– வீணை காயத்ரி
எழுத்தாளர்கள், படைப்பாளர்களின் பள்ளிப் பிராயம் குறித்தும், அந்தப் பருவம் குறித்த பசுமையான நினைவுகளை அவர்கள் பகிர்ந்து கொள்வதையும் இந்தத் தொடரில் பார்த்து வருகிறோம்.
அந்த வரிசையில் வீணை காயத்ரியின் பள்ளிப் பிராயம் குறித்துப் பார்ப்போம்.
“பள்ளிப் பருவத்து ஆசிரியர்களைவிட எனக்கு இசையைக் கற்பித்த ஆசிரியர்களைப் பற்றிப் பேச விரும்புகிறேன். இசைத்துறையில் எனது முதல் ஆசிரியர்கள் எனது அப்பா, அம்மாதான்.
தெலுங்குத் திரையுலகில் இசையமைப்பாளராக இருந்த ஜி.அஸ்வத்தாமா எனது தந்தை. வீணை இசைக் கலைஞர் கமலா அஸ்வத்தாமா எனது அம்மா. என் பெற்றோர் இசைத்துறையில் இருந்ததால், சிறுவயதிலிருந்தே எனக்கு இசைமீது நாட்டம் வந்தது.
அதிகாலை 3.30 மணிக்கெல்லாம் அப்பா என்னை எழுப்பிவிடுவார். அப்போது எழுந்து வீணை வாசிக்கச் சொல்வார். அம்மாவும் அந்த நேரத்தில் எழுந்து, சமையல் செய்ய ஆரம்பித்துவிடுவார்.
அப்பா இசையமைப்பாளர் என்பதால், பல பாடல்களை ராகங்களுடன் பாடிக் காட்டுவார். அதைப்போல், வீணையில் வாசித்துக் காட்டச் சொல்லுவார்.
அப்போது எனக்கு நான்கு வயது இருக்கும். சின்னப் பொண்ணு நான். வீணை ரொம்ப பெரிசா இருக்கும். என் விரல்கள் வீணைக் கம்பியிலகூட எட்டாது. போகப் போக அதிகாலை 4 மணியிலிருந்து காலை 8 மணி வரையிலும், மதியம் 2 மணி நேரம் வரை சாதகம் செய்யத் தொடங்கினேன்.
அப்பா பாடுவதற்கு ஏற்றாற்போல் வீணை வாசிக்க வேண்டும். எங்கேனும் நான் தவறு செய்தால், “இந்த இடத்தில் இப்படி வரக்கூடாது. தப்பா வாசிக்கறம்மா” என்று சமையலறையில் இருந்து அம்மாவின் குரல் என்னைத் திருத்தும்.
அசூர சாதகத்தின் பலனாக 8 வயதிலிருந்து கச்சேரி செய்ய ஆரம்பித்தேன். எனது முதல் மேடைக் கச்சேரி, சென்னை திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி சுவாமி சபாவில் 1968-ஆம் ஆண்டு நடைபெற்றது.
அப்போது எனக்கு வயசு 9. அதன் பிறகு, கச்சேரி… கச்சேரி… என இசையே என் உலகமாய் இருந்தது. 13 வயதிலேயே அகில இந்திய வானொலியின் கௌரவம் கிடைத்தது.
எனது தந்தையின் மரணத்திற்குப் பிறகு, எனக்கு திருமணம் நடந்தது. அதன்பின் இசைத் துறையிலிருந்து ஒதுங்கி இருந்தேன். எனக்குக் குழந்தை பிறந்து அது பள்ளிக்குச் செல்லத் தொடங்கிய பிறகு, மீண்டும் வீணையை மீட்டினால் என்ன என்று எனக்குத் தோன்றியது.
நான் கச்சேரியில் வீணை வாசிக்கும்போது, என்னோடு மிருதங்கம் வாசித்த நண்பர் திருச்சூர் நரேந்திரனிடம் யோசனை கேட்டேன். ‘சங்கீத கலாநிதி’ டி.எம்.தியாகராஜனிடம் மாணவியாக போய் சேர்ந்து கொள்ளுங்கள். உங்களை மீண்டும் புதுப்பித்துக் கொள்ளுங்கள். அவர் உங்களுக்கு வழிகாட்டியாக இருப்பார்” என்றார்.
நானும் அவரது சொல்படி, டி.எம்.டி. அவர்களைச் சந்தித்துப் பேசினேன். சற்றுநேரம் என்னை உற்றுப்பார்த்துவிட்டு, “சரி… நான் சொல்றபடி செய்.. மீண்டும் வர்ணத்திலிருந்து கற்றுக்கொள்” என்றார். அதாவது, இசையில் அடிப்படை பாடத்திற்கு அடுத்த நிலை, வர்ணம்.
இவை எல்லாம் எனக்கு முன்பே தெரிந்திருந்தாலும் மீண்டும் வர்ணத்திலிருந்து என்னை கற்றுக்கொள்ளச் சொன்னார். ஆசிரியர் சொல்லுக்கு மறுப்பேது. வர்ணத்திலிருந்து மீண்டும் வீணையை மீட்ட ஆரம்பித்தேன். தினமும் அவர் வீட்டில்தான் போய் பாடம் கற்றுக் கொள்வேன். அவர் பாடம் கற்றுக்கொடுக்கிறார் என்றால், அவருடைய வீட்டில் உள்ளவர்கள் கூட, அவரைக் கூப்பிட பயப்படுவார்கள்.
இசை வகுப்பு ஆரம்பித்துவிட்டதென்றால், உலகத்தையே மறந்து விடுவார்.
யாருடைய தொந்தரவையும் சகித்துக் கொள்ளமாட்டார். இசைப் பாடத்தில் அவ்வளவு உறுதியாக இருப்பார். அவர்கள் வீட்டில் உள்ளவர்கள் கூட அவரை தொந்தரவு செய்ய பயப்படுவார்கள்.
அப்படி ஒருநாள், பாடம் நடந்து கொண்டிருக்கும்போது, அவரது மகன் எங்களது வகுப்பை இடைமறித்து, “என்னுடைய மகள் வந்திருக்கிறாள்” என்று பயந்துகொண்டே சொன்னார்.
இதைக் கேட்டதும் “நாம இன்னிக்கு தொலைஞ்சோம்” என்று என்னிடம் பயம் தொற்றிக்கொண்டது. குரு எங்கே நம்மைத் திட்டிவிடுவாரோ என்று. ஆனால், என் மகளுக்கு சிறு விபத்து ஏற்பட்டதால், அவள் நேரே எனது குருவின் வீட்டிற்கே வந்துவிட்டாள். நிலைமை அறிந்ததும், “முதலில் உன் மகளைப் போய் கவனிம்மா. அமைதியான மனதில்தான் இசை தவழும். இன்று இந்த வகுப்பு போதும்” என்றார்.
சாமா வர்ணம் என்ற ஒரு வர்ணம் இருக்கிறது. அதைக் கற்றுக்கொள்வது சற்று சிரமம்தான். அதை ஒரே நாளில் கற்றுக் கொண்டேன். அவரிடம் மாணவியாக சேர்ந்த பிறகு, இசை உலகின் பல பரிணாமங்களைக் காட்டினார்.
அவரைப் பார்த்தாலே போதும் சங்கீதம் தானாக வந்துவிடும். தினமும் ஒரு மணி நேரம்தான் பாடம் சொல்லிக் கொடுப்பார். அந்த ஒரு மணி நேரமும் என் வாழ்வின் பொன்னான நேரங்கள் என்று சொல்வேன். புதுப்புது விஷயங்களை கற்றுக்கொடுத்துக் கொண்டே இருப்பார்.
கர்நாடக இசை மட்டுமின்றி, சினிமாத் துறையிலும் என்னை ஊக்குவித்தார் எனது ஆசிரியர். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட நான்கு மொழிப்படங்களில் வீணை வாசித்திருக்கிறேன்.
இளையராஜா இசையமைப்பில் ‘அன்னக்கிளி’, ‘பத்ரகாளி’ (கண்ணன் ஒரு கைக்குழந்தை), ‘உறவாடும் நெஞ்சம்’, ‘தீபம்’ உள்ளிட்ட பல படங்களில் வீணை வாசித்திருக்கிறேன்.
இதே இசைக் கல்லூரியில் (தமிழ்நாடு அரசு இசை, நுண்கலைப் பல்கலைக் கழகம்) உதவிப் பேராசிரியராக பணியாற்றியவர் எனது குரு டி.எம்.டி. அந்த இசை ஜாம்பவான், இசை உலக சக்கரவர்த்திகளில் ஒருவரான செம்மங்குடி சீனிவாச ஐயரின் பிரதான, பிடித்தமான சிஷ்யர். அனாயசமாகப் பாடுவார். இசையில் எப்போதும் புதுமைகளைச் செய்துகொண்டே இருப்பார். இப்போது எனது இசையுலக ஆசான் உயிரோடு இல்லை.
ஆனால், அவர் இல்லாமல் நான் இன்று இந்த நிலையில் இல்லை என்றுதான் சொல்வேன். இப்போது நான், அரசு இசைப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக அமர்ந்திருக்கிறேன் என்றால், அதற்கு அவரும் ஒரு காரணம்.
பேபி காயத்ரியாக இருந்தபோது 4 ஆயிரம் கச்சேரிகள் செய்திருப்பேன்.
இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இசைக்குத் திரும்பியபோது, 11 ஆயிரம் கச்சேரிகள் செய்திருப்பேன். மிகப்பெரிய இசை ஜாம்பவானான என்னுடைய ஆசிரியருடன் இணைந்து ஒரே மேடையில் கச்சேரி செய்ய வேண்டும் என்பது எனக்கு தீராத ஆசை இருந்தது.
அவர் பாடகர் என்பதால், பாட்டுக்கு வயலின்தான் துணையாக வரும். வீணை வராது. அதனால், அந்த வாய்ப்பு எனக்கு கிடைக்காமலேயே போய்விட்டது.
– தொகுப்பு: தான்யா