நளினமான நடனத்தால் மெஸ்மரிஸம் செய்த மாணவிகள்!

பொன்மனச் செம்மல் டாக்டர் எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்தநாளையொட்டி சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர் ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாட்டிய நாடகம் நடைபெற்றது.

கல்லூரியைச் சேர்ந்த நாட்டியத்துறை மாணவியரின் உருவாக்கத்தில், ‘ஆனந்த கிருஷ்ணா’ என்ற தலைப்பில் நிகழ்த்தப்பட்ட இந்த நாட்டிய நாடகம் பார்வையாளர்களை மெய் மறக்கச் செய்தது.

டாக்டர் எம்.ஜி.ஆர் ஜானகி மகளிர் கல்லூரியின் நாட்டியத்துறை தலைவர் சாரதா சேதுராமன் உருவாக்கி இருந்த இந்த நாட்டிய நாடகத்தைக் காண பலர் வருகை தந்திருந்தனர். அதில், தமிழ்நாடு இசைக் கல்லூரியைச் சேர்ந்த ‘ஆச்சார்ய சூடாமணி’ முனைவர் சித்ரா சுப்ரமணி  குறிப்பிடத்தக்க சிறப்பு விருந்தினராவார்.

மாணவிகளின் அற்புதமான நாட்டியத்தில் அரங்கேற்றப்பட்ட இந்த நாடகத்தில் கண்ணனின் பிறப்பு வளர்ப்பு துவங்கி, வெண்ணை திருட்டு, மாயக்கண்ணனின் லீலைகள், கோபியர்களுடனான விளையாட்டுக்கள், தாய் யசோதாவின் கண்டிப்பு, காலிங்க நர்த்தனம் என தொடர்ந்து நிறைவாக மங்களப் பாட்டு வரை சுமார் 15 பாடல்களில் அவ்வளவு அற்புதமாக தங்களின் திறமைகளை மாணவிகள் வெளிப்படுத்தினர்.

நட்டுவாங்கம் – திருமதி சாரதா சேதுராமன்

குரல் – திருமதி அஞ்சனா பத்ரி

மிருதங்கம் – திரு நாகை நாராயணன்

வயலின் – குமாரி அனந்தலட்சுமி

புல்லாங்குழல் – திரு கோகுல்

இந்த நிகழ்ச்சியில் கல்லூரியின் தலைவர் வழக்கறிஞர் முனைவர் குமார் ராஜேந்திரன், கல்லூரி முதல்வர் டாக்டர் மணிமேகலை, பிற துறைத் தலைவர்கள், ஆசிரியப் பெருமக்கள், மாணவிகள், பெற்றோர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியின் இறுதியில் பேசிய சிறப்பு விருந்தினர் முனைவர் சித்ரா சுப்ரமணி, மாணவிகளின் நாட்டியத் திறமையையும் அர்ப்பணிப்பு உணர்வையும் பாராட்டிப் பேசினார்.

நன்றியுரை வழங்கிய கல்லூரியின் தலைவர் முனைவர் குமார் ராஜேந்திரன் மாணவிகளின் அற்புதமான நாட்டியத்தைப் பாராட்டியதோடு, அடுத்த ஆண்டு பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாற்றை இதேபோன்று நாட்டிய நாடகமாக உருவாக்க உள்ள மகிழ்ச்சியான தகவலையும் அறிவித்தார்.

You might also like