வறுமையிலும் நோ்மையைக் கடைபிடித்த கக்கன்!

தமிழக அரசியல் வரலாற்றில் எளிமை, தூய்மை, நேர்மை உள்ளிட்ட நற்பண்புகளைக் கடைபிடித்து வாழ்ந்த தலைவர்கள் ஒரு சிலரே. அவா்களில் குறிப்பிடத்தக்கவா் கக்கன்.

விடுதலைப் போராட்ட வீரரும், முன்னாள் தமிழக அமைச்சருமான கக்கனின் நினைவு நாளான இன்று அவரைப் பற்றிய மீள்பாா்வை…
***
பால்கனியும் இல்லை. பாதாள அறைகளும் இல்லை. அந்தப் புரத்தில் ஒன்று. இந்தப் புரத்தில் ஒன்று என்று ஊருக்கு ஒரு வீடு இல்லை. இருப்பது ஒரே ஒரு சிறிய ஓட்டு வீடு. கிராமத்தின் மண் மாறாத வீட்டைப்போலவே அந்த வீட்டுக்குரியவரும் எளியவர் தான்.

ஆனால் வலிமையான பல பதவிகளைப் பொறுப்புகளை வகித்தவர்.
வறுமையிலேயே வாழ்ந்தவர்.

அவர் வேறு யாருமல்ல, காமராஜரின் அன்புக்குரியவரான கக்கன் அவர்கள் தான்!
சுதந்திரத்திற்கு முன்பே சட்டமன்ற உறுப்பினர். பிறகு நாடாளுமன்ற உறுப்பினர்.
பத்து ஆண்டுகளுக்கு மேல் பொதுப்பணித்துறை, வேளாண்துறை, உள்துறை போன்ற முக்கியமான இலாகாக்களைக் கைவசம் வைத்திருந்த அமைச்சர் என்று பல முக்கியமான பொறுப்புகளை வகித்தவரின் வீடா இது என்று தற்கால அரசியல்வாதிகளின் திடீர் உயரங்களைப் பார்த்துப்பழகியவர்கள் வியப்படையாமல் இருக்க முடியாது.

மதுரை மாவட்டம். மேலூரிலிருந்து சுமார் எட்டு கி.மீ தூரத்தில் இருக்கிற சிறு கிராமம் தும்பைப்பட்டி. போகிற வழியில் மேலூரில் ராஜீவ்காந்தி திறந்து வைத்த கக்கனின் சிலை.

தும்பைப்பட்டிக்குள் நுழைந்ததும் கக்கனின் நினைவைச் சொல்லும் மணிமண்டபம். 2001-ல் கட்டப்பட்ட மணிமண்டபத்திற்குள் கக்கனின் மார்பளவுச் சிலை.

உள்ளே அவருடைய வாழ்வைச் சொல்லும் புகைப்பட நிழல்கள். நேரு, இந்திரா, காமராஜர் என்று பலருடன் கக்கன் இருக்கும் படங்களில் பெரும்பாலும் புன்னகைத்தபடி தான் இருக்கிறார்.

ஊருக்குள் நகர்ந்தால் தலித் சமூகத்தினர் வாழும் பகுதியில் ஓடு வேய்ந்தபடி இருக்கிறது கக்கன் வாழ்ந்த வீடு. முன்பு கூரை வேய்ந்திருந்த வீட்டை இப்போது ஓட்டு வீடாக மாற்றியிருக்கிறார்கள்.

பெரிய அறையே வீடாக இருந்தால் எப்படியிருக்கும்? அவ்வளவு தான் வீடு.
சுற்றிலும் கக்கனின் சொந்தங்கள் வசிக்கிறார்கள். எல்லாமே சற்றும் பகட்டில்லாத எளிய வீடுகள். கக்கனின் வாழ்வை அவர்களுக்கான வட்டார மொழியில் நம்மிடம் சொல்கிறபோது மலைப்பாக இருக்கிறது.

பள்ளி இறுதியாண்டு வரை படித்த கக்கனின் அப்பா இங்குள்ள வீரகாளியம்மன் கோவிலில் பூசாரி.

சுதந்திரப் போராட்ட வீரரான மதுரை வைத்தியநாத அய்யர் தான் இவருக்கு குரு. மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டிருந்த சாதியினரை அழைத்துக் கொண்டு போன அதே வைத்திய நாதய்யர் தான்.

கோவில் நுழைவுப் போராட்டம் நடந்தபோது அதில் கலந்து கொண்டிருக்கிறார் கக்கன். சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டு பதினெட்டு மாதங்கள் தஞ்சை, அலிப்பூர் சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கிறார்.

எளிமையும், நேர்மையும் இவரையும், காமராஜரையும் ஒன்று சேர்ந்திருக்கின்றன. அவருடைய மனதுக்கு மிக நெருக்கமானவராக இருந்திருக்கிறார் கக்கன்.

காங்கிரஸ் எம்.பி, எம்.எல்ஏ. பதவிகளை வகித்தாலும், காமராஜர் தமிழக முதல்வர் ஆனபோது, அவர் வகிக்க தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித்தலைவர் பதவியில் கக்கனை அமர்த்தினார்.

காங்கிரஸ் அமைச்சரவையில் பொதுப்பணித்துறை, விவசாயத்துறை மட்டுமல்லாமல் பொதுவாக முதல்வர்கள் தன்வசம் வைத்திருக்கிற உள்துறை கக்கன் வசம் இருந்தது அன்றைக்கு அவருக்கு இருந்த மதிப்புக்கான உதாரணங்கள்.

இவர் ஆட்சிப்பொறுப்பில் இருந்தபோது தான் வைகை அணை கட்டுமானப் பணி நடந்திருக்கிறது. காவல்துறையில் முக்கியமான சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

மக்கள் நலனை மட்டுமே முன்னிறுத்திச் செய்யப்பட்ட செயல்பாடுகள் அவை. அவற்றை அவர் ஒருபோதும் விளம்பரப்படுத்திக்கொண்டதும் கிடையாது.
மக்கள் பணியைச் செய்துவிட்டு சராசரி மனிதனைப் போல தன்னுடைய செயல்பாட்டிலிருந்து ஒதுங்கியிருந்தார் என்பது இன்றையப் பார்வையில் எத்துணை அசாதாரணம்!

மக்களுடைய பணத்திலிருந்து தனக்காக எதையும் எடுத்துக் கொள்ளக்கூடாது என்பதில் இறுதிவரை பிடிவாதமாக இருந்திருக்கிறார்.

உள்துறை இவர் வசம் இருந்தபோது இவருடைய தம்பி விஸ்வநாதனுக்கு முறையாகக் கிடைத்த போலீஸ் வேலையைத் தடுத்திருக்கிறார்.

அமைச்சராக இருந்தபோதும் தன்னுடைய மகளை மாநகராட்சி பள்ளியில் படிக்க வைத்திருக்கிறார்.

ஆசிரியையாக இருந்த இவருடைய மனைவியின் சம்பளமே பல சமயங்களில் குடும்பத்திற்கு உதவியிருக்கிறது.

இப்படி நேர்மையாக இருந்தவருக்கும் தண்டனை கொடுத்தார்கள் அவருடைய தொகுதி மக்கள். 1967-ல் நடந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் விருதுநகரில் காமராஜர் தோற்றதைப் போல, தன்னுடைய தொகுதியில் தோற்றுப் போனார் கக்கன்.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக 1972 வரை இருந்தாலும், அடுத்த ஆண்டிலிருந்து அரசியலை விட்டே ஒதுங்கினார்.

பிராமண சமூகத்தைச் சேர்ந்த இவருடைய குருநாதரான மதுரை வைத்திய நாத அய்யர் உயிரிழந்தபோது கக்கனும் ஒரு மகனுக்குரிய சடங்குகளை மொட்டையடித்து நிறைவேற்றினார்.

முதுமையில் முடக்குவாதம் வந்து மதுரையில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்ந்திருந்தார் கக்கன்.

அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மதுரை முத்துவைப் பார்க்க வந்திருந்த முதல்வரான எம்.ஜி.ஆர் கக்கனைப் பார்த்து அதிர்ந்து போய்விட்டார்.
பத்து ஆண்டுகளுக்கு மேல் முக்கிய இலாகாக்களை வகித்த முன்னாள் அமைச்சரான கக்கன் தரையில் படுத்திருந்தது எம்.ஜி.ஆரைக் கலங்கடித்து விட்டது.

மருத்துவமனை நிர்வாகிளை அழைத்துக் கண்டித்துச் சத்தம் போட்டிருக்கிறார் எம்.ஜி.ஆர். அவரைச் சிறப்பு வார்டுக்கு மாற்றச் சொன்னபோது கூட, அந்தச் சலுகையைக் கூடப் பெறக் கூச்சப்பட்டு ”எனக்கு எதுக்குக்கங்கய்யா” என்று அவருக்கான இயல்போடு மறுத்திருக்கிறார் கக்கன்.

அதன்பிறகு 1981-ல் சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கக்கன், நினைவு திரும்பாத நிலையில் 73 வயதில் உயிர் பிரிந்து சென்னை கண்ணம்மா பேட்டை மயானத்தில் எரிக்கப்பட்டார்.

அவருடைய அஸ்தியை எடுத்துவந்து சொந்தக் கிராமத்தில் வைத்திருப்பதைப் பாக்கியமாகச் சொல்கிறார்கள் அவருடைய உறவினர்கள்.

காங்கிரஸின் இளைய தலைவரான ராகுல்காந்தி இந்த ஊருக்கு வந்து கக்கனின் வீட்டுக்குள் நுழைந்து பார்த்து அதிர்ந்து போயிருக்கிறார்.

“இந்தச் சிறு வீட்டிலேயா கக்கன்ஜி வாழ்ந்தார்?’’ என்று ராகுல்காந்தி கேட்டுக்கிட்டிருந்தார்.

“எங்க குடும்பம் அன்னைக்கு இருந்த மாதிரி தான் அப்படியே இருக்கு’’ என்கிறார் தும்பைப்பட்டியில் வசிக்கும் கக்கனின் பேத்தியான சரஸ்வதி.

இன்னொரு உறவினரான சரவணன் கக்கனின் மணிமண்டபத்தில் காப்பாளராக இருக்கிறார்.

அவருக்குக் கிடைக்கும் மாதச் சம்பளம் 1500 ரூபாய். படித்தும் வேலையில்லாமல் இருப்பதை மென்மையாகச் சொல்கிறார் கக்கனின் உறவுக்கார இளைஞரான கல்லாணை.

“தனக்குன்னு எதையும் அவர் சேர்த்துக்கலை.. அது தான் அவரோட குணம்’’ என்று இயல்பாகச் சொல்கிறார் இன்னொரு உறவினரான வெள்ளைச்சாமி.

இங்குள்ள அவருடைய உறவினர்களின் வீடுகள், கக்கனின் மிக எளிமையான வீட்டைப் பார்க்கிறவர்கள் யாரும் இந்தக் கால அரசியலை மனதில் வைத்து ‘பிழைக்கத் தெரியாதவர்’ என்று சுலபமாகச் சொல்லிவிடுவது எளிதான காரியம்.

என்னதான் நேர்மையை மதிப்பதாக நாம் சொன்னாலும், நமக்கு முன்னால் அவர்கள் வாழும்வரை அவர்களுடைய மதிப்பு நமக்குத் தெரிவதில்லை என்பது முகத்தில் அறையும் உண்மை.

அமைச்சர் பதவியும், அதிகாரமும் காற்றில் பறக்கும் சிறகைப் போல இவரைக் கடந்து சென்றிருக்கின்றன. அவற்றோடு இவர் ஒட்டவே இல்லை.

எளிமையாகப் பிறந்து உயர் பதவிகளுக்குச் சென்றபோதும் அதே எளிமையைக் கடைப்பிடித்து இறுதிவரை அந்த எளிமை மாறாமல் வாழ்ந்து மறைந்த கக்கனின் நூற்றாண்டு விழா, சென்னை சத்தியமூர்த்தி பவனில் கொண்டாடப்பட்ட போது வந்திருந்தவர்களின் எண்ணிக்கை பத்துக்குள் தான்.

ஆடம்பரமில்லாத நேர்மைக்கு நாம் எப்போதும் தரும் மதிப்பு இவ்வளவு தான்!

– மணா

You might also like