முன்னாள் குடியரசுத் தலைவரின் இன்னொரு முகம்!

வராலாறு என்றாலே இன்று அறிந்து கொள்ளும் புது தகவலை பற்றிய ஏக்கத்தை தரக்கூடியது தான் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

இன்று நாம் நினைவில் கொள்ள இருப்பது இந்தியாவின் முதல் பெண் குடியரசுத் தலைவரை பற்றியது, வாருங்கள் அறிந்து கொள்ளலாம்.

இந்தியாவின் அரசின் மிக உயரிய பதவியும், நாட்டின் முதல் குடிமகனுமான குடியரசுத் தலைவர் பதவியை முதல் பெண்மணியும் இந்தியாவின் பனிரெண்டாம் ஜனாதிபதியாக அலங்கரித்தவர் திருமதி. பிரதிபா தேவிசிங்க் பாட்டில் அவர்கள் ஆவார்.

இவர் அடிப்படையில், தொழில்ரீதியாக ஒரு வழக்கறிஞராக பணிபுரிந்தார். பின், ராஜஸ்தான் மாநில ஆளுநர் பதவியிலும் இவர் பணிபுரிந்திருக்கிறார்.

துணை கல்வியமைச்சர், சமூக நலத்துறை அமைச்சர், சுற்றுலாத்துறை அமைச்சர், வீட்டுவசதித் துறை அமைச்சர் போன்று பல்வேறு அமைச்சர் பதவிகளிலும் இவர் பணிபுரிந்திருக்கிறார்.

இவர் பதவி வகித்த ஒவ்வொரு அமைச்சர் பதவிகளில் தன்னுடைய முழு துணிச்சலையுயும், ராஜ தந்திரத்தையும் கொண்டு விளங்கியதால், திருமதி. பிரதிபாதேவி பாட்டில் அவர்கள் இந்திய குடியரசுத் தலைவர் பதவியில் நியமிக்கப்பட்டார் என்பதற்கான சிறந்த காரணமாக கூறலாம்.

பிறப்பு:

இவர், மகாராஷ்டிரா மாநிலம், ஜல்கோன் மாவட்டத்தில் போட்வத் வட்டத்திலுள்ள நத்கோன் என்ற கிராமத்தில் டிசம்பர் மாதம் 19, 1934 ஆம் ஆண்டில் பிறந்தார். இவரது தந்தை பெயர் நாராயண் ராவ் ஆவார். இவர் ஒரு உள்ளூர் அரசியல்வாதி ஆவார்.

கல்வி:

இவர் தனது முதன்மைக் கல்வியை, ஜல்கோனிலிருக்கும் ஆர்.ஆர். வித்யாலயா என்ற பள்ளியிலும், பின் மும்பையிலுள்ள அரசு சட்டக் கல்லூரியில் சேர்ந்து சட்டத்தில் இளங்கலைப் பட்டம் வென்றார்.

மேலும், இவர் ஜல்கோனிலிருக்கும் மூல்ஜி ஜேதா கல்லூரியில், அரசியல் அறிவியல் மற்றும் பொருளாதாரத்தில் தனது முதுகலைப் பட்டத்தைத் முடித்தார். தனது கல்லூரி நாட்களில், விளையாட்டுத் துறையில் அதிலும் குறிப்பாக டேபிள் டென்னிஸில் சிறந்து விளங்கினார்.

பின்னர், 1962ம் ஆண்டு , எம்.ஜே. கல்லூரியின் ‘கல்லூரி ராணி’ என்ற பட்டத்தையும் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

மன வாழ்க்கை:

ஜூலை மாதம் 7ம் தேதி 1965 ஆம் ஆண்டு, டாக்டர் தேவிசிங் ராம்சிங் ஷெகாவத் என்பவரை திருமணம் செய்து கொண்டார் பிரதீபா. இந்த தம்பதிகளுக்கு ராஜேந்திர சிங் என்ற ஒரு மகனும், ஜோதி ரத்தோர் என்ற ஒரு மகளும் உள்ளனர்.

அலங்கரித்த பதவிகள்:

ஜல்கோன் மாவட்ட நீதிமன்றத்தில் ஒரு பயிற்சி வழக்கறிஞராக தனது வாழ்க்கையைத் துவங்கினார். பின் தனது, 27ம் அகவையில், ஜல்கோன் சட்டமன்ற தொகுதியிலிருந்து, மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மேலும், தொடர்ச்சியாக நான்கு ஆண்டுகள், அவர் எட்லாபாத் என்ற தொகுதியில் இருந்து சட்ட மன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1967 ஆம் ஆண்டு முதல் 1972 ஆம் ஆண்டு வரை, கல்வித் துறை, பொது சுகாதாரத்துறை, சுற்றுலாத்துறை, பாராளுமன்ற விவகாரத் துறை போன்ற பல அமைச்சர் பதவிகளிலும் அழங்கரித்தார். மேலும் இவர், மகாராஷ்டிரா மாநில சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராகவும் பணியாற்றினார்.

இவர் நவம்பர் மாதம் 8ம் தேதி 2004 அன்று ராஜஸ்தான் மாநில ஆளுநராகப் பொறுப்பேற்று, ஜூன் மாதம் 2007 வரை அப்பதவியில் இருந்தார். பின் அவர், ஜூலை மாதம் 25ம் தேதி 2007 ஆம் ஆண்டு, இவர் இந்திய நாட்டின் 12 வது குடியரசு தலைவராகப் பதவியேற்றார்.

இந்த குடியரசு தலைவர் தேர்தலில், இவரை எதிர்த்துப் போட்டியிட்ட பைரோன் சிங் ஷெகாவத்தை 300,000க்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றார்.

செய்த சாதனைகள்:

இவர், இந்தியாவின் வளர்ச்சிக்காக முக்கிய பங்கு வகித்தார். மேலும் இவர், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலனுக்காகவும், சமுதாயத்தில் ஒதுக்கப்பட்டோரின் நலனுக்காகவும் அரும் பாடுபட்டார்.

தற்போதும் இவர், பல்வேறு நிறுவனங்கள் அமைத்து, அதன் மூலம் சிறப்பான சேவையை செய்து வருகிறார்.

இவர் அமராவதி மாவட்டத்தில், பார்வையற்ற குழந்தைகளின் நலனுக்காக ஜல்கோனில் ஒரு தொழில்துறைப் பயிற்சிப் பள்ளியையும், விமுக்தா ஜடிஸ் என்ற நாடோடி பழங்குடியினரின் ஏழை குழந்தைகள் மற்றும் பின்தங்கிய வகுப்பு குழந்தைகள் கல்வி கற்க, பள்ளிகளை அமைத்துக் கொடுத்தார். அதோடு, மகாராஷ்டிரா மாநிலம் அமராவதியில், ‘கிருஷி விக்யான் கேந்திரா’ என்ற விவசாயிகளின் பயிற்சி மையத்தையும் உருவாக்கினார்.

மும்பை மற்றும் டில்லியில், பணிபுரியும் பெண்களுக்காக விடுதிகளும், கிராமப்புற இளைஞர்களுக்காக தனது சொந்த மாவட்டமான ஜல்கானில் ஒரு பொறியியல் கல்லூரியும் நிறுவினார்.

‘ஷ்ரம் சாதனா டிரஸ்ட்’ என்ற ஒரு அமைப்பையும் நிறுவி இந்த அமைப்பின் மூலம், மகாராஷ்டிராவில், அமராவதியிலுள்ள ஏழை மற்றும் தேவைமிகுந்த பெண்களுக்கு இசை, கணினி மற்றும் தையல் வகுப்புகளுக்கும் ஏற்பாடு செய்தார். இது இவரின் சாதனைகளில் சில.

இப்படிப் பல்வேறு பொதுச் சேவைகளைத் தொடர்ந்து செய்து கொண்டு பிரதீபாவின் பிறந்த நாளில் அவரை போற்றுவோம்.

-நன்றி: முகநூல் பதிவு

You might also like