– குடியரசுத் தலைவருக்கு முதலமைச்சர் வலியுறுத்தல்
மாநில அரசு சிறந்த நிர்வாகத்தை வழங்க ஒத்துழைப்பு அளிக்க ஆளுநருக்கு அறிவுரை வழங்க வேண்டும் என, குடியரசுத் தலைவருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக குடியரசுத் தலைவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் கடந்த 9-1-2023 அன்று ஆளுநர் உரையுடன் பேரவைக் கூட்டத் தொடர் துவங்கியது என்றும்,
அன்றைய தினம் சட்டமன்றத்தில் ஆளுநர் தனது உரையில் ஏற்கெனவே ஒப்புதல் அளிக்கப்பட்ட வரைவு உரையிலிருந்த பல பகுதிகளைப் படிக்காமலும், உரையில் குறிப்பிடப்படாத பல புதிய கருத்துகளை இணைத்தும் உரையாற்றினார் எனவும்,
இது தமிழ்நாடு சட்டமன்ற வரலாற்றின் மரபுகளை மீறிய செயல் என்பதாலும், தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியாவே போற்றும் தலைவர்களின் பெயர்களை படிக்காமல் தவிர்த்ததை அவைக் குறிப்பில் பதிவு செய்யும் விதமாக ஒரு திருத்தத் தீர்மானத்தை கொண்டு வந்து, அது சட்டமன்றத்திலிருந்து உறுப்பினர்களின் ஒப்புதலோடு நிறைவேற்றப்பட்டது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு மாநிலத்தில் ஆளுநர் பதவி என்பது மிகவும் உயர்வான ஒன்று எனவும், ஆளுநர் என்பவர் அரசியல் கருத்துகளுக்கு, வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டவராக இருக்க வேண்டும் எனவும்,
ஆனால், ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு அரசுடன் ஒரு கருத்தியல் அரசியல் மோதல் போக்கைக் கடைபிடித்து வருகிறார் எனவும் இது நமது அரசியலமைப்பு சட்டத்திற்கு முழுவதும் மாறானதாக உள்ளது எனவும் முதலமைச்சர் கடிதம் மூலம் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழ் மக்கள், எங்களின் தனிப்பட்ட பண்பாடு, இலக்கியம், சமநோக்கான அரசியல் போன்ற அனைத்தின் மீதும் ஒரு கடும் எதிர் மனப்பாங்கினைக் கொண்டவராக ஆளுநர் தம்மை வெளிப்படுத்திக்கொண்டே இருக்கிறார் என்றும் தமிழ்நாட்டில் பின்பற்றப்படும் திராவிடக் கொள்கை, சமத்துவம்.
சமூகநீதி, பகுத்தறிவு மற்றும் சுயமரியாதை ஆகியவை மக்களின் மனங்களில் இருப்பது அவருக்கு ஏற்கவியலாத ஒன்றாக உள்ளது என்றும் பொதுமேடைகளில் அவர் தமிழ்ப் பண்பாடு, இலக்கியம் மற்றும் சமூக அமைப்பிற்கு எதிரான கருத்துக்களையும் தெரிவித்து வருகிறார் என்றும்
அதன் ஒரு பகுதியாகவே சட்டமன்றத்தின் தொடக்க நாளில் அவர் நடந்து கொண்ட விதமும், சட்டமன்ற மாண்பினை அவமதிக்கும் வகையில் அவர் நடந்து கொண்டதும் காணப்படுகிறது என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மாநிலத்தின் மிக முக்கிய, அரசியமைப்பின் உயரிய பொறுப்பிலுள்ள ஒருவர் இவ்வாறு நடந்துகொள்வதும், மதம் மற்றும் மொழி சார்ந்த சார்ப்பு நிலைகள் எடுப்பதும், மக்களின் எண்ணங்களுக்கு மதிப்பளிக்காமல் நடத்துகொள்வதும் மாநில சமூக கட்டமைப்புகளை சிதைப்பதும் மிகவும் வேதனையளிக்கும் ஒன்றாகும் எனவும்,
எனவே மாநில அரசு சிறந்த நிர்வாகத்தை வழங்க ஒத்துழைப்பு அளிக்க ஆளுநருக்கு அறிவுரை வழங்க வேண்டும் என, குடியரசுத் தலைவருக்கு எழுதியுள்ள கடிதத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.