பொதுத்தளத்தில் வெடித்த விஜய் – அஜித் மோதல்!

வலைத்தளங்களில் மோதிக்கொண்ட விஜய், அஜித் ரசிகர்கள், பொதுத்தளத்தில் உருண்டு, புரண்ட நிகழ்வு, திரை உலகைத் தாண்டி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இருவரது படங்களும் ஒரே நாளில் வெளியானதால், ஒரே இடத்தில் திரண்ட ரசிகர்கள், மல்யுத்தத்தை பகிரங்கமாக விளையாடியுள்ளனர்.

தமிழகம் முழுவதும் ஒரே நேரத்தில் வெடித்துள்ள இந்த மோதல், கவலைக்குரியதாகவே பார்க்கப்படுகிறது.

12 வது முறையாக நேருக்கு நேர்

விஜய்யும் அஜித்குமாரும் சம காலத்தில் சினிமாவில் நாயகன்களாக அறிமுகமானார்கள்.

பலமான பின்புலத்தோடு சினிமாவில் நுழைந்தவர் விஜய். சுயமாகவே கோடம்பாக்கத்தில் கால்பதித்து, பெரும் போராட்டத்துக்கு பின், ‘அல்டிமேட் ஸ்டார்’ பட்டத்தை எட்டியவர் அஜித்.

ஒரு பொங்கல் நாளில் தான் இருவரது படங்களும் முதன் முதலாய் மோதிக்கொண்டன.

1996 ஆம் ஆண்டு ஜனவரியில் பொங்கல் திருநாளையொட்டி விஜய் நடித்த ‘கோயமுத்தூர் மாப்ளே’ படமும், அஜித் நடித்த ‘வான்மதி’ படமும் ரிலீஸ் ஆகின.

2014 ஆம் ஆண்டு ஜனவரியில் பொங்கல் நாளில் விஜயின் ‘ஜில்லா’வும், அஜித்தின் ‘வீரம்’ சினிமாவும் வெளியானது.

அதன்பிறகு எட்டாண்டுகளுக்கு பிறகு கடந்த 11 ஆம் தேதி விஜயின் ’வாரிசு’ம், அஜித்தின் ‘துணிவு’ம் வெளியானது.

கடந்த 25 ஆண்டுகளில் இருவர் படங்களும் ஒரே நாளில் வெளியாவது இது 12வது முறை.

மோதல் ஏன்?

தமிழகத்தின் வடமுனையான சென்னை ரோகிணி திரை அரங்கில் ஆரம்பித்து மாநிலத்தின் தென்கோடியான சங்கரன்கோவில் வரை இரு தரப்பினரும், குஸ்தியில் இறங்கி, தியேட்டர்களை ரணகளம் ஆக்கி விட்டனர்.

இதற்கு முன்பு எம்.ஜி.ஆர் – சிவாஜி ரசிகர்களிடையே போட்டி இருந்தது உண்மை. ஒருபோதும் அது கலாட்டாவாக உருவானதில்லை.

ரஜினி – கமல் ரசிகர்கள் மத்தியிலும் கருத்து மோதல் உண்டு. ஆனால் தெருச்சண்டையில் ஈடுபட்டதில்லை.

இப்போது மட்டும் ஏன் யுத்தம் வெடித்தது?

ஒரே தியேட்டரின் இரண்டு திரைகளில் இருவர் படங்களும் வெளியிடப்பட்டதே மோதலுக்கான பிரதான காரணம்.

எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் விஜயின் ‘ஜில்லா’வும், அஜித்தின் ‘வீரம்’ சினிமாவும் ஒரே நாளில் வெளியானது. ஆனால் ஒரே தியேட்டரை பங்கு போட்டுக்கொண்டதில்லை.

வேறு வேறு தியேட்டர்களில் வெளியானதால் இரு தரப்பு ரசிகர்களும் நேருக்கு நேர் சந்தித்துக்கொள்ள வாய்ப்பு இல்லாமல் போனது. இப்போது நேருக்கு நேர் சந்திக்க வாய்ப்பு கிட்டியது.

வலைத்தளங்களில் பல ஆண்டுகளாக ஆக்ரோஷமாக மோதிக்கொண்ட ரசிகர்கள், நேரில் ஒருவரை ஒருவர் பார்த்ததும் கீரியும், பாம்புமாக மாறிவிட்டனர்.

இரு தரப்பிலும் சமபலமான ஆட்கள் இருந்ததால் போலீசாரால் கட்டுப்படுத்த முடியாமல் போய் விட்டது.

நடிகர்களுக்கும் பங்குண்டு

இந்த மோதலில் சம்மந்தப்பட்ட இரு நடிகர்களுக்குமே பங்கு உண்டு என்பதை மறுக்க முடியாது.

தங்கள் தரப்பு ரசிகர்களை குஷிப்படுத்த படங்களில் அவர்கள் பேசிய ‘டயலாக்’ படப்பிடிப்பு தளத்தோடு முடிந்து விட்டது. ஆனால் ரசிகர்களை சண்டைக்கோழி ஆகி விட்டது.

2003 ஆம் ஆண்டு வெளிவந்த ’திருமலை’ படத்தில், அஜித்தை விஜய், வசனத்தில் சீண்டி இருப்பார்.

“வாழ்க்கை ஒரு வட்டம். அதில் ஜெயித்தவன் தோற்பான். தோற்றவன் ஜெயிப்பான்’’ என கர்ஜித்து கைத்தட்டல்களை குவிப்பார்.

அஜித்துக்கு மட்டும் கைத்தட்டல் வாங்க ஆசை இருக்காதா என்ன?

அடுத்த 2004 ஆம் ஆண்டு வெளியான ‘ஜனா’ சினிமாவில் “வாழ்க்கை ஒரு வட்டமோ, சதுரமோ கிடையாது, மேலேயும், கீழேயும் போய்ட்டு வர… எனக்கு அது நேர்கோடு. குறுக்க வர்ரவனை முடித்துவிட்டு போய்ட்டே இருப்பேன்” என அஜித் முழங்குவார்.

இதன் பின்னரும் சில சினிமாக்களில், ‘டயலாக்’ போர் நீடிக்க, இருவரது ரசிகர்களும் எதிரிகளாகவே ஒருவரை ஒருவர் பாவித்துக் கொண்டனர்.

அதன் உச்சம் தான், அண்மையில் நிகழ்ந்த வன்முறை வெறியாட்டங்கள்.

இரு நடிகர்களும், வேண்டுகோள் வைத்து மோதலை நிறுத்துவது சாத்தியமில்லை.

ஏனென்றால், இருவருமே பலமுறை இது போன்ற உபசேதங்களை, தங்கள் ரசிகர்களுக்கு சொல்லிச் சொல்லி சோர்ந்து விட்டார்கள்.

ஒரே தியேட்டரில் இருவர் படங்களும் திரையிடுவதை தவிர்த்தால் மட்டுமே. இந்த மோதல்களை தவிர்க்க முடியும்.

-பி.எம்.எம்.

You might also like