இந்தியா-இலங்கை இடையிலான 2வது ஒருநாள் ஆட்டம் நேற்று கொல்கத்தாவில் பகலிரவு ஆட்டமாக நடந்தது. முதல் ஆட்டத்தில் வென்ற இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.
இந்த 2வது ஆட்டத்தில் வென்றால் தொடரை சமன் செய்யலாம் என்ற இலக்கில் இலங்கை முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய தரப்பில் சாஹலுக்கு பதில் குல்தீப் களமிறக்கப்பட்டார்.
அதற்கு நல்ல பலன் இருந்தது. இந்திய பந்து வீச்சாளர்களின் அதிரடியான பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இலங்கை அணி அடுத்தடுத்து விக்கெட்களை பறி கொடுத்தது.
அந்த அணி 39.4 ஓவரில் எல்லா விக்கெட்களையும் இழந்து 215 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக அறிமுக வீரர் நுவனிந்து 50 ரன்கள் எடுத்தார்.
இந்திய தரப்பில் சிராஜ், குல்தீப் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், எடுத்தனர். அதனையடுத்து 216 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இந்தியா விளையாடத் தொடங்கியது.
சிறப்பாக விளையாடிய இந்திய அணி 40 பந்துகள் மீதம் இருந்த நிலையில், 6 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்கள் எடுத்து, 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கே.எல். ராகுல் 64 ரன்கள், குல்தீப் யாதவ் 10 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா 2-0 என்ற முன்னிலையுடன் தொடரை கைப்பற்றி உள்ளது. 3வது போட்டி 15ம் தேதி திருவனந்தபுரத்தில் நடக்கிறது.