உச்சநீதிமன்ற வளாகத்தில் புரட்சியாளர் அம்பேத்கரின் உருவச்சிலையை நிறுவ வேண்டும் என உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டுக்கு விசிக பொதுச் செயலாளரும் விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினருமான துரை ரவிக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராகவும், இந்திய அரசியலமைப்பின் தலைமை சிற்பியாகவும் இருந்தார். அவர் இந்தியாவில் உள்ள சட்ட நிறுவனங்களில் ஒரு முக்கிய அங்கமாக இருந்துள்ளார் என்பது அனைவரும் அறிந்த உண்மையாகும்.
துரதிர்ஷ்டவசமாக, இந்திய உச்சநீதிமன்றம் அவரைப் போதுமான அளவில் அங்கீகரிக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார். சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் சிலை உச்சநீதிமன்றத்தில் காணப்படாதது வருத்தமளிக்கிறது.
எனவே டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் சிலையை உச்சநீதிமன்ற வளாகத்துக்குள் அமைக்க வேண்டும். அம்பேத்கரின் 132-வது பிறந்தநாளான ஏப்ரல் 14, 2023-க்குள் அதைச் செய்தால் சிறப்பாக இருக்கும்.
உச்சநீதிமன்ற வளாகத்தில் டாக்டர் அம்பேத்கரின் சிலை நிறுவப்பட வேண்டும் என்று ஏற்கனவே ’டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் சமூக நீதிக்கான வழக்கறிஞர்கள் குழுவினர் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது. அவர்களது கோரிக்கைக்கு எனது ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அண்மையில் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் சமூக நீதிக்கான வழக்கறிஞர்கள் குழுவைச் சேர்ந்த உறுப்பினர்கள் அரசியலமைப்புச் சட்ட வரைவுக்குழுவின் தலைவரான டாடர் பி.ஆர்.அம்பேத்கரின் நினைவை உச்சநீதிமன்றம் உரிய வகையில் சிறப்பிக்க வேண்டும் என தொடர் முயற்சிகளை முன்னெடுத்துள்ளனர்.
2015-ம் ஆண்டு உச்சநீதிமன்ற வளாகத்தில் டாக்டர் அம்பேத்கரின் உருவப்படம் வைக்கப்படுவதற்கு அவர்களின் முயற்சிகளே காரணமாக அமைந்தது.
எம்.சி.செடல்வாட் மற்றும் ஆர்.கே.ஜெயின் போன்ற பல வழக்கறிஞர்களின் உருவப்படங்கள் ஏற்கனவே இடம்பெற்றுள்ள நிலையில் உச்சநீதிமன்றம் அமைவதற்குக் காரணமான அரசியலமைப்புச் சட்டத்தின் தலைமைச் சிற்பியான டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் உருவப்படம் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்புதான் அங்கு இடம்பெற்றது என்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இனியும் தாமதிக்காமல் உச்சநீதிமன்ற வளாகத்தில் டாக்டர் அம்பேத்கரின் சிலையை விரைவில் நிறுவுவதுதான் சரியானது.
சமூக நீதியின் சின்னமாகத் திகழும் புரட்சியாளர் அம்பேத்கரின் சிலை நீதி என்னும் கருத்தாக்கத்துக்கும் நடைமுறைக்கும் பிரதானமான அமைப்பாகத் திகழும் உச்சநீதிமன்ற வளாகத்தில் நிறுவப்படுவது விளிம்புநிலை சமூகத்தினருக்கு மிகப்பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தும்” என வலியுறுத்தியுள்ளார்.