சிவாஜியைக் கடந்து தான் எந்த நடிகனும் வரணும்!

– இயக்குநர் பாரதிராஜா

தமிழ் சினிமாவின் பிதாமகனான சிவாஜி கணேசன் குறித்து மருது மோகன் என்பவர் ‘சிவாஜி கணேசன்’ என்ற நூலை எழுதியுள்ளார். இந்த நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் சிவாஜிக்கு நெருக்கமானவர்கள் கலந்து கொண்ட நிலையில், இயக்குநர்கள் பாரதி ராஜா, பாக்யராஜ் முன்னிலையில், இசை அமைப்பாளர் இளையராஜா ‘சிவாஜி கணேசன்’ புத்தகத்தை வெளியிட, சிவாஜி கணேசனின் மகன்களான ராம்குமார், பிரபு பெற்றுக் கொண்டனர். 

நிகழ்ச்சியில் பேசிய பாரதிராஜா, “என் இனிய தமிழ் மக்களே… இந்த உச்சரிப்பைக் கூட சொல்லிக் கொடுத்தவர் என்னுடைய தலைவர் சிவாஜி.

நடிகர் திலகம் இல்லை என்றால், ஒரு வசனத்தை எப்படி எல்லாம் ஏற்றிப் பேச வேண்டும், இறக்கிப் பேச வேண்டும் என்பதை அவர் தான் தன் உச்சரிப்பு மூலம் கற்றுக் கொடுத்தார். பாரதிராஜா பேசுகிறான் என்று சொன்னால். அது சிவாஜி போட்ட பிச்சை.

அவரோடு இருந்த அனுபவங்களை வார்த்தைகளால் சொல்ல முடியாது. சாதாரண முயற்சி இல்லை இந்தப்புத்தகம். உலகத்தில் உள்ள எல்லா தமிழர்களின் வீடுகளிலும் இந்தப் புத்தகம் இருக்க வேண்டும். 

உலக மகா மிகப் பெரிய நடிகன் தமிழ் நாட்டுடைய சொத்து. அவருக்கான சரியான மரியாதையை கொடுக்கவில்லை. அரசும் செய்யவில்லை.

பத்மஸ்ரீ, பத்ம பூஷன் உள்ளிட்ட எந்த விருதும் அவருக்குப் பத்தாது. அவருக்கு ஈடு இணையாக ஒரு பட்டமும் இல்லை.

இனி மேல் அவருக்கு பட்டம் கொடுக்கணும் என்று சொன்னால் ‘சிவாஜி’ என்று தான் கொடுக்க வேண்டும். அப்படிப்பட்ட அற்புதமான கலைஞருடன் நான் இருந்தது மனதுக்கு பெரும் மகிழ்ச்சி. 

நடிகர் திலகம் என்ன கல்லூரியில் படிச்சாரா… அவருக்கு யாராவது கற்றுக் கொடுத்தார்களா. அந்த நவரசத்தை கடவுள் கொடுத்தார்.

எந்த நவரசத்தை எங்கே தொட்டால் பிரதிபலிக்கும் என்பதைக் கண்டு பிடித்தவர் சிவாஜி. அவர் குழந்தை போல. சத்தியமா ஒரு சூதும் அவருக்கு வராது. நடிப்பை தவிர ஒண்ணும் வராது. 

சிவாஜியின் சத்தம் கேட்டு, அவரது வசன உச்சரிப்பை பார்த்து, நடிப்பை பார்த்து சென்னைக்கு வந்தவன் நான். நான் தின்னுகிற சோறு நீ போடுகின்ற சோறு. நீ இல்லைனா நான் சினிமாவுல இல்லை. உன்னை கடந்து எந்த நடிகனும் நடிக்க முடியாது” எனக் கூறினார்.

– நன்றி:  நக்கீரன் இணையதளம்

You might also like