கடவுளை நம்புவதும், கும்பிடுவதும்கூட மூடநம்பிக்கைதான் கடவுளை நம்பிக் கொண்டிருப்பவர்கள் எத்தனை பேர்கள் உண்ண உணவு இன்றி, உடுக்க உடையுமில்லாமல் தெருத் தெருவாகத் திரிவதைக் காண்கிறோம்.
இதுபோலவே கடவுளைப் பற்றியே சிறிதும்கூட நினைத்துப் பார்க்காதவர்கள் எவ்வளவோ தூரம் முன்னேறி சீரும் சிறப்புமாக வாழ்வதை நாம் காண்பதில்லையா?
உதாரணத்துக்கு பெரியார் ஈ.வெ.ரா. அவர்களையே சொல்லலாம். கடவுள் இருக்கின்றார் என்று ஒருவர்கூட நிரூபித்துக் காட்டவில்லை. கடவுள் உண்மையிலேயே இருப்பதாக இருந்தால், அவர் வசித்துவரும் கோயில்களையாவது காப்பாற்ற முயற்சி செய்திருப்பார்.
சமீபத்தில் குருவாயூர் கோயில் முழுவதுமே தீப்பற்றி எரிந்து சாம்பலானது. அங்கு ஒரு சக்தியோ, தெய்வமோ இருந்திருந்தால் அதைக் காப்பாற்றி இருக்கமுடியும். ஒன்றும் இல்லாததை நம்பிக் கொண்டு ஏன் இத்தனை மக்கள் தங்கள் காலத்தையும் சக்தியையும், செல்வத்தையும் வீண் விரையம் செய்யவேண்டும்.
கடவுள் என்பது கற்பனை என்றும் அதனால் எந்தவிதமான நன்மையும், தீமையும் கிடையாது என்று – பெரியார் அவர்கள் பல ஆண்டுகளாகக் கூறிக்கொண்டு வருகிறார்.
அதையே நானும் சொல்லிக்கொண்டு வருகிறேன். இருப்பினும் கோயிலுக்குச் செல்பவர்களின் கூட்டம் அதிகரித்துக் கொண்டேதான் வருகிறது. சென்ற மாதம் திருப்பதி உண்டியலில் 28 லட்ச ரூபாய் வசூலாகியுள்ளது.
இது எதைக் காட்டுகிறது? மூட நம்பிக்கை வளர்ந்துள்ளதையே காட்டுகிறது. கடவுள் இல்லை என்பதை எவ்வளவுதான் எடுத்துச் சொன்னாலும் மக்கள் நம்புவதாக இல்லை; வளர்ந்து வரும் மூட நம்பிக்கைகளைத் தடுக்கவும் வழியில்லை.
மூட நம்பிக்கைகள் இப்படியே வளர்ந்துகொண்டு சென்றால் மக்கள் ஒரு சிலரின் அடிமைகளாகி விட நேரும். இவ்வளவு தூரம் கல்வி அறிவு வளர்ச்சியடைந்தும் மூடநம்பிக்கையும் வளர்ச்சியடைந்துகொண்டு வருவது மிகவும் வருத்தமாகவே இருக்கிறது.
– 07.01.1971 அன்று சேலத்தில் நடைபெற்ற மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டில் அறிஞர் ஜி.டி.நாயுடு ஆற்றிய உரை.
– நன்றி முகநூல் பதிவு