தாலிபான்களுக்கு உலக நாடுகள் கண்டனம்
ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சி நடந்து வருகிறது. அங்கு பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
ஆப்கானிஸ்தான் உயர்கல்வி அமைச்சகம், பெண்கள் பல்கலைக்கழகங்களில் சேர்ந்து படிக்க இடைக்கால தடை விதித்தது.
தலிபான்களின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு நாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்நிலையில் ஆப்கானிஸ்தானின் நவ்கர்ஹார் பல்கலைக்கழகத்தில் தலிபான்கள் பெண் கல்விக்கு தடை விதித்ததை எதிர்த்து மாணவர்கள் தேர்வு எழுதாமல் புறக்கணித்தனர்.
மேலும் நங்கர்ஹார், காந்தஹாரில் மாணவர்கள் தலிபான்களுக்கு எதிராக பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தலிபான்கள் கடந்த ஆண்டு ஆட்சியை கைப்பற்றியதில் இருந்து இஸ்லாமிய சட்டத்தில் கடுமையான விதிகளை நடைமுறைப்படுத்தி உள்ளனர்.
நடுநிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளில் பெண்கள் கல்வி கற்கவும் தடை விதித்துள்ளனர்.
பெண்கள் வேலைக்கு செல்லவும், பூங்காக்கள், ஜிம்களுக்கு செல்லவும் தடை உள்ளது. பொது இடங்களில் தலை முதல் கால் வரை மூடியபடி ஆடைகள் அணிய உத்தரவிட்டுள்ளனர்.
மேலும் பெண்கள், ஆண்களின் துணை இல்லாமல் வெளியே பயணம் செய்யவும் தடை விதித்து உள்ளனர். இதனால் ஆப்கானிஸ்தானில் பெண்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி உள்ளனர்.