அ.தி.மு.க.வில் மீண்டும் பதவிக்கான அதிகாரப் போட்டி நடந்து கொண்டிருக்கிறது.
”ஒன்று எங்கள் ஜாதியே” என்று பாடிய பொன்மனச் செம்மலை அன்று அ.தி.மு.க.வைத் துவக்க வைத்தவர்கள் அவர் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்த தொண்டர்கள் தான்.
அவர்கள் தான் ஒன்று கூடினார்கள். அங்கங்கே கொடியை வடிவமைத்து ஏற்றினார்கள். கூட்டங்களை நடத்தினார்கள். பொன்மனச் செம்மலைச் சந்தித்து அ.தி.மு.க. என்ற இயக்கத்தைத் துவக்க வைத்தார்கள்.
அப்படித் தான் 1972 ல் தொண்டர்கள் கொடுத்த அழுத்தம் காரணமாகத் துவக்கப்பட்டது தான் அ.தி.மு.க இயக்கம்.
தி.மு.க.வில் இருக்கும் தலைவர்கள் தங்கள் சொத்துக் கணக்கைக் காட்ட வேண்டும் என்று வெளிப்படையாகப் பேசிய எம்.ஜி.ஆர் துவக்கிய அ.தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் மீது அதிகமாகச் சொத்துச் சேர்த்ததாக ஏகப்பட்ட புகார்கள்.
அடுக்கடுக்கான வழக்குகள். கோடநாடு, குட்கா என்று பலதரப்பட்ட குற்றச்சாட்டுகள்.
ஒன்றரைக் கோடித் தொண்டர்களைக் கொண்டிருப்பதாக அடிக்கடி அ.தி.மு.க நிர்வாகிகள் அடிக்கடி ஒரு கணக்கைச் சொல்வார்கள். அந்தத் தொண்டர்கள் – இப்போது யாரை நம்புகிறார்கள்?
யாருடைய தலைமையை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கிறார்கள்?
தன்னை இயக்கம் ஆரம்பிக்க வைத்த தொண்டர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தவர் எம்.ஜி.ஆர்.
பொதுச்செயலாளராக யார் அ.தி.மு.க.வில் இருக்க வேண்டும் என்பதைக் கூடத் தொண்டர்கள் தான் தேர்வு செய்ய வேண்டும் என்று கழகச் சட்டவிதியை உருவாக்கும் அளவுக்கு அவர்களுக்கு மதிப்புக் கொடுத்தார்.
அவருடைய இறுதிக்காலத்தில் மதுரையில் நடந்த மன்ற மாநாட்டில் கூடத் தனது தொண்டர்களின் பாதுகாப்பு குறித்துப் பேசியவர் எம்.ஜி.ஆர்.
அவர்கள் தான் இயக்கத்தின் வேர் என்று உணர்ந்திருந்தவர் எம்.ஜி.ஆர்.
ஆனால் இன்று அந்தத் தொண்டர்களுக்கு அதே இயக்கத்தில் மதிப்புத் தரப்படுகிறதா?
தங்கள் மீது சுமத்தப்பட்டிருக்கிற வழக்குகள், குற்றச்சாட்டிலிருந்து எப்படிப் பாதுகாப்பாகத் தப்பிக்கலாம் என்பதில் காட்டும் அக்கறையை எந்தத் தலைவர்களாவது தொண்டர்கள் மீது காட்டியிருக்கிறார்களா?
பணம் கொடுத்துக் கூட்டம் கூட்டி அதைத் தனக்கான ஆதரவுக் கூட்டமாகக் காட்டிக் கொண்டவர் அல்ல பொன்மனச் செம்மல். அவருக்கென்று இயல்பானபடி கூட்டம் சேர்ந்தது. அவருடைய தலைமையை, இயக்கத்தை, அவருடைய இயக்கச் சின்னத்தைக் கொண்டாடினார்கள்.
உடல்நலம் பாதிக்கப்பட்டு வெளிநாட்டில் சிகிச்சையில் இருந்தபடியே ஆண்டிப்பட்டிச் சட்டமன்றத் தொகுதியில் எம்.ஜி.ஆர் போட்டியிட்டபோது, அவருக்கு அமோக வெற்றியைக் கொடுத்தவர்கள் அவருடைய தொண்டர்களும், ஆதரவான வாக்காளர்களும் தான்.
இது தான் ஒரு இயக்கத்தின் அசலான பலம்.
இது தான் எம்.ஜி.ஆரைத் தொடர்ந்து ஆட்சிப்பொறுப்பில் இருக்க வைத்தது.
அ.தி.மு.க இயக்கத்தின் தலைமைப் பொறுப்பிலும் வைத்திருந்தது.
இந்தப் பலம் இன்றைக்கு யாருக்கு இருக்கிறது?
இன்று அதே இயக்கத்தில் என்ன நடக்கிறது? தற்போது நான்கு அணிகளாகப் பிரிந்து தங்களைப் பலம் பொருந்தியவர்களாக, தங்களுக்குத் தான் தொண்டர்களின் பலமான ஆதரவு இருப்பதாகக் காட்டிக் கொள்ள முனைந்து கொண்டிருக்கிறார்கள் நான்கு அணிகளைச் சேர்ந்தவர்களும்.
பொதுக்குழு என்கிற பெயரில் கூட்டம் கூட்டுகிறார்கள். மாவட்டச் செயலாளர்கள் என்கிற பெயரில் கூட்டங்களை நடத்துகிறார்கள்.
குறிப்பாக பா.ஜ.க.வுக்கு முன்னால் தங்களுக்கே அதிகமான ஆதரவு இருக்கிறது என்று பலத்தைக் காட்ட முனைந்திருக்கிறார்கள்.
அதே சமயம் தங்களையும், தங்களுடைய குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் எந்த வழக்கிலும் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்கிற கவனமே அவர்களுக்குப் பிரதானமாக இருக்கிறது. அந்த அளவுக்கு அவர்களைச் சுற்றியிருக்கின்றன ரெய்டு குறித்த செய்திகள்.
இதையும் மீறி இவர்கள் ஒன்றிணைந்து அ.தி.மு.க என்கிற இயக்கத்தை வலுப்படுத்த வேண்டும். இரட்டை இலைச்சின்னத்தை யாரும் முடக்க வழி வகுத்துவிடக்கூடாது என்கிற எண்ணம் ஒவ்வொரு அ.தி.மு.க தொண்டருக்கும் இருக்கிறது.
தங்களைப் பிரிக்க நினைப்பவர்களுக்கு எந்த அணியைச் சேர்ந்தவர்களும் துணை போய்விடக்கூடாது என்பது தான் பரவலாக அவர்களுடைய எண்ணமாக இருக்கிறது.
அதற்குத் தங்களை வளர்த்த இயக்கத்தின் எதிர்காலம் குறித்து இன்று பிரிந்து நிற்கிறவர்கள் யோசிக்க வேண்டும்.
ஆனால் இன்றைக்கு அணி பிரிந்திருப்பவர்கள் அப்படிப்பட்ட எண்ணத்தில் இருக்கிறார்களா?
நாளை – என்பதைப் பற்றியும் அவர்கள் யோசிக்கவில்லை. அ.தி.மு.க. என்கிற இயக்கத்தைத் தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கும் தொண்டர்களைப் பற்றியும் கவலைப் படவில்லை.
ஒன்றை மட்டும் உணர்ந்து கொண்டால் போதும். தங்களைப் பொருட்படுத்தாதவர்களைத் தொண்டர்களும் பொருட்படுத்த மாட்டார்கள்.
-யூகி