தமிழக அரசின் கலைஞர் பொற்கிழி விருது, சங்கீத நாடக அகாடமி விருது உள்ளிட்ட விருதுகளை பெற்றுள்ள நாடக இயக்குநர் ப்ரஸன்னா ராமஸ்வாமி இயக்கி, சென்னை ஆர்ட் தியேட்டருடன் இணைந்து தயாரித்துள்ள அடுத்த தமிழ் நாடகம் ‘68,85,45 12 லட்சம்’.
இந்த நாடகம் பற்றி பேசிய அவர், “நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய இயற்கையின் கூறுகள் வழிபாட்டுக்குரியவை என்று நம் சமூகம் வரையறுத்துள்ளது.
ஆனால், இவற்றை ஆதிக்க சக்திகள் சமத்துவத்துக்கு எதிரான, ஒடுக்குதலுக்கான கருவிகளாக மாற்றிக் கொண்டிருக்கின்றன என்பதை, சமகால சரித்திர நிகழ்வுகளின் வழியாக நோக்கும் நாடகம் ‘68,85,45 12 லட்சம்’.
இயற்கைக் கூறுகளை வைத்து, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுடன் தொடர்புடையவை இந்த எண்கள். உதாரணமாக, ‘68’ என்பது, கீழ்வெண்மணி படுகொலை நடந்த 1968-ம் ஆண்டு.
அனைத்து உயிரினங்களுக்கும் பொதுவான இயற்கையின் கூறுகள் எப்படி ஒருசில சமூகங்களுக்கு எதிராக பயன்படுத்தப்படுகின்றன என்பதை பேசுகிறது இந்த நாடகம்” எனக் கூறினார்.
ப்ரஸன்னா ராமஸ்வாமி, ரத்தன் சந்திரசேகர், பத்திரிகையாளர் கவிதா முரளிதரன், எழுத்தாளர் கவுதம சன்னா, திவாகர் ஆகியோர் நாடகத்துக்கு எழுத்துப் பங்களிப்பை ஆற்றியுள்ளனர்.
சுகுமாரன், ஸ்வரூபா ராணியின் கவிதைகள் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஒன்றரை மணி நேரம் நடைபெறும் இந்த நாடகத்தில் பரதநாட்டியக் கலைஞரும், நடிகருமான அனிதா ரத்னம்,
இயக்குநர் நிகிலா கேசவன், நடிகர்கள் ரேவதி குமார், பிரசன்னா ராம்குமார் ஆகியோருடன், கூத்துப்பட்டறை நடிகர்கள், வேறு சில இளம் நடிகர்கள் என 18 நடிகர்கள் நடித்துள்ளனர்.
ஆனந்த் குமார் பிரத்யேகமாக இசையமைத்துள்ளார். வசனத்துக்கு இணையான தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த நாடகத்தின் இசைக் குறிப்புகள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார் ப்ரஸன்னா ராமஸ்வாமி.
‘68,85,45 12 லட்சம்’ நாடகம் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மேடை அரங்கத்தில் ஜன.7-ம் தேதி மாலை 3 மணிக்கு ஒரு காட்சியும், ஜன.8-ம் தேதி மாலை 3 மணி மற்றும் இரவு 7 மணி என இரண்டு காட்சிகளுமாக அரங்கேற்றப்பட உள்ளது. நாடகத்தை காண்பதற்கான அனுமதிச் சீட்டுகளை ‘புக் மைஷோ’ (https://in.bookmyshow.com/plays/68-85-45-12-latcham/ET00347640) இணையதளத்தில் பெற்றுக்கொள்ளலாம்.