தணிக்கை குழு அனுமதியளிப்பதை இக்குழு மறு தணிக்கை செய்யும் என அறிவிக்கப்பட்டிருப்பது இதற்கு காரணமாகும்.