காவல்துறையின் கஸ்டடியில் இப்படியும் ஒரு அனுபவம்!

– ஆர்.நல்லகண்ணுவுக்கு நிகழ்ந்த விசித்திரம்!

மூத்த கம்யூனிஸ்ட் தோழரான ஆர்.நல்லகண்ணுவைத் தோழர்கள் இன்றும் அழைப்பது ‘ஆர்.கே.’ என்று தான்.

எளிய வாழ்க்கை, அகந்தையில்லாத பேச்சு, மனதுக்குப் பிடித்த செயல்பாடு என்றிருக்கும் தோழர் நல்லகண்ணு அவர்கள் – அரசியல்வாதிகளுக்கு முன் மாதிரியாக வாழும் உதாரணம்.

அவருக்கு அன்பான பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!

இனி அவருடைய அரசியல் வாழ்வின் ஒரு பகுதி அவருடைய சொற்களில்.
#
“சுதந்திரம் கிடைத்தபோது நாங்கள் எதிர்பார்த்தது வேறு, பிறகு நடந்தது வேறு.
அப்போது மிராசுதார்கள், பழைய ஜமீன்தார்கள், வசதியானவர்கள், பெரும் தொழிலதிபர்களுக்கு ஆதரவாகத் தான் இருந்தது காங்கிரஸ்.

இதை எதிர்த்து 1948-ல் நடந்த கல்கத்தா மாநாட்டில் குரல் கொடுத்தோம். இதையொட்டியும் தெலுங்கானாவில் ஆயுதம் தாங்கிய போராட்டம் நடந்ததை ஒட்டியும் கம்யூனிஸ்ட் கட்சிக்குத் தடை விதிக்கப்பட்டது.

எங்கும் பகிரங்கமாகக் கூட்டம் போட முடியாது. செயல்பட முடியாது. கட்சி தடை செய்யப்பட்டதும், நாங்கள் தலை மறைவாகி விட்டோம்.

அங்கங்கே விவசாயத் தொழிலாளர்களின் வீடுகளில் தங்கியிருப்போம். வீட்டுக்கு வெளியே காவலுக்குத் தோழர்கள் இருப்பார்கள். இரவு நேரங்களில் மட்டும் தான் வெளியே போவோம். போலீஸ் ஒருபுறம் எங்களைத் தேடிக் கொண்டு அலையும்.
பாலதண்டாயுதத்தை ஏர்வாடி அருகில் கொண்டு போய் வைத்திருந்தோம். அவர் ரொம்பவும் சிவப்பாக இருப்பார். உடனே மலையாளப் பெண் ஒருவரைத் தோழர்கள் கூட்டிக் கொண்டு வந்து வைத்திருக்கிறார்கள் என்றொரு பேச்சுக் கிளம்பிவிட்டது.

உடனே யோசித்து இரவு நேரத்தில் கூட்டம் போட்டோம். எண்ணெய்ச் சட்டி விளக்கு வெளிச்சத்தில் அதைத் தெளிவுபடுத்தி விளக்கம் கொடுத்தோம்.
ஒரு வருஷத்திற்குப் பிறகு ஒரு நாள் இரவு தலித் சமூகத்தைச் சேர்ந்த நண்பரின் வீட்டில் தங்கியிருந்தேன்.

கதவு தட்டப்பட்டது. கதவைத் திறந்ததும் போலீஸ் கைது பண்ணிவிட்டார்கள்.
கைது பண்ணும்போது நான் தங்கியிருந்த அறைக்குள்ளேயே ஆட்டு உரலுக்குள் இருந்த வெடிகுண்டுகளை எடுத்தார்கள்.

என்னைக் கைது செய்ததும் உடனே என் கைகளைப் பின்னால் கட்டிவிட்டார்கள்.
வெடிகுண்டுகளை எடுத்ததும் என்னைத் தாக்க ஆரம்பித்துவிட்டார்கள். டோனாவூரிலிருந்து களக்காடு போகிற வழியில் உள்ள சாலையில் என்னைக் கொண்டுபோய்க் கீழே கிடத்தினார்கள்.

“மேலே.. மலையைப் பார்றா.. அங்கே தான் நேத்து உங்க ஆட்கள் ரெண்டு பேரை மலையிலிருந்து உருட்டி விட்டோம்” என்று சொன்னபடியே மிதித்தார்கள் போலீசார்.

கம்யூனிஸ்ட் கட்சித்தலைவர்கள் மறைந்திருக்கிற இடத்தைச் சொல்லச் சொல்லிச் சித்திரவதை செய்தார்கள்.

அப்போது நான் முகத்திலிருந்த மருவை மறைப்பதற்காகச் சவரம் செய்வதில்லை, ஒரு போலீஸ் அதிகாரி எரிகிற சிகரெட்டாலேயே கீழே கிடத்தி வைக்கப்பட்டிருந்த என் முகத்திலிருந்த மீசையைச் சிகரெட்டால் சுட்டுப் பொசுக்கினார்.
பொறுக்க முடியாத அளவுக்கு அதிகமான வலி.

இருந்தும் நான் எதுவும் பேசவில்லை.

அப்போது குறுக்கெழுத்துப் போட்டியில் வருவதைப் போல, லேசில் புரிபடாத வகையில் எங்களுக்கு மட்டும் புரிகிற மாதிரி எழுதி வைத்திருப்போம்.
அம்மாதிரி எழுதப்பட்டிருந்த ஆவணங்களை எங்களிடமிருந்து கைப்பற்றியும் போலீசாரால் எதுவும் அறிந்து கொள்ள முடியவில்லை.

ஒரு நாள் முழுக்கச் சித்திரவதைகள் தொடர்ந்தன. பிறகு தான் என்னை நீதிமன்றத்திற்கு அழைத்துக் கொண்டு சென்றார்கள்.வெடிகுண்டுகள் வைத்திருந்ததாக, சதி செய்ததாக என் மீது பல வழக்குகள் போடப்பட்டன “

– மணா-வின் தொகுப்பில் வெளியான “ஆளுமைகள் சந்திப்புகள் உரையாடல்கள்” நேர்காணல் தொகுப்பு நூலில் – ஆர்.நல்லகண்ணுவுடன் எடுக்கப்பட்ட விரிவான நேர்காணலின் ஒரு பகுதி.

You might also like