சிவகங்கைச் சீமையும் வீரபாண்டிய கட்டபொம்மனும்!

வீரநிலத்தின் வேறுபட்ட போர்வாள்கள்!

தமிழ்த் திரையுலகில் இந்திய சுதந்திரப் போராட்டம் பற்றி பல்வேறு திரைப்படங்கள் வெளிவந்திருந்தாலும், அதில் ஈடுபட்ட நாயகர்களின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்படவில்லை.

புராண கற்பிதங்கள், அரச வாழ்வு குறித்த கற்பனைகள், சமூகநீதிக் கதைகள் பெaருகிய சூழலில் 1959-ல் வெளியான ‘சிவகெங்கைச் சீமை’, ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ ஆகியன அவ்வெண்ணத்தில் மாற்றத்தை ஏற்படுத்தின.

மே 10-ம் தேதியன்று லண்டனில் முதன்முதலாகத் திரையிடப்பட்ட ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ ஆறு நாட்கள் கழித்து தமிழ்நாட்டிலுள்ள தியேட்டர்களில் வெளியிடப்பட்டது. 1959ஆம் ஆண்டு மே 19ஆம் தேதியன்று ‘சிவகெங்கைச் சீமை’ வெளியானது.

இதிலிருந்தே, இரண்டு திரைப்படங்களுக்கும் இடையே போட்டி இருந்தது தெரிய வரும்.

சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட வீரத்தலைவர்கள் இப்படித்தான் இருந்திருப்பார்கள் என்று மக்கள் நினைக்குமளவுக்குத் தன் நடிப்பில் ராஜகம்பீரத்தை வெளிப்படுத்தினார் சிவாஜி கணேசன்.

பின்னாட்களில், அரசனின் முறுக்கு இப்படித்தான் இருக்குமென்று இலக்கணம் வகுக்கும் அளவுக்கு அவரது நடிப்பு மைல்கல் ஆனது.

திரைக்கதை அமைப்பு, வசனங்கள், உடையலங்காரம், கலை, நடிப்புக்கலைஞர்களின் பாவனைகள் என்று பல துறைகளில் வேறுபட்டு நின்றது ‘சிவகெங்கைச் சீமை’. கண்ணதாசனின் மேதைமை பிற்காலத்தில் கொண்டாடப்பட்டாலும், இப்படம் வெளியான காலத்தில் பரவலான வரவேற்பைப் பெறவில்லை.

சிவாஜியின் ஆசை!

‘பராசக்தி’, ‘திரும்பிப்பார்’, ‘அந்தநாள்’ என்று விதவிதமான திரைக்கதைகளில் பரிமளித்த சிவாஜி கணேசனுக்கு, ஏதேனுமொரு வரலாற்று நாயகன் வேடத்தில் நடித்துப் பெயர் வாங்க வேண்டுமென்ற ஆசை மனதின் ஆழத்தில் இருந்தது.

ஒருமுறை ‘கம்பளத்தார் கூத்து’ எனப்படும் கூத்து வகையொன்றை காண நேர்ந்தபோது, வீரபாண்டிய கட்டபொம்முவிடம் அவர் ஈர்ப்பு கொண்டிருக்கிறார்.

அதன் தொடர்ச்சியாக, சக்தி கிருஷ்ணசாமியிடம் கட்டபொம்மனின் வாழ்க்கை வரலாற்றை நாடகமாக எழுதித் தருமாறு கேட்டிருக்கிறார்.

அந்நாடகம் சிவாஜி நாடக மன்றம் சார்பில் பலமுறை மேடையேற்றப்பட்டு பெருவெற்றி கண்டது. நாடகம் நடத்தி வசூலான சுமார் 32 லட்ச ரூபாயைக் குழந்தைகள் கல்விக்காக அளித்தார் சிவாஜி.

இவ்வெற்றியே, இயக்குனர் பி.ஆர்.பந்துலுவுக்கு வீரபாண்டிய கட்டபொம்மன் வாழ்க்கையைத் திரைப்படமாகத் தயாரிப்பதற்கான உத்வேகத்தைத் தந்தது.

கண்ணதாசனின் பிடிவாதம்

’சிவகெங்கை சீமை’ கதையைத் தயாரிப்பதற்கு முன்பாக, ‘ஊமையன்கோட்டை’ என்ற பெயரில் எம்.ஜி.ஆரை நாயகனாகக் கொண்டு ஒரு திரைப்படத்தை உருவாக்கவிருந்தார் கவிஞர் கண்ணதாசன்.

கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட பிறகு, சுமார் 15 மாதங்கள் கழித்து கயத்தாறு, ஒட்டநத்தம் பகுதிகளில் ஊமைத்துரை சுற்றித் திரிந்ததைக் கதைக்களமாக அமைத்தார்.

ஆனால், எம்.ஜி.ஆரின் அரசியல் செயல்பாடுகள் தீவிரமாகவே, அத்திரைப்பட முயற்சி கைவிடப்பட்டது.

அந்த நேரத்தில், ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ தயாரிப்பு பற்றி தகவல்கள் வெளிவர, தான் பிறந்து வளர்ந்த செட்டிநாட்டைச் சேர்ந்த சிவகங்கை வரலாற்றைப் படமாக்கத் துணிந்தார் கண்ணதாசன்.

ஒரேமூச்சில் திரைக்கதை வசனம் எழுதி தானே தயாரிப்பிலும் இறங்கினார்.
வீரபாண்டிய கட்டபொம்மன் தயாராகி வந்த காலத்தில் திமுகவில் இருந்து விலகினார் சிவாஜி. அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காகவும், கண்ணதாசன் இப்படத்தைத் தயாரித்ததாகச் சொல்லப்படுகிறது.

சில ஆண்டுகள் கழித்து, ‘ஊமையன்கோட்டை’ கதையை தென்றல் இதழில் தொடராக வெளியிட்டார். அது நூலாகவும் வெளியாகி வாசகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.

கட்டபொம்முவின் கதை!

திருநெல்வேலி அருகேயிருந்த பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரரான கட்டபொம்மு என்ற வீரபாண்டிய கட்டபொம்மன், தன் சகோதரர் ஊமைத்துரை உதவியுடன் ஆட்சி நடத்தி வந்தார்.

தமிழ்நாட்டில் இருந்த பாளையங்களில் வரி வசூல் செய்யும் உரிமையை ஆற்காட்டு நவாப் கிழக்கிந்திய கம்பெனியிடம் ஒப்படைக்க, அதனை ஏற்க மறுத்தவர்களின் வரிசையில் இடம்பெற்றார் கட்டபொம்மன்.

பணம், படை, யோசனை என்று எல்லாவற்றையும் தாராளமாக வழங்கி, பாளையக்காரர்களுக்குள் இருந்த பழைய பகையைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டது கிழக்கிந்திய கம்பெனி.

அவ்வாறு எட்டயபுரம் பாளையக்காரர் எட்டப்பனின் உதவியோடு கட்டபொம்மனை அடிபணிய வைக்கும் முயற்சிகள் நடைபெற்றன.

இதனை எதிர்த்து நடந்த போரில் கட்டபொம்மன் தோற்றுப்போனார். கைது செய்யப்பட்டு, கயத்தாரில் உள்ள புளியமரத்தில் தூக்கிலிடப்பட்டார்.

அவரது தளபதி வெள்ளையத்தேவன், சுந்தரலிங்கம் உள்ளிட்ட பலர் மரணமடைந்தனர்.

கட்டபொம்மனின் சகோதரர் ஊமைத்துரை பாளையங்கோட்டை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.

இப்படத்தின் கதை கட்டபொம்மனின் சீர்மிகு ஆட்சிக் காலம் முதல் அவரது மரணம் வரை தொடர்கிறது.

இப்படத்தின் கதை வசனத்தை சக்தி கிருஷ்ணசாமி எழுதினார்.

அதே நேரத்தில், ம.பொ.சிவஞானம் தலைமையில் சக்தி கிருஷ்ணசாமி, பி.ஆர்.பந்துலு, சிவாஜி கணேசன், பி.ஏ.குமார், கே.சிங்கமுத்து, எஸ்.கிருஷ்ணசாமி ஆகியோர் இடம்பெற்ற திரை அமைப்பு ஆராய்ச்சிக் குழுவினால் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன.

மருதிருவர் கதை!

ராமநாதபுரத்தில் இருந்து தனியாகப் பிரிக்கப்பட்ட சிவகெங்கையை முத்துவடுகநாதர் ஆட்சி செய்தார்.

அவரது மறைவுக்குப்பின், ஆற்காடு நவாப் ஆக்கிரப்பை எதிர்த்து வேலு நாச்சியார் போர் புரிந்தார். அவரால் நியமிக்கப்பட்டவர்களே பெரிய மருது மற்றும் சின்ன மருது.

இவர்களது ஆட்சியை எதிர்க்கும் கவுரி வல்லப உடையணனை படமாத்தூர், மல்லாக்கோட்டை உள்ளிட்ட ஊரில் உள்ளவர்கள் ஏற்றுக்கொண்டனர்.

அரசுரிமை எங்களுக்கே வேண்டும் என்று கிழக்கிந்தியக் கம்பெனியின் வெல்ஷ் துரையை அவரது தரப்பு நாடியது.

மருது பாண்டியர்களுடனான இணக்கமான உறவை இழக்க விரும்பாத வெல்ஷ் மறுப்பு தெரிவிக்க, சிவகங்கையில் திட்டமிட்டுக் குழப்பத்தை உருவாக்குகின்றனர் உடையணனின் ஆட்கள்.

நாட்டு மக்களின் நிலைமை பாழ்பட்டுவிடக் கூடாது என்று விரும்பும் பெரிய மருது, அதற்கு இடையூறாக இருக்கும் எந்தவொன்றினாலும் ஆட்சி கவிழக்கூடாது என்று நினைக்கிறார்.

பாளையங்கோட்டை சிறையில் இருந்து உதவி கேட்டு ஆள் அனுப்பும் ஊமைத்துரையின் கோரிக்கையை ஏற்க மறுக்கிறார்.

அதையும் மீறி ஊமைத்துரைக்கு சின்ன மருது அடைக்கலம் தர, அவரை ஒப்படைக்க வேண்டுமென்று வெல்ஷ் பிடிவாதம் காட்ட, நம்பிவந்தவரை காட்டிக் கொடுப்பது சரியல்ல என்று பெரிய மருது எதிர்ப்பு தெரிவிக்க, வேறு வழியின்றி இரு தரப்புக்கும் போர் மூள்கிறது.

போரின் முடிவில் மருதிருவர்ம் தோற்க, வெள்ளையர் வெற்றி பெறுகின்றனர்.

இப்படத்தின் கதை வசனம் எழுதித் தயாரித்தவர் கண்ணதாசன்.

இதன் திரையமைப்பு சிவகெங்கைச் சரித்திரக் கும்மியும் அம்மானையும், திருநெல்வேலி மற்றும் ராமனாதபுரம் மானுவல், மேஜர் வெல்ஷின் நாட்குறிப்பு, மெட்ராஸ் ராணுவ வரலாறு, கால்டுவெல்லின் திருநெல்வேலி வரலாறு, மருதிருவர் ஆகிய நூல்களை ஆதாரமாகக் கொண்டது என்று அவர் டைட்டிலில் குறிப்பிடப்பட்டிருக்கிறார்.

வெற்றியும் தோல்வியும்!

ஒரே காலகட்டத்தில் வெளிவந்தாலும் ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ அமோக வெற்றியைச் சுவைக்க, ‘சிவகெங்கைச் சீமை’ பெருந்தோல்வியை எதிர்கொண்டது.

முன்னது வண்ணப்படமாக அமைந்ததும், பின்னது கறுப்புவெள்ளை திரைப்படமாக அமைந்ததும் கூட தோல்விக்குக் காரணம் என்று கூறுவோரும் உண்டு.

கேவாகலரில் படமாக்கப்பட்டு, பம்பாயில் ப்ராசஸிங் மேற்கொள்ளப்பட்டு ‘டெக்னிக்கலர்’ நுட்பத்தில் வெளியானது ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’. இவ்வாறு வெளியான முதல் திரைப்படமும் இதுதான்.

‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ திரைப்படம் வெளியாகிச் சில மாதங்கள் கழித்து ‘சிவகெங்கைச் சீமை’ வந்திருந்தால் மருதுபாண்டியர் பக்கமிருக்கும் நியாய தர்மங்கள் மக்களுக்குச் சரிவர புரிந்திருக்கும் என்று ஒருபேட்டியில் தெரிவித்தார் கண்ணதாசன்.

வீரபாண்டிய கட்டபொம்மனில் வணிகத் திரைப்படத்துக்கான அம்சங்கள் மிகுந்திருந்ததும், சிவகெங்கைச் சீமையில் அதன் அளவு மிகக்குறைவாக இருந்ததும் தோல்விக்கான காரணமாகச் சொல்லப்படுவதுண்டு. அதனாலேயே, சிவகெங்கைச் சீமையைச் சிலாகிப்போரும் உண்டு.

திரைக்கதையில் ஒற்றுமைகள்!

ட்டபொம்மன், ஊமைத்துரை, பெரிய மருது, சின்ன மருது நால்வரும் ஏற்கனவே சந்தித்திருந்தாலும், அக்காட்சிகள் எதுவும் இத்திரைப்படங்களில் இடம்பெறவில்லை.

சிவகெங்கைச்சீமையில் முன்கதை வாய்ஸ் ஓவரில் சொல்லப்பட்டிருக்கும். அதேபோல, ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ படத்தில் நாடகத்திற்கு முன்னர் கதாசிரியர் பேசுவதாகக் காட்டப்படும்.

முடிவும் அப்படியே. இரு திரைப்படங்களும் சுதந்திரப் போரில் இந்தியா வெற்றி பெற்றதைக் கூறி நிறைவடையும். இரண்டிலுமே கதை மாந்தர்கள் தூக்கிலிடப்படுவது காட்டப்படும்.

‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ திரைப்படத்தில் கட்டபொம்மனும் ஊமைத்துரையும் பிரதானம் என்றாலும், தளபதி வெள்ளையத்தேவன் பாத்திரத்துக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

இவ்வேடத்தில் ஜெமினி கணேசன் நடித்ததும் இதற்குக் காரணமாக இருக்கலாம்.

வெள்ளையம்மாளை இவர் காதலிப்பதும் டூயட் பாடுவதும் யதார்த்தத்துக்குப் புறம்பாக இருந்தாலும் ரசிகர்கள் கொண்டாடினர்.

வரலாற்று ஆய்வாளர்கள் பலர் வெள்ளையம்மாள் என்பது கற்பனை கதாபாத்திரம் என்று தெரிவித்திருக்கின்றனர்.

கதை உருவாக்கத்தில் பங்கேற்ற ம.பொ.சிவஞானம் கண்ணதாசனிடம் ஒருமுறை பேசியபோது, படத்தில் வெள்ளையத்தேவனால் ஊமைத்துரை பாத்திரம் பின்னுக்குத் தள்ளப்பட்டதாக வருத்தத்துடன் கூறியிருக்கிறார்.

இதேபோல ‘சிவகெங்கைச் சீமை’யில் முத்தழகு சேதுபதியாக எஸ்.எஸ்.ராஜேந்திரன் நடித்திருப்பார். இவரது ஜோடியாக குமாரி கமலா நடித்திருப்பார்.

(கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே.லக்‌ஷ்மன் உடனான மணவாழ்க்கை 1960இல் முறிவடைந்தாலும், இப்படத்தில் அவரது பெயர் கமலா லட்சுமணன் என்றே குறிப்பிடப்பட்டிருக்கும்)

இருவரது காதல் விளையாட்டுகள், மருது சகோதரர்களின் வாழ்க்கைக் கதையில் இடைச்செருகலாக வந்துபோகும்.

வீரபாண்டிய கட்டபொம்மனில் வெள்ளையத்தேவனாக முதலில் நடிக்கவிருந்தவர் எஸ்.எஸ்.ஆர்.தான். ‘சிவகெங்கைச் சீமை’ வாய்ப்பு கிடைத்ததால், அவர் அதனை ஏற்கவில்லை.

வீரபாண்டிய கட்டபொம்மனில் இருப்பதைப் போலவே, சிவகெங்கைச் சீமையிலும் சகோதரர்களின் குழந்தைகளை பெரியப்பாக்களும் பெரியம்மாக்களும் கொஞ்சி மகிழ்வதாகக் காட்டப்பட்டிருக்கும்.

ஊமைத்துரைக்கு அடைக்கலம் தந்து வீணாக வெள்ளையருடன் மோதலை வளர்க்க வேண்டாம் என்று பெரிய மருது கூறுவதாக சிவகெங்கைச் சீமையில் வடிக்கப்பட்டிருக்கும்.

அதேபோல, ‘வீரபாண்டியகட்டபொம்மன்’ திரைப்படத்தில் தானாதிபதி பிள்ளை கொள்ளையடித்ததால் ஜாக்சன் துரைக்குப் பதில் சொல்ல வேண்டியிருக்கிறதே என்று கட்டபொம்மன் தயங்குவதாகக் காட்டப்பட்டிருக்கும்.

இரண்டுக்குமான வித்தியாசம்!

வண்ணப்படம் என்பதையும் தாண்டி நகைச்சுவைக் காட்சிகள், காதல் காட்சிகள் வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்தில் நிறைய உண்டு.

போதாக்குறைக்குப் பகட்டான ஆடை அணிகலன்களும், ஓங்கியுயர்ந்த கோட்டை கொத்தளங்களும் காட்டப்படும்.

பாளையக்காரர் என்பதையும் தாண்டி, பேரரசரின் வாழ்வு நம் முன்னே வைக்கப்படும்.

மாறாக, நூற்றாண்டுகளுக்கு முந்தைய கிராம சபை தோற்றமே ‘சிவகெங்கைச் சீமை’யில் வெளிப்பட்டிருக்கும்.

வேட்டி, துண்டு அணிந்தே மருதுபாண்டியர்கள் வந்து போவர். பெரிய தூண்கள் கொண்ட மண்டபமே அரசவையாகக் காட்டப்படும். அவர்களது வீடும் கூட ராஜ போகம் நிரம்பி வழியாமலிருக்கும்.

இப்படத்தில் உடை வடிவமைப்பைக் கவனித்தவர் ஆர்.சி.லிங்கம். ஆடைஅணிமணி என்ற பெயரில் இவருக்கு கிரெடிட் கொடுக்கப்பட்டிருக்கும்.

வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் அரண்மனை வெளிப்புறக் காட்சிகள் ராஜஸ்தானில் படமாக்கப்பட்டன.

அதே நேரத்தில், உள்ளூரிலேயே தயாரானது சிவகெங்கைச் சீமை. திரைக்கதையைப் பொறுத்தவரை, எஸ்.எஸ்.ஆர். பேசும் வசனங்கள், இறுதிக்கட்ட போர்க்காட்சிகளுக்கு நடுவே வரும் உணர்வுமயமான காட்சிகள் தவிர பெரும்பாலான இடங்களில் யதார்த்தத்தை இழைத்திருப்பார் கண்ணதாசன்.

ஒரு காட்சியின் முடிவில் வரும் வசனம், அடுத்த காட்சியின் தொடக்கமாக அமையும். இது ஒரு கண்ணி போல காட்சிகளைக் கோர்க்கும் வகையில் இருக்கும்.

மருதுபாண்டியருடன் பேசும் வெல்ஷ் துரை ஆங்கிலத்தில் பேச, பக்கத்தில் இருக்கும் துபாஷ் தான் அதனைத் தமிழ்ப்படுத்திச் சொல்வார். படம் முழுக்க ஓரிடத்தில் கூட இவ்வழக்கம் மீறப்பட்டிருக்காது.

வீரபாண்டிய கட்டபொம்மனில் ஜாக்சனாக இருந்தாலும், பானர்மேனாக இருந்தாலும், தமிழை அள்ளிப் பருகியது போல உரையாடியிருப்பர். ரசிக்கத்தக்க முரணாகவும் இது அமைந்து போனது.

வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் சுந்தரலிங்கமாக வரும் கருணாநிதி பானர்மேனுக்கு உணவு பரிமாறுவது, அவசரப்பட்டு ஒற்றனை அடித்துவிட்டு மாறுவேடத்தில் கட்டபொம்மனே வந்து அரசவையில் அடிவாங்குவது, தனது காளையை அடக்கிய வெள்ளையத்தேவனை மாறுவேடமிட்டு வந்து

வெள்ளையம்மாள் சந்திப்பது போன்று பல்வேறு காட்சிகள் வணிக வெற்றியை மையப்படுத்தி வடிவமைக்கப்பட்டிருக்கும்.

மிக முக்கியமாக, ஜாக்சன் துரையைப் பார்த்து ‘யாரைக் கேட்கிறாய் வரி, வட்டி, கிஸ்தி’ என்று கட்டபொம்மன் உறுமுவது போன்ற விஷயங்கள், சிவகெங்கைச் சீமையில் பெரிய மருதுவிடம் திணிக்கப்பட்டிருக்காது.

வீரப்பாவும் ராஜேந்திரனும் கோயில் குளமருகே சண்டையிடும் காட்சியில், அவர்கள் குளத்தினுள் மூழ்கியபிறகும் மோதிக்கொள்வது படமாக்கப்பட்டிருக்கும்.

கண்ணாடி தொட்டியினுள் இருவரையும் வைத்துப் படம்பிடிக்கப்பட்டிருந்தாலும், அக்காட்சி அந்தகாலத்தில் நிச்சயம் புதுமையானதுதான்.

இறுதியாக வரும் போர்க்காட்சிகளில் ‘சிவகெங்கைச் சீமை’ குழு தீவிரமாக மெனக்கெட்டிருக்கும்.

வண்ணப்படம் என்ற சிறப்போடு, மிக எளிதாக வரவேற்பைப் பெற்றன ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ படத்தில் இடம்பெற்ற போர்க்காட்சிகள்.

முந்திக்கொண்ட பாடல்கள்:

‘சிவகெங்கைச் சீமை’யில் ‘சாந்துப்பொட்டு தளதளக்க’, ‘வீரர்கள் வாழும் திராவிட நாட்டை வென்றவர் கிடையாது’, கொட்டுமேளம் கொட்டுங்கடி’, ‘கன்னங்கருத்த கிளி கட்டழகன் தொட்ட கிளி’, ‘கனவு கண்டேன் நான் கனவு கண்டேன்’, ‘முத்துப்புகழ் படைத்து’ உள்ளிட்ட பாடல்கள் ரசிகர்களை எளிதில் கவர்ந்தன.

ஆனாலும், விஸ்வநாதன் ராமமூர்த்தியின் முயற்சி ரசிகர்களை வளைத்துப் போடவில்லை.

இப்படத்தில் ‘மேகம் கவிந்ததம்மா’ என்று தொடங்கும் ‘இமையும் விழியும் எதிரானால்’ பாடலின் இடையிடையே, எம்.என்.ராஜத்திடம் வீரப்பா வாக்குவாதம் செய்வது போல அமைக்கப்பட்டிருக்கும்.

வசனத்தையும் பாடல்களையும் ஒருசேர கண்ணதாசன் எழுதியதன் பலன் என்னவென்பது இவ்விடத்தில் நன்கு தெரிய வரும்.

வீரபாண்டிய கட்டபொம்மனில் ‘போகாதே போகாதே என் கணவா’ பாடலைப் போன்றே, வேறு உணர்வு தொனிக்கும் வகையில் இப்படத்தில் ‘கனவு கண்டேன்’ பாடல் சோகமயமாக இசைக்கப்பட்டிருக்கும்.

‘அஞ்சாத சிங்கம் என் காளை’, ‘இன்பம் பொங்கும் வெண்ணிலா’, ‘டக்கு டக்குன்னு அடிக்கடி துடிக்கும்’, ‘ஆத்துக்குள்ளே ஊத்து வெட்டி’ உள்ளிட்ட பாடல்கள் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுத் தந்தன.

கலை, மேக்கப், ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, ஒலிப்பதிவு என்று பல்வேறு விஷயங்கள் சிறப்பாகக் கையாளப்பட்டிருந்தன.

ஆனாலும், காட்சிகளில் கேமிரா நகர்வுகள் குறைவாகவே இடம் பெற்றிருந்தன.
மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளத்தைக் கையாண்டதும் இதற்குக் காரணமாக இருக்கலாம்.

விமர்சனக் கணைகள்!

தெலுங்கு பேசும் குடும்பத்தில் பிறந்த கட்டபொம்மனுக்குச் சரியாக தமிழ் பேச வராது.

ஒரு பாளையக்காரரை ராஜராஜன் போலச் சித்தரித்து விட்டார்கள், கற்பனையான அரச கதை பார்த்த அனுபவமே கிடைக்கிறது, உண்மையான வரலாறு திரிக்கப்பட்டுள்ளது என்று பல்வேறு விமர்சனங்கள் ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ படத்தின் மீது முன்வைக்கப்பட்டன.

இப்படத்தில் நடித்ததற்காக, எகிப்து நாட்டின் கெய்ரோ நகரில் நடந்த விழாவில் கலந்துகொண்ட சிவாஜி கணேசன் அந்நாட்டு அதிபர் கமால் நாசரிடம் இருந்து சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றார்.

சென்னை திரும்பியபோது, நடிகர் சங்கத் தலைவராக இருந்த எம்.ஜி.ஆர் சார்பில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

படம் வெளியாகி 11 ஆண்டுகள் கழித்து, 1970-ல் கயத்தாறில் வீரபாண்டிய கட்டபொம்மனுக்குச் சிலை அமைத்தார் சிவாஜி கணேசன்.

பாஞ்சாலங்குறிச்சியில் அரசு சார்பில் அமைக்கப்பட்ட கோட்டையில் கட்டபொம்மனின் உண்மையான படம் வைக்கப்பட்டிருந்தாலும், மக்களின் மனதில் சிவாஜியின் உருவமே வந்து போகும்.

நடிப்பின் மீதான அவரது காதலுக்குக் கிடைத்த வெற்றி அது.
குறைவான அளவில் மிகையுணர்ச்சி வெளிப்படுத்தப் பட்டிருந்தாலும், சிறு புனைவுடன் கூடிய வரலாற்றுக் கதையைத் திரைப்படமாக்கும் வித்தையைச் சொல்லாமல் சொல்லித் தருகிறது ‘சிவகெங்கைச் சீமை’.

இது போன்ற கதைகளைப் படமாக்கத் துடிப்பவர்களுக்கான ஆவணமாகவும் விளங்குகிறது.

காலம் கடந்த வெற்றியால் சம்பந்தப்பட்டவர்களுக்குப் பயனில்லை என்றபோதும், அது தரும் புகழுக்கு ஈடிணையே இல்லை!

படத்தின் பெயர்: சிவகெங்கைச் சீமை
கதை, வசனம், பாடல்கள்: கவிஞர் கண்ணதாசன்
இயக்கம்: கே.சங்கர்
இசையமைப்பு: விஸ்வநாதன் ராமமூர்த்தி
கலை: ஏ.பாலு
உடை: ஆர்.சி.லிங்கம்
ஒப்பனை: என்.பி.சிவராமன் பீதாம்பரம், சுந்தரம்
ஒளிப்பதிவு: தம்பு
ஒலிப்பதிவு: கே.ராமச்சந்திரன் பி.ரங்காராவ்
பாடல்கள் ஒலிப்பதிவு: இ.ஐ.ஜீவா, பி.வி.கோடீஸ்வரராவ், சீனிவாச ராகவன், பி.ரங்காராவ்
படத்தொகுப்பு: கே.சங்கர், கே.நாராயணன்
ப்ராசஸிங்: விஜயா லேபரட்டரி எஸ்.ஆர்.ரங்கநாதன்
தயாரிப்பு: கண்ணதாசன் புரொடக்‌ஷன்ஸ், கே.எஸ்.ரங்கநாதன் ஸ்டூடியோ: ஜெமினி, நரசு
நடிப்பு: எஸ்.எஸ்.ராஜேந்திரன், பி.எஸ்.வீரப்பா, டி.கே.பகவதி, எம்.கே.முஸ்தபா, டி.வி.நாராயணசாமி, எஸ்.வரலட்சுமி, எம்.என்.ராஜம், கமலா லட்சுமணன் மற்றும் பலர்.
படத்தின் பெயர்: வீரபாண்டிய கட்டபொம்மன்
கதை, வசனம்: சக்தி கிருஷ்ணசாமி
பாடல்கள்: கு.மா.பாலசுப்பிரமணியம்
தயாரிப்பு, இயக்கம்: பி.ஆர்.பந்துலு
இசையமைப்பு: ஜி.ராமநாதன்
கலை: கங்கா
உடை: எம்.ஜி.நாயுடு
ஒப்பனை: ஹரிபாபு, டி.தனகோடி, ஆர்.ரங்கசாமி, எம்.கே.சீனிவாசன், பி.கிருஷ்ணராஜ்
ஒளிப்பதிவு: டபிள்யூ.ஆர்.சுப்பாராவ், கர்ணன்
ஒலிப்பதிவு இயக்குனர்: பி.வி.கோடீஸ்வரராவ்
பாடல்கள் ஒலிப்பதிவு: ஜி.மோகன்
படத்தொகுப்பு: ஆர்.தேவராஜன்
ப்ராசஸிங்: விஜயா லேபரட்டரி எஸ்.ஆர்.ரங்கநாதன்
ஸ்டூடியோ: பரணி

– உதய் பாடகலிங்கம்

You might also like