நம்மை இயக்கிக் கொண்டிருக்கும் தொலைக்காட்சிகள்!

யாராவது பி.ஹெச்.டி பட்டத்திற்கு ஆய்வு செய்கிறவர்கள் தமிழகத்தில் தொலைக்காட்சி சீரியல்களும், அதைப் பார்க்கும் பார்வையாளர்களின் மனநிலையில் என்கிற தலைப்பில் ஆய்வு செய்தால் சுவாராஸ்யமாக இருக்கும்.

முன்பு குடும்ப நெகிழ்வையும், அதீதப் பாசத்தையும் வெளிப்படுத்தும் திரைப்படங்களுக்குப் போகும் பெண்மணிகள் கண் கசங்கி அழுது அதைத்துப் போன கன்னத்துடன் ஏதோ துக்க வீட்டுக்குப் போய் வந்த மாதிரி திரையரங்குகளை விட்டு வெளியே வருவார்கள்.

இப்போது அதே விளைவை வீட்டுக்குள்ளேயே ஏற்படுத்துகின்றன தொலைக்காட்சி சீரியல்கள்.

குறிப்பிட்ட சீரியல்கள் துவங்கும் நேரத்தில் உறவினர்களோ, நண்பர்களோ வீட்டுக்கு வருவதைக் கூட விரும்பாத மனநிலைக்குப் போய்விடுகிறார்கள். செல்போன் பேச்சுக்களைக் கூட அந்த நேரத்தில் தவிர்க்கிறார்கள்.

அந்த அளவுக்குப் பார்வையாளர்களைக் கட்டிப் போட்டிருக்கின்றன சீரியல்கள்.

இந்த சீரியல்களைப் பார்க்கச் சொல்லி யாராவது நிர்பந்தப்படுத்துகிறார்களா? பெண்களோ, ஆண்களோ அவர்களாகவே தொலைக்காட்சி சீரியல்களைப் பார்த்தால் நாங்கள் என்ன செய்ய முடியும் என்று தொலைக்காட்சி நிறுவனங்களும் பொறுப்புடன் கேட்கலாம்.

ஆனால் ஒரு போதையூட்டும் காட்சித் தொடரைப் போல, சில சாதுர்யங்கள் மூலம் தன்னைப் பார்க்க வைத்துக் கொண்டிருக்கின்றன சீரியல்கள்.

காட்சிரீதியாக விரியும் வலையில் மாட்டிக் கொண்ட உயிர்களைப் போல, அதைப் பார்த்தாக வேண்டிய கட்டாய மனநிலைக்கு வந்து சேர்கிறார்கள் பார்வையாளர்கள்.

போதையும், மயக்கமும் எந்த வழியாகவும் வந்தடையலாம்.

பல ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த குடும்ப உறவுகளை மையப்படுத்திய சீரியல் ஒன்றில் முக்கியப் பாத்திரம் இறந்தபோது, பலர் தங்கள் வீட்டையே துக்க வீட்டைப் போல மாற்றி விட்டார்கள்.

சாயந்திரம் ஆனால் டாஸ்மாக் கடைக்குப் போகப் பழக்கப்பட்டுவிட்ட குடிமகன்களைப் போல, மதியம், மாலை என்று சீரியல்கள் துவங்கி விட்டாலே தொலைக்காட்சிப் பெட்டிகளுக்கு முன்னால் உறைந்த நிலைக்குப் போய் விடுகிறார்கள் பல குடும்பத்துப் பெண்கள்.

இதில்  எந்த அளவுக்குத் தன்னை மறந்த நிலைக்குப் பெண்கள் போகிறார்கள் என்றால், தொலைக்காட்சித் தொடர்களை கவனத்துடன் பார்க்கும் நேரத்தில் வீட்டிற்குள் திருட வந்தவர்களைக் கூடக் கவனிக்காத அளவுக்குத் தீவிரமாக இருந்திருக்கிறார்கள்.

இப்படித் தொலைக்காட்சி பார்க்கும் நேரத்தில் நடக்கும் கொள்ளைகள் செய்திகளாகவும் வெளிவந்திருக்கின்றன.

முன்பு இயக்குநர்கள் பீம்சிங், கே.எஸ்.கோபால கிருஷ்ணன் போன்றவர்கள் எடுத்த படங்களில் காண்பிக்கப்பட்ட குடும்ப நெகிழ்வு பார்ப்பவர்களையும் தொற்றியிருக்கிறது.

அவரவர் குடும்பங்களில் குறைந்தபட்சப் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. எப்படிப்பட்ட நிலையிலும், பாசத்திற்கு முன்னுரிமை கொடுக்கிற இயல்பை வலுப்படுத்தியிருக்கின்றன அப்படிப்பட்ட திரைப்படங்கள்.

வீட்டுக்குள் நடுக்கூடங்களிலோ, தனியறைகளிலோ வைக்கப்பட்டிருக்கும் பெரும்பாலான தொலைக்காட்சிப் பெட்டிகள் தற்போது ஏற்படுத்திக் கொண்டிருக்கும் உளவியல் தாக்கங்கள் மாறுபட்டவை.

வீட்டில் இயல்பாக  உறவுகளுக்கு இடையில் நிகழ்ந்து கொண்டிருந்த உரையாடல்களைத் துண்டித்து விட்டிருக்கின்றன இந்தத் தொலைக்காட்சித் தொடர்கள்.

அவற்றைப் பார்க்கும் நேரத்தில் பிறர் வீட்டில் தங்களிடம் பேசுவதைத் தொந்திரவாய் நினைக்கும் அளவுக்கு முற்றிய உணர்வு நிலைக்குப் போய் விடுகிறார்கள் பல பெண்கள்.

இவர்கள் தான் தொலைக்காட்சியைப் பார்ப்பவர்களின் எண்ணிக்கையைத் தீர்மானிக்கிற டி.ஆர்.பி.யின் இலக்கு.

பெரும்பாலும் குடும்பத்துப் பெண்களை மையப்படுத்தியே எடுக்கப்படும் சீரியல்கள், பெண்களை எப்படிச் சித்தரிக்கின்றன?

பெரும்பாலான சீரியல்களில் பெண்களே வன்மத்துடன் பிறரைக் கொடுமைப்படுத்தும் கதாபாத்திரங்களாக வருகிறார்கள். எல்லாரையுமே சந்தேகப்படுகிறார்கள் அல்லது அதீதப் பாசத்தைக் காட்டுகிறார்கள்.

கணவர் பாத்திரத்தில் வருகிறவர்களும் பல தொடர்புகளுடன், பெண்களை இம்சிக்கிறவர்களாக இருக்கிறார்கள். பழைய நிலப்பிரபுத்துவ மதிப்பீடுகளைத் தூக்கிப் பிடிக்கிறவர்களாக இருக்கிறார்கள்.

மிகவும் பரவலாகப் பார்க்கப்பட்ட ஒரு சீரியலில் வரும் பிரதானப் பெண் கதாபாத்திரம் அநியாயத்திற்கு வெகுளியாக இருக்கிறது. கணவன் விவகாரத்துப் பெறுவதற்காக நீதிமன்றத்திற்குக் கூட்டிக் கொண்டு போனால் கூட, அங்கும் போய் மலங்க மலங்க  முழிக்கிறது.

நீதிபதி கேட்கிறபோது எதுவும் தெரியாத களங்கமற்ற முகத்துடன் தலையாட்டுகிறது.

பிறகு கணவன் தன்னை ஏமாற்றியது தெரிய வந்ததும் இன்னும் பேய் அறைந்த மாதிரி மழையில் தெருவில் போக்குவரத்தையும் பார்க்காமல் நடந்து வருகிறது.

வீட்டுக்கு  வந்து தனியாக யாருடனும் பேசாமல் இரவு முழுவநும் பள்ளிக்கூடத்தில் ஸ்டூல் மேல் நிற்கிற மாணவியைப் போல் நிற்கிறது.

ஒரு வாரத்திய எபிஸோடு முழுவதும் பேசாமல், அப்புறம் கணவனை நிறுத்தி பளிச் டயலாக்கைப் பேசுகிறது.

பிறகு விரைவில் விவாகரத்தும் உடனடியாக நடக்கிறது.

இன்னொரு பிரபலமான சீரியலில் மனைவிக்கு இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்த விபரம் குடும்பத்தினருக்கெல்லாம் தெரிகிறது. ஆனால் டாக்டரான கணவனுக்கு மட்டும் தெரியவில்லை.

மனைவியைச் சந்தேகப்பட்டு விலக்கி வைக்கிறார். அதை வீட்டில் உள்ளவர்களும் பத்து ஆண்டுகளாகப் பொறுப்பாக வேடிக்கை பார்க்கிறார்கள்.

இதிலும் க்ளைமாக்ஸ் நெருங்குகிறது என்று பார்த்தால்- இதிலும் விவாகரத்து இருவருடைய ஒப்புதலுடனும் நடக்கிறது.

நடைமுறையில் ஏகப்பட்ட விவாகரத்து வழக்குகள் அதிகரித்து வருவதைப் போலவே- தொலைக்காட்சி சீரியல்களிலும் விவாகரத்துகள் சாதாரணமாக நடக்கின்றன.

இன்னொரு தொடரில். வருகிற சில பெண் பாத்திரங்கள் ஹிஸ்டீரியா நோயாளிகளைப் போல விசித்திரமாக நடந்து கொள்கிறார்கள்.

அதை வீட்டில் பார்த்துக் கொண்டிருக்கும் பெண்களுக்கும் பிரஷர் ஏறித் தலைசுற்றலுக்கு ஆளாகும் அளவுக்குப் போகிறார்கள். சீரியல்கள் பார்க்கும் பெண்களைப் பதற்றத்திலேயே வைத்திருக்கின்றன.

தொலைக்காட்சியில் உணர்ச்சிவப்பட்டு நடிப்பவர்கள் காமிரா நகன்றதும் இயல்பு நிலைக்குத் திரும்புவதைப் போல, வீட்டில் அந்த சீரியலைப் பார்த்துக் கொண்டிருப்பவர்கள் இயல்பு நிலைக்குத் திரும்புவதில்லை.

அந்தக் கொந்தளிப்பைத் தங்கள் வீட்டில் அருகில் இருக்கும் உறவுகளிடம் வெளிப்படுத்துகிறார்கள்.

இதனால் பல வீடுகளில் விரிசல்கள் வருமளவுக்குப் பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன சீரியல்கள்.

ஒவ்வொரு தொலைக்காட்சியிலும் மதியம் துவங்கி இரவு வரை இந்தத் தொலைக்காட்சித் தொடர்கள் துவங்கி விடுவதால், பல தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு இடையே போட்டியும் நடக்கிறது.

அதற்கேற்றபடி தொடரில் குற்றங்களும், குரூரங்களும், மன விசித்திரங்களும் அரங்கேறுகின்றன.

கொரோனாத் தொற்றை விடக் கொடுமையான உளவியல் தொற்றைப் பல வீடுகளில் உருவாக்கிக் கொண்டிருக்கின்றன தொலைக்காட்சித் தொடர்கள்.

இவற்றைச் செல்போன் மூலமும் இடைவெளி இல்லாமல் பார்க்கும் அளவுக்குத் தொழில் நுட்பத்தைத் தெரிந்து வைத்திருக்கிறது இன்றைய சமூகம்.

இரட்டை அர்த்தம் தொனிக்கும் பேச்சுக்களும் அல்லது ஆபாசத்தை நேரடியாக உணர்த்தும் வசனங்களும் சில ‘’ ரியாலிட்டி ஷோ’’க்களில் நடப்பது இன்னும் கொடுமை.

எவ்வளவு டி.ஆர்.பி.,ரேட்டிங் ஏறுகிறதோ அதற்கேற்றபடி அந்தத் தொலைக்காட்சி சீரியலுக்கு விளம்பரங்கள் வந்து குவிகின்றன. வருமானம் பெருகிறது.

பார்த்துக் கொண்டிருக்கும் பார்வையாளர்களின் எண்ணிக்கையை எப்படியாவது அதிகப்படுத்த எதுவும் செய்யலாம் என்பது தான் தொலைக்காட்சி நிறுவனங்களில் எழுதப்படாத விதி.

ரிமோட்கள் மூலம் நாம் தொலைக்காட்சிப் பெட்டிகளை இயக்க வில்லை. தொலைக்காட்சிகள் தான் மறைமுகமாகவோ, நேர்முகமாகவோ ஒரு ரிமோட்களைப் போல, தனக்கு முன்னால் பார்ப்பவர்களை இயக்கிக் கொண்டிருக்கின்றன.

இது தான் யதார்த்தம்.

-யூகி

You might also like